`ஆணுக்கும் ஆணுக்கும் கல்யாணமா... காட்டுமிராண்டித்தனம்!' - துரைமுருகன்

தன்பாலின திருமணம் செய்து கொள்வது காட்டுமிராண்டித்தனமான செயல் என தி.மு.க பொருளாளர் துரைமுருகன் காட்டமாகத் தெரிவித்தார்.

துரைமுருகன்

நெல்லை மாவட்டம் தென்காசியில் முன்னாள் நகர்மன்றத் தலைவர் கோமதிநாயகம் இல்ல திருமண நிகழ்ச்சியில் தி.மு.க பொருளாளர் துரைமுருகன் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், ``ஆணுக்கும் ஆணுக்கும் திருமணம் செய்வது அல்லது பெண்ணுக்கும் பெண்ணுக்கும் திருமணம் செய்வதற்கு உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கித் தீர்ப்பளித்துள்ளது. வயது வந்த இருவரின் விருப்ப அடிப்படையிலான தன்பாலின உறவு குற்றமல்ல என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. 

ஆனால், ஆணுக்கும் ஆணுக்கும் இடையே திருமணம் செய்து கொள்வது காட்டுமிராண்டித்தனமானது. நமது கலாசாரத்துக்கு விரோதமானது. இந்த காட்டுமிராண்டித்தனத்துக்குச் சட்டமும் மேலும் சிலரும் துணைபோகிறார்கள். பொதுவாக இளைஞர்கள் குடும்ப வாழ்க்கையில் விட்டுக் கொடுத்துச் செல்ல வேண்டும். மணமக்கள் நகமும் சதையுமாக இருக்க வேண்டும். ஆனால், குழம்பில் உப்பு இல்லாத பிரச்னைக்குக் கூட விவாகரத்துக் கேட்டு கோர்ட்டுக்குச் செல்லும் நிலைமை இருக்கிறது. அதனால் இளைய சமுதாயம் கவனமாக இருக்க வேண்டும்’ எனப் பேசினார். 

கனிமொழி

தன்பாலின திருமணத்தை வரவேற்கும் வகையில் தீர்ப்பு வெளியான செப்டம்பர் 6-ம் தேதி மாநிலங்களவை உறுப்பினரும் தி.மு.க மகளிரணிச் செயலாளருமான கனிமொழி அதனை வரவேற்று கருத்து தெரிவித்திருந்தார். அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், `நமது வாழ்க்கையின் தனிப்பட்ட தேர்வுகளையும் முடிவுகளையும் சட்டம் தீர்மானிக்கக் கூடாது. உச்சநீதிமன்றத்துக்கு வாழ்த்துகள்’ எனப் பதிவிட்டிருந்தார். 

ஆனால், தி.மு.க பொருளாளரான துரைமுருகன், இந்தத் தீர்ப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து கருத்துக் கூறியிருக்கிறார். ஒரே கருத்துக்காக தி.மு.க-வில் எதிரெதிர் குரல் வெளிப்பட்டிருப்பது தி.மு.க-வினரிடம் குழப்பத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அதனால், இந்த விவகாரத்தில் தி.மு.க-வின் நிலைப்பாடு என்ன என்பதைத் தொண்டர்களுக்கு விளக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கிறது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!