வெளியிடப்பட்ட நேரம்: 17:15 (12/09/2018)

கடைசி தொடர்பு:17:15 (12/09/2018)

`ஜெயலலிதாவுக்கு பாரத ரத்னா வழங்குங்கள்'- பிரதமருக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்

`சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு எம்.ஜி.ஆர் பெயரைச் சூட்டவேண்டும்' என்ற கோரிக்கையை வலியுறுத்தி பிரதமர் நரேந்திர மோடிக்கு, முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். 

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி

சென்னைத் தலைமைச் செயலகத்தில்,தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் கடந்த 9-ம் தேதி அமைச்சரவைக் கூட்டம் கூடியது. இதில், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் உள்ளிட்ட அமைச்சர்கள் கலந்துகொண்டனர். இந்தக் கூட்டத்தில், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிப்பது தொடர்பாக விவாதிக்கப்பட்டது. 2 மணி நேரமாக நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதன்படி, ராஜீவ் கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என ஆளுநருக்குப் பரிந்துரைக்க அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

அதோடு, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு எம்.ஜி.ஆரின் பெயரைச் சூட்ட மத்திய அரசுக்குப் பரிந்துரை செய்வது தொடர்பாகவும் அமைச்சரவையில் முடிவு எடுக்கப்பட்டது. மறைந்த முதல்வர்கள் அண்ணா, ஜெயலலிதா ஆகியோருக்கு பாரத ரத்னா விருது வழங்கவும் மத்திய அரசுக்கு மாநில அரசு ஏற்கெனவே பரிந்துரை செய்த நிலையில், அதை மீண்டும் வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

இந்த நிலையில், அமைச்சரவைக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு இன்று கடிதம் எழுதியுள்ளார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. அந்தக் கடிதத்தில், `தமிழகத்தின் முன்னாள் முதல்வர்களான அறிஞர் அண்ணா, ஜெயலலிதா ஆகியோருக்கு, நாட்டின் உயரிய விருதாகக் கருதப்படும் பாரத ரத்னா விருது வழங்கப்பட வேண்டும். சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் பெயரைச் சூட்ட வேண்டும்' என்று குறிப்பிட்டுள்ளார்.