``ஒலி வீடுகள், வற்றாத சுனை, மலை உடைச்சான்!” - தமிழகத்தின் அறியப்படாத மலை `புள்ளமுழுங்கி’ | Undiscovered treasure of Tamil nadu - the story of Pullamuzhungi

வெளியிடப்பட்ட நேரம்: 20:36 (12/09/2018)

கடைசி தொடர்பு:20:36 (12/09/2018)

``ஒலி வீடுகள், வற்றாத சுனை, மலை உடைச்சான்!” - தமிழகத்தின் அறியப்படாத மலை `புள்ளமுழுங்கி’

"இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி எங்கெங்கோ அலைகின்றார் ஞானத் தங்கமே..' என்று குரலெடுத்துப் பாடத் தோன்றுகிறது புள்ளமுழுங்கி மலையைப் பார்த்து ரசித்த பிறகு. காரணம், கரூர் மக்கள், `எங்க மாவட்டத்துல சுற்றுலாத் தலமே இல்லை' என்று மூக்கைச் சிந்துவதுதான். அவர்கள் இன்னும் புள்ளமுழுங்கி மலைக்குச் செல்லாதவர்கள் என்று அர்த்தம்.  

புள்ளமுழுங்கி

கரூர் மாவட்டம், கடவூர் ஒன்றியத்தில் அமைந்திருக்கிறது புள்ளமுழுங்கி மலை. இந்த மலையைச் சுற்றி `பாலைவன வறட்சி' நிலவினாலும் மலைக்குள்ளிருந்து 365 நாள்களும் வற்றாத சுனை ஒன்று தண்ணீரைத் தந்துகொண்டிருக்கிறது. எங்கும் அதிகம் இல்லாத தேவாங்கு, சிவப்பு கலரில் ஓணான் போல இருக்கும் மலை உடைச்சான் (மலையையே கொஞ்சம் கொஞ்சமாக உடைக்கும் திறன் பெற்றதாம்) போன்ற விநோத உயிரிகள், கடவூர் ஜமீன் வேட்டையாட அந்தச் சுனை அருகே அமைத்த ஒலி வீடுகள் (கட்டபொம்மனின் தம்பி ஊமைதுரை கடவூர் ஜமீன் பாதுகாப்பில் இந்த ஒலி வீடுகளில் கொஞ்சகாலம் மறைத்து வைக்கப்பட்டாராம்) என்று இந்தப் புள்ள முழுங்கி மலை ஓர் ஆகப்பெரும் ஜில் அனுபவங்களை அள்ளித் தரும் சுற்றுலாத் தலமாக நமக்குத் தோன்றியது. ஆனால், கடவூரைத் தாண்டி கரூர்வாசிகள் பலருக்கும் இந்தப் புள்ளமுழுங்கி மலையில் உள்ள மகத்துவங்கள் பற்றி அதிகம் தெரியவில்லை.

ஒலி வீடுகள்

``அதனால்தான், பல வருஷமாக இந்தப் புள்ளமுழுங்கி மலையில் உள்ள இந்த வாழறும்பு சுனையை சுற்றுலாத் தலமாக அறிவிக்கச் சொல்லி அரசிடம் தொடர் கோரிக்கை வெச்சுக்கிட்டு வர்றோம். எந்த அரசும் அதைச் செய்யலை" என்று குறைபட்டுக் கொள்கிறார்கள் அந்த மலைக்கு அடிவாரத்தில் உள்ள வலையப்பட்டி கிராம மக்கள். 

கரூர் மாவட்டம் தமிழகத்தின் மையப் பகுதியில் உள்ளது. காவிரி, அமராவதி, நொய்யல், நங்காஞ்சி போன்ற ஆறுகள் பாய்ந்தாலும், மாவட்டத்தில் 60 சதவிகித பகுதிகள் வறட்சி மிகுந்த மானாவாரி நிலங்கள் நிறைந்தவைதாம். அதுவும் மாவட்டத்தின் கடைக்கோடி எல்லைப்பகுதியான கடவூர் பகுதியே வறட்சியின் கோரத்தாண்டவம் நிகழும் பகுதியாக உள்ளது. கருவேலம் மரங்கள் அதிகம் காணப்படுகின்றன. அப்படிப்பட்ட பகுதியில்தான் காம்பஸ் வைத்து வட்டம் போட்டதுபோல இயற்கையே வட்ட வடிவில் இடைவெளி விட்டு பல மலைகளை அமைத்துள்ளது. அவற்றில் ஒரு மலைதான் இந்தப் புள்ளமுழுங்கி மலை. கரூரில் சுற்றுலாத் தலம் என்பதே இல்லை. `சுற்றுலாத் தலம் இல்லாத கரூரில் மாயனூர் அருகே காவிரிக் கரையோரம் அம்மா பூங்காவை அமைக்கிறோம்' என்று ஒரு வருடத்துக்கு முன்பு அரசு சார்பில் பூங்கா ஒன்று அமைக்கப்பட்டது. ஆனால், இந்தப் புள்ளமுழுங்கி மலையைப் பார்த்த பிறகு, அரசு ஏன் இந்த மலைப்பகுதியைச் சுற்றுலா தலமாக அறிவிக்கத் தயங்குகிறது என்ற எண்ணமே மேலிட்டது.

