`தமிழகத்தில் மின்வெட்டைக் கண்டுபிடித்ததே தி.மு.க அரசுதான்!’ - ஸ்டாலினுக்கு அமைச்சர் தங்கமணி பதில் | Minister thangamani poses challenge to DMK chief stalin

வெளியிடப்பட்ட நேரம்: 21:40 (12/09/2018)

கடைசி தொடர்பு:16:38 (13/09/2018)

`தமிழகத்தில் மின்வெட்டைக் கண்டுபிடித்ததே தி.மு.க அரசுதான்!’ - ஸ்டாலினுக்கு அமைச்சர் தங்கமணி பதில்

மின்துறையின் ஊழல் என்றால், எந்தவித விசாரணைக்கும் தயார் எனத் தமிழக மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி, தி.மு.க தலைவர் ஸ்டாலினுக்கு சவால் விடுத்துள்ளார்.

தங்கமணி

தமிழகத்தில் ஏற்பட்டுள்ள அறிவிக்கப்படாத மின்வெட்டுக்களுக்கு, மின்துறையில் ஏற்பட்டுள்ள ஊழல்களே காரணம் எனத் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். இந்த அறிக்கைக்கு மறுப்பு தெரிவித்து, சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் தங்கமணி, ``குற்றங்கள் கண்டிபிடிக்க வேண்டும் என்பதற்காகவே யாரோ எழுதிக் கொடுத்த அறிக்கையைத் தவறாக எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்றைய தினம் வெளியிட்டிருக்கிறார்.

மத்திய மின் தொகுப்பிலிருந்து 6,152 மெகாவாட் தமிழகத்துக்கு வர வேண்டியது. ஆனால், 3,334 மெகாவாட் மட்டும்தான் வந்தது. பராமரிப்பு நாள்களின்போது காற்றாலை மின்சாரம் இல்லாமல் போய்விட்டதால், சில இடங்களில் அரைமணி நேரம் மின்சாரம் தடைபட்டது. மின்வாரியத்தில் ஊழல் நடைபெற்றுள்ளது என்றால், எந்தவித விசாரணைக்கும் தயார். தமிழகத்தில் மின்வெட்டைக் கண்டுபிடித்ததே தி.மு.க அரசுதான் என்பது அனைவருக்கும் தெரியும். தி.மு.க ஆட்சி போவதற்கு மின்வெட்டுதான் காரணம் என்று அன்றைய தினம் மின்சார துறை அமைச்சராக இருந்த ஆற்காடு வீராசாமியே சொல்லியிருக்கின்றார். அப்படி இருக்கின்றபோது முழுப் பூசணிக்காயைச் சோற்றில் மறைப்பதுபோல் நேற்றைய தினம், எதிர்க்கட்சி தலைவர் ஓர் அறிக்கையை வெளியிட்டிருக்கிறார். தமிழ்நாடு மின்சார வாரியத்தின் இழப்பை, ஆண்டுக்கு 13,000 கோடி ரூபாயிலிருந்து 3,000 கோடி ரூபாயாகத் தற்போதைய அரசு குறைத்துள்ளது. ஒரு சாமானியனின் ஆட்சி நடைபெற்று வருவதை எதிர்க்கட்சி தலைவரால் ஏற்றுக்கொள்ள முடியாததால், ஊழல் குற்றச்சாட்டுகளைச் சுமத்துகிறார்” என்று தெரிவித்தார்.