வெளியிடப்பட்ட நேரம்: 16:45 (12/09/2018)

கடைசி தொடர்பு:16:45 (12/09/2018)

அரசுக் குடியிருப்பைக் குறிவைத்த கொள்ளையர்கள்!- நகைகளை இழந்துவாடும் அரசு அதிகாரி

ரசு அதிகாரிகள் வசிக்கும் லாயிட்ஸ் காலனி குடியிருப்பில் தொடர் கொள்ளை நடப்பதால் அதிர்ச்சியடைந்துள்ளனர் பொதுமக்கள். `கொள்ளை தொடர்பாக புகார் அளித்தாலும் காவல்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பதில்லை' என வேதனைப்படுகின்றனர் குடியிருப்புவாசிகள். 

கொள்ளை

சென்னை, ராயப்பேட்டையில் அமைந்துள்ளது லாயிட்ஸ் காலனி. இங்குள்ள நூற்றுக்கணக்கான குடியிருப்புகளில் அரசு அதிகாரிகளும் அரசியல் பிரமுகர்களும் வசித்து வருகின்றனர். இந்த வளாகத்தில் சி.சி.டி.வி கேமராக்கள் இல்லாததால், அடிக்கடி திருட்டுச் சம்பவங்கள் அரங்கேறுகின்றன. இதுதொடர்பாக நம்மிடம் வேதனையோடு பேசத் தொடங்கினார் அரசுத் துறை உயர் அதிகாரி அண்ணாதுரை. இவர் செய்தி மக்கள் தொடர்புத் துறையில் உதவி இயக்குநராகப் பணிபுரிந்து வருகிறார். இவரது வீட்டில் 22 சவரன் நகையைக் கொள்ளையடித்துள்ளனர். அவர் நம்மிடம் பேசும்போது, ``கொள்ளைச் சம்பவம் நடந்த அன்று (06-05-2018) நாங்கள் வீட்டில் இல்லை. இரவு ஹோட்டலில் உணவு அருந்திவிட்டு, அருகில் இருக்கும் உறவினர் வீட்டுக்குச் சென்று விட்டோம். மறுநாள் காலையில் எங்கள் பக்கத்து வீட்டுக்காரர் செல்போனில் என்னைத் தொடர்பு கொண்டு, உங்கள் வீட்டில் கொள்ளை நடந்துள்ளது என்றார். அதிர்ச்சியோடு காலனிக்குள் அண்ணாதுரைநுழையும்போது, போலீஸாரும் அங்கு வந்துவிட்டனர். வீட்டின் கதவை உடைத்து, 22 சவரன் நகையைக் கொள்ளையடித்துச் சென்றுவிட்டனர். 

உடனே, இந்தக் கொள்ளைச் சம்பவம் தொடர்பாக ஐஸ் ஹவுஸ் காவல்நிலையத்தில் புகார் அளித்தேன். என்னுடைய புகாரின் மீது, இதுவரையில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதுதொடர்பாக பல்வேறு உயர் அதிகாரிகளைச் சந்தித்து முறையிட்டுவிட்டேன். ஆனாலும், வழக்கில் எந்தவித முன்னேற்றமும் இல்லை. இந்தச் சம்பவம் நடைபெறுவதற்கு முன்னர், அதே குடியிருப்பில் பல்வேறு வழிப்பறிச் சம்பவங்களும் நடந்துள்ளன. அதற்கும் போலீஸார் எந்த நடவடிக்கையும் எடுத்ததுபோலத் தெரியவில்லை. என்னுடைய வீட்டில் நடந்த கொள்ளை தொடர்பாக, தலைமைச் செயலக அதிகாரிகளும் காவல்துறை அதிகாரிகளிடம் பேசினர். ஆனாலும், இந்தச் சம்பவத்தில் யாரும் கைது செய்யப்படவில்லை. இந்தக் காலனியில் சி.சி.டி.சி கேமராக்களும் இல்லை. காலனியின் வெளியே சாலையைப் பார்த்தபடியேதான் ஒரு சி.சி.டி.வி கேமரா உள்ளது. 

இந்தச் சம்பவம் தொடர்பாக நான் புகார் அளித்தபோது, பணியில் இருந்த காவல் ஆய்வாளர் இப்போது அங்கு இல்லை. கடந்த சில மாதங்களாக ஐஸ் ஹவுஸ் காவல்நிலையத்தில் ஆய்வாளரே நியமிக்கப்படவில்லை. நகரின் முக்கியக் காவல்நிலையங்களில் இதுவும் ஒன்று. இத்தனை ஆண்டுகாலம் மிகவும் கஷ்டப்பட்டு சேர்த்த நகையை, ஒரே இரவில் களவாடிவிட்டுப் போய்விட்டனர். கொள்ளைச் சம்பவத்தைவிட காவல்துறை அதிகாரிகள் நடந்துகொள்ளும்விதம்தான் வேதனையை அளிக்கிறது" என்றார் கவலையுடன்.