ஓவர் டு புள்ளமுழுங்கி மலை...


 மலை உடைச்சான்

இந்த மலையின் அடிவாரத்தில் வலையப்பட்டி என்ற கிராமம் இருக்கிறது. அங்கிருந்து, மலையின் அடிவாரத்தில் இருக்கும் வாழறும்பு சுனைக்கு மேடாக இருக்கும் கரடுமுரடு பாதை வழியே கால்கள் தேயத் தேய ஏறினோம். இரண்டு புறங்களிலும் வறட்சியின் குறியீடாக கள்ளிச் செடிகளும் கருவேலம் மரங்களும் முளைத்துக் கிடந்தன. பத்து நிமிட நடையில் அடிவாரத்தை நெருங்கிய நிமிடம், அதுவரை தகித்த நம் உடலில் ஜில்லிப்பை உணர்ந்தோம். வாழறும்பு சுனையை அடைந்திருந்தோம். மலையின் மீது 20 அடி உயரத்தில் முளைத்திருந்த ஒரு மரத்தின் வேர்ப்பகுதியிலிருந்து சிறிய அளவில் தண்ணீர் வந்துகொண்டிருந்தது. அந்தத் தண்ணீரை எளிதாகப் பிடிக்கவும், அதில் குளிக்கவும் மலை அடிவார முகட்டில் கல்லால் தேக்கி, ஒரு பைப் வைத்து கீழே தண்ணீரை விழ வைக்கும் ஏற்பாட்டைச் செய்திருந்தார்கள். அதன் அருகே இடதுபுறம் உயரத்தில் இரண்டு ரவுண்ட் சைஸ் கட்டட அமைப்பு தெரிந்தது. அந்தக் கட்டடங்கள்தாம் கடவூர் ஜமீன் விலங்குகளை வேட்டையாடவும் ஊமைத்துரை ஒளிந்துகொள்ளவும் பயன்பட்ட ஒலி வீடுகளாம். அந்தக் கட்டட அமைப்பில் சுனையை நோக்கி சிறுசிறு ஓட்டைகள் இருந்தன. மறைவான பகுதியில் ஓர் ஆள் நுழைந்து போகும் அளவுக்கு வழியும் இருந்தது. அந்த  ஓட்டைகள் வழியாகத்தான் ஜமீன் மறைந்திருந்து சுனையில் தண்ணீர் அருந்த வரும் விலங்குகளை வேட்டையாடுவாராம். அந்த ஒலி வீட்டுச் சுவரில் சிவப்புக் கலரில் ஒரு ஜந்து ஓடியது. `ஓணானா அது?' என்று கேட்டபோது, நம்மை அழைத்துப் போனவர், `அதுதான் மலை உடைச்சான். அது கடிச்சா அப்படி வலிக்கும். விஷமானதும்கூட. தள்ளி நின்னுங்க' என்று நமக்குக் கிலியூட்டினார். இன்னோர் ஓட்டையிலிருந்து குரங்கு ஒன்று எட்டிப் பார்த்தது. அந்தச் சுனைக்கு மேலே ஒரு சாமி சிலை இருக்கிறது. அதுதான், சுத்தியுள்ள 18 பட்டியும் பொதுவாக வணங்கும் ஏழு கன்னிமார் தெய்வமாம். அப்போது, 10 பேர் அங்கே வந்தனர். அவர்கள் ஒவ்வொருவராக சுனை நீரில் குளித்ததோடு, கையோடு கொண்டு வந்திருந்த பாட்டில்களில் தண்ணீரை அடைத்துக்கொண்டனர். 
கணேசன்கணேசன் என்பவரிடம் பேசினோம். ``எனக்குத் திண்டுக்கல் மாவட்டத்துல உள்ள ஆணைப்பட்டிதான் சொந்த ஊர். இந்த வழியா போகும்போதோ அல்லது மனசு சரியில்லன்னாலோ இந்த வாழறும்பு சுனைக்கு வந்துருவேன். இங்க வந்துட்டாலே அப்படியே உடம்பே ஏசியில வச்சாப்புல ஜில்லுன்னு ஆயிடும். ஒரு மணி நேரம் இருந்தாப் போதும் உடம்பும் மனசும் உற்சாகமாயிடும். இந்தச் சுனையில குளிச்சுட்டு, அப்படியே தண்ணியை அடைச்சுட்டுப் போவேன். இதை 10 நாள் தொடர்ந்து குடிச்சா உடம்புல இருக்கிற பூரா வியாதியும் மட்டுப்படும்" என்று சிலாகித்தார்.

 முருகேசன்``அது என்ன மலைக்கு புள்ளமுழுங்கின்னு பேர்...?" என்று நம்மை அழைத்துப் போன முருகேசனிடம் கேட்டோம்.

