வெளியிடப்பட்ட நேரம்: 15:30 (12/09/2018)

கடைசி தொடர்பு:15:30 (12/09/2018)

``வாராக் கடன்களுக்குப் பொறுப்பேற்று மோடி பதவி விலக வேண்டும்” - திருமாவளவன் அதிரடி!

``தேசிய வங்கிகளில் உள்ள வாராக் கடன்களுக்குப் பொறுப்பேற்று மோடி பதவி விலக வேண்டும்” என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

திருமாவளவன்

நெய்வேலியில் தனது ஆதரவாளர் ஒருவரின் இல்லத் திருமணத்துக்குச் செல்லும் வழியில் புதுச்சேரி தனியார் ஓட்டல் ஒன்றில் செய்தியாளர்களைச் சந்தித்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், ``ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் உள்ளவர்களை விடுதலை செய்வதில் ஏற்கெனவே காலதாமதமாகி விட்டது. அதனால் தமிழக ஆளுநர் இனியும் காலம் தாழ்த்தாமல் அவர்களை விடுதலை செய்ய  உத்தரவிட வேண்டும். தேசிய வங்கிகளில் 12 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு வாராக் கடன்கள் உள்ளன. திட்டமிட்டும், வங்கியை ஏமாற்றும் நோக்கிலும் நடந்துள்ள மோசடியின் விசாரணை அறிக்கை பிரதமர் அலுவலகத்தில் உள்ளது. அதன் மீது நடவடிக்கை எடுக்காத பிரதமர் மோடி பதவி விலக வேண்டும்.

எழுத்தாளர் கௌரி லங்கேஷுக்கு அடுத்து கொலை செய்யப்படவுள்ளவர்களின் பட்டியலில் ரவிக்குமார் பெயரும் உள்ளதைக் கருத்தில் கொண்டு புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி பாதுகாப்பு கொடுத்துள்ளார். விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பாக முதல்வர் நாராயணசாமிக்கு நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம். தமிழகப் பகுதிகளுக்கும் ரவிக்குமார் சென்று அரசியல் பணியாற்ற இருப்பதால் அங்கும் அவருக்கான பாதுகாப்பை நீட்டிக்க வேண்டும். தமிழக அரசும் அவருக்குப் பாதுகாப்பு வழங்க வேண்டும் என ஏற்கெனவே வலியுறுத்தியுள்ளோம். தேவைப்பட்டால் மீண்டும் தமிழக அரசுக்குக் கடிதம் அளிக்கப்படும். தமிழகத்தைப் போல புதுச்சேரியிலும் 10 ஆண்டுகளுக்கு மேலாகச் சிறையில் உள்ளவர்களை நன்னடத்தை அடிப்படையில் விடுதலை செய்ய வேண்டும்” என்று தெரிவித்தார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க