எந்தெந்தப் பகுதி... எத்தனை மணி நேரம்... உணவகங்களுக்கு நிபந்தனை விதிக்க உத்தரவு! | Madras HC order to greater chennai corporation over hotel's timing

வெளியிடப்பட்ட நேரம்: 18:40 (12/09/2018)

கடைசி தொடர்பு:18:40 (12/09/2018)

எந்தெந்தப் பகுதி... எத்தனை மணி நேரம்... உணவகங்களுக்கு நிபந்தனை விதிக்க உத்தரவு!

சென்னையில் எந்தெந்தப் பகுதிகளில் எத்தனை மணி நேரம் கடைகள் திறந்திருக்கவேண்டும் என்பது குறித்த நிபந்தனைகளை உருவாக்குமாறு சென்னை உயர்நீதிமன்றம் மாநகராட்சிக்கு அறிவுறுத்தியுள்ளது. 

சென்னை உயர்நீதிமன்றம்


சென்னையைச் சேர்ந்த கணேஷ் பிரபு என்பவர், உணவகம் ஒன்றுக்கு இரவு 10 மணி அளவில் உணவருந்தச் செல்லும்போது, காவல்துறை உணகத்தை மூடச் சொன்னார்கள் என்று கூறி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அதில் சட்டம்- ஒழுங்கு பாதிப்பு ஏற்பட்டால் மட்டுமே காவல்துறை தலையிட்டு கடைகளை மூடவேண்டும். ஆனால் உணவகங்கள் அனைத்தும் மாநகராட்சி கட்டுப்பாட்டில் வருகிறது. உணவகங்கள் திறக்கும் மற்றும் மூடும் நேரம் குறித்த வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்க வேண்டும் எனக் கோரியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி மணிகுமார், சுப்பிரமணிய பிரசாத் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கில் மாநகராட்சி ஆணையரை எதிர் மனுதாரராக சேர்க்க உத்தரவிட்டு, சென்னையில் எந்தெந்தப் பகுதியில் எத்தனை மணிநேரம் கடைகள் திறந்திருக்கவேண்டும் என்பது குறித்த நிபந்தனைகளை உருவாக்கவேண்டும் என அறிவுறுத்தி, வழக்கை அக்டோபர் 3-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.