இதயம், நுரையீரல் பிரச்னையில் தவித்த மாணவன் - பள்ளியே சேர்ந்து காப்பாற்றிய நெகிழ்ச்சி சம்பவம்!

பிறந்தது முதல் இதயம்,நுரையீரல் உள்ளிட்ட பிரச்னைகளில் சிக்கி மூச்சு விடக்கூட சிரமபட்ட ஏழை மாணவனை அவன் படிக்கும் பள்ளியில் உள்ள அனைவரும் சேர்ந்து காப்பாற்றிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

மாணவன் சுகன் செபாஸ்டியன்

கரூர் மாவட்டம்,அரவக்குறிச்சி ஒன்றியத்தில் இருக்கிறது அ.வெங்கிடாபுரம். இந்த கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் சுகன் செபஸ்டியான் என்ற மாணவர் ஐந்தாம் வகுப்பு படித்து வருகிறார்.இந்த கிராமத்தில் உள்ள கூலித்தொழிலாளிகளான பிரான்சிஸ் - குழந்தை தெரஸ் தம்பதியின் இரண்டாவது மகன்தான் சுகன் செபஸ்டியான். சிறுவயது முதலே அவருக்கு நுரையீரல் மற்றும் இதயத்தில் பிரச்னை இருக்க மூச்சுவிட சிரம்பட்டு,சின்ன வேலையைக் கூட செய்ய முடியாமல் அவதியுற்று வந்திருக்கிறார். அவருக்கு இப்படி ஒரு பிரச்னை இருப்பதை அறிந்த பெற்றோர், பிறந்தபோதே டாக்டர்களிடம் காண்பித்திருக்கிறார்கள். 'ஒரு வயதிற்குள் அறுவைச் சிகிச்சை செய்யலன்னா பிரச்னைதான்' என்று சொல்லி இருக்கிறார்கள் மருத்துவர்கள். ஆனால், 'பல லட்சம் ரூபாய்க்கு எங்கே போவது' என்று மகனுக்கு அறுவைச் சிகிச்சை செய்யாமல் பத்து வயது வரை கடத்தி வந்திருக்கிறார்கள். இதனால்,செபஸ்டியான் நிலைமை மோசமானது. அடிக்கடி மயங்கி விழுந்திருக்கிறார். இதனை அறிந்த அ.வெங்கிடாபுரம் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஷாகுல் ஹமீது, செபஸ்டியானை காப்பாற்றியே தீருவது என்று களத்தில் இறங்கியிருக்கிறார். இதற்கிடையில்,செபஸ்டியானின் தந்தை பிரான்ஸிஸூக்கு சர்க்கரை வியாதி முற்றி, அவரது வலது காலை எடுக்க வேண்டிய நிலைமை.

 தலைமையாசிரியர் ஷாகுல் ஹமீதுஅதன்பிறகு,நடந்தவற்றை தலைமை ஆசிரியர் ஷாகுல் ஹமீதே விளக்குகிறார்."அவங்க குடும்ப நிலைமையை பார்த்து மொத்த பள்ளிக்கூடத்துக்கும் கண் கலங்கிட்டு. 'செபஸ்டியானை எப்படியாச்சும் காப்பாத்தனும்'ன்னு பள்ளி மாணவர்களே சபதம் எடுத்தாங்க. ஒரு டீச்சர் மாசம் மாசம் அவங்க குடும்ப உணவுக்கு உதவுனாங்க. நாங்க ஆசிரியர்களெல்லாம் கையில் கிடைச்சத போட்டோம். மாணவர்கள் அனைவரும் வீட்டுல கொடுக்கும் அஞ