 ``கணக்குச் சொல்லமுடியாத காலத்துக்கு முன்னாடி இந்த மலைகள்ல கடுமையான மழை பேஞ்சிருக்கு. அப்போ இந்த மலையிலிருந்து பெரும் தண்ணீர் திரண்டு வெள்ளமா ஊருக்குள்ள வந்திருக்கு. அப்போ ஒரு புள்ளையை வெள்ளம் அடிச்சுட்டுப் போயிட்டாம். அதனால், இந்த மலைக்குப் புள்ளமுழுங்கி மலைன்னு பேர் வந்திருக்கு. இந்த மலையில் மழை பெய்வதைக் கட்டுக்குள் வைக்கவும், தேவைப்படும்போது மழை வரவைக்கவும் இந்த வாழறும்பு சுனை அருகே ஏழுமார் கன்னியர்கள் சிலையை வைத்து வணங்கி வந்திருக்கிறார்கள். மாசிமாசம் வருடாவருடம் 18 பட்டி சனங்களும் கூடி இந்த 7 கன்னிமாருக்குப் பொங்கல் வைத்து திருவிழா எடுப்போம். அதோடு 18 பட்டியில் உள்ள எந்தக் கோயில்லயும் குடமுழுக்கு, திருவிழா பண்ணுவதற்கு முன்பும் இந்த 7 கன்னிமார் தெய்வத்தைத்தான் வணங்குவார்கள். தீர்த்தமாக இந்த வாழறும்பு சுனை தண்ணீரைத்தான் எடுத்துப் போவார்கள்." என்றார்.

 அடுத்து பேசிய பழனிச்சாமி என்பவர், பழனிச்சாமி`` `இதைச் சுற்றுலாத் தலமாக மாற்றினால் கிடைக்கும். கூட்டம் அதிகம் வரும்போது தப்பு நடக்காது'ன்னு பல வருஷமா அரசியல்வாதிகள், கலெக்டர்கள், சுற்றுலாத் துறை அதிகாரிகள்னு பலருக்கும் கோரிக்கை வெச்சுகிட்டு வர்றோம். இப்போ இருப்பவருக்கு முன்னாடி கலெக்டரா இருந்த கோவிந்தராஜ் நேரா வந்து பார்த்துட்டு, `அற்புதமான இடம். உடனே இதைச் சுற்றுலாத் தலமாக அறிவிக்க ஏற்பாடு செய்கிறேன்'னுட்டு போனார். எதுவும் நடக்கலை. இந்த மலையில் மான்கள், அழிந்து வரும் உயிரினங்களான தேவாங்குகள், கீரிகள், மலை உடைச்சான், காட்டுப் பன்றிகள்ன்னு பல உயிர்கள் இருக்கின்றன. பல வருடங்களுக்கு முன்பு சிறுத்தைப் புலிகள் கூட அடிக்கடி ஊருக்குள் வரும்ன்னு சொல்வாங்க. சமீபத்தில் இறந்த ஜமீன் முத்தையாவின் தந்தை ஜமீனா இருந்த சமயத்துல வெள்ளைக்காரர்கள் கட்டபொம்மனை தூக்கிலிட்டார்கள். இதனால், அவரது தம்பி ஊமைத்துரை வெள்ளைக்காரர்களுக்குத் தெரியாமல் கடவூர் ஜமீன் அரண்மனையில் வந்து மறைந்துகொள்கிறார். இந்தத் தகவல் வெள்ளைக்காரர்களுக்குத் தெரிந்துவிடுகிறது. ஆனால், ஊமைத்துரை அதற்கு முன்பாக ஜமீன் பேச்சையும் மீறி இந்த வாழறும்பு சுனை அருகே உள்ள ஒலிவீட்டில் வந்து மறைந்துகொண்டாராம். சிலநாள்கள் கழித்து பழனிக்குத் தைப்பூச திருவிழாவுக்கு இந்த வழியாக பக்தர்கள் போய் இருக்கிறார்கள். ஜமீன் ஏற்பாட்டில் ஊமைத்துரைக்கு மாறுவேடம் தரிக்கப்பட்டு, அந்தப் பக்தர்களோடு பக்தர்களாக ஊமைத்துரை ஜமீனால் அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறார். இந்த வாழறும்பு சுனைன்னு இல்ல, இந்த மலைகளில் 7 சுனைகள் அப்படி உள்ளன. எவ்வளவு வறட்சிக்காலத்திலும் வாழறும்புச் சுனையில் கொஞ்சமேனும் தண்ணீர் நிக்காமல் வந்துகொண்டே இருக்கும். மழைக்காலங்களில் அருவியாக தண்ணீர் கொட்டும். அந்தத் தண்ணீர் பொன்னணியாறை அணைக்குப் போகும். இப்படிப் பல சிறப்பு வாய்ந்த இந்த வாழறும்புப் பகுதியை அரசு சுற்றுலாத் தலமாக அறிவிக்கணும். அதனால், மிகவும் பொருளாதாரத்தில் பின்தங்கி இருக்கும் இந்தக் கடவூர் பகுதியே தன்னிறைவு அடையும்" என்றார்.

 இவங்க கோரிக்கை நிறைவேற கொஞ்சம் மனசு வையுங்கள் அதிகாரிகளே...


டிரெண்டிங் @ விகடன்