45 உயிரைக் காப்பாற்றி விட்டு தன் உயிரைத் துறந்த அரசுப் பேருந்து டிரைவர்...!

டிரைவர் கிருஷ்ண சுந்தரானந்தம்

உயிர் பிரியும் நிலையிலும் 45 பேர் உயிர்களைக் காப்பாற்றி விட்டு தன் உயிரைத் துறந்திருக்கிறார் ஓர் அரசுப் பேருந்து ஓட்டுநர். அந்த பஸ்ஸில் இருந்த பலரும் அவரின் உடலைப் பார்த்து தாரை தாரையாக கண்ணீர் வடித்துக் கதறி அழுத சம்பவம் அனைவரையும் உருக்குலைய வைத்தது.

விழுப்புரம் டிப்போவைச் சேர்ந்த ஓர் அரசுப் பேருந்து ஒன்று நேற்று காலை சேலம் புதிய பேருந்து நிலையத்திலிருந்து புதுச்சேரிக்குப் புறப்பட்டுச் சென்றது. அந்த வண்டியை கள்ளக்குறிச்சி தியாகத் துருவத்தைச் சேர்ந்த கிருஷ்ணசுந்தரானந்தம் ஓட்டிச் சென்றார். அவருடைய வயது 38. அந்த வாகனத்தில் 45 பயணிகள் அமர்ந்திருந்தார்கள். சேலம் பொன்னம்மாபேட்டை அருகே செல்லும் போது டிரைவர் கிருஷ்ணசுந்தரானந்தத்துக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது.

அலறித் துடித்து கத்தியவர் சாமர்த்தியமாக வாகனத்தை ஓரமாக நிறுத்தி விட்டு ஸ்டேரிங் மீது சாய்ந்து உயிர் நீர்த்தார். உடனே கண்டக்டரும், பயணிகளும் ஓடிப் போய் ஓட்டுநரைப் பார்த்த போது பேச்சு மூச்சு இல்லாமல் இருந்துள்ளார். உடனே ஆம்புலன்ஸ் வரவழைத்து பொன்னம்மாபேட்டை பழனியாண்டி மருத்துவமனைக்குக் கொண்டு சென்றார்கள். அங்கிருந்த மருத்துவர்கள் ஏற்கெனவே இறந்து விட்டார் என்று கூறியதை அடுத்து அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றார்கள்.

அந்த வாகனத்தில் இருந்த பயணிகள் கண்ணீரோடு, ``எங்க உயிரைக் காப்பாற்றி விட்டு அவர் உயிர் விட்டிருக்கிறார். அவருடைய ஆன்மா நிச்சயம் இறைவனிடம் சேரும். அவருடைய குடும்பத்தினர் நீண்ட ஆயுள் பெற்று நல்லா இருக்கணும்'' என்று கண்ணீர் விட்டார்கள். மரணமடைந்த டிரைவர் கிருஷ்ணசுந்தரானந்தத்தின் அண்ணனிடம் பேசிய போது, ``என் தம்பி வாழும் போதும் பலருக்கு உதவி செய்தார். இறக்கும் போது கூடப் பல உயிர்களைக் காப்பாற்றி விட்டு இறந்திருக்கிறார். தம்பியின் மனைவி பெயர் மதுராம்பாள். அவர்களுக்குப் பவன் என்ற 7 வயது மகனும், இலக்கியா என்ற 4 வயது மகளும், விஸ்வா என்ற 1 1/2 வயது மகனும் இருக்கிறார்கள். எல்லோரும் சின்னக் குழந்தைகள். இந்த வருமானத்தை வைத்துத்தான் வாழ்ந்து வந்தார்கள். அரசு கருணை உள்ளத்தோடு எங்க தம்பியின் குடும்பத்துக்கு உதவி செய்ய வேண்டும்'' என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!