`8 வழிச் சாலை திட்டத்தில் விதிமீறல்கள்!’ - ஜி.கே.வாசன் குற்றச்சாட்டு

``பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து த.மா.கா சார்பில் சென்னை ஆட்சியர் அலுவலகம் முன் வரும் 14 ம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும்’’ என்று அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்தார்.

ஜி.கே.வாசன்

கரூரில் கட்சியின் மதுரை மாவட்டப் பொருளாளர் இல்லத் திருமணவிழாவில் பங்கேற்பதற்காக த.மா.கா கட்சித் தலைவர் ஜி.கே.வாசன் வருகை தந்தார். கரூர் வெங்கமேட்டில் உள்ள காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், ``பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கட்டுப்படுத்த தவறிய மத்திய அரசை எதிர்த்து நாளை மறுதினம் (14ம் தேதி) காலை சென்னையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் எனது தலைமையில் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

நாளை விநாயகர் சதூர்த்தி தினம். விநாயகர் சிலைகளை வைப்பதற்கான சூழலை காவல்துறையினர் கேட்பவர்களுக்கு ஏற்படுத்தி கொடுக்க வேண்டும். சிலை வைப்பதற்கான கட்டுப்பாடுகளைத் தளர்த்த வேண்டும். போக்குவரத்துத்துக்கு இடையூறாக வைக்கப்படும் சிலைகளை மட்டுமே, அவர்கள் தடை செய்ய வேண்டுமே தவிர, பொதுவாக சிலை வைப்பவர்களுக்குக் கண்டிப்பான கட்டுப்பாட்டை கொடுத்து அதை வைக்கவிடாமல் தடுப்பது ஏற்புடையதல்ல. 8 வழிச் சாலைக்கு கோர்ட் உத்தரவை மீறி தமிழக அரசு சில விதிமீறல்களை செய்துகொண்டிருக்கிறது. அதை அங்கே இருக்கும் மக்கள் முழுமையாக எதிர்த்துக்கொண்டிருக்கிறார்கள். தமிழக அரசை பொறுத்தவரையில் மக்கள் மீது திட்டங்களை திணிக்கவோ, கட்டாயப்படுத்தவோ கூடாது. மாறாக நீதிமன்ற உத்தரவுக்கு ஏற்றவாறு செயல்படுவதுதான் ஜனநாயகத்தில் சிறந்தது" என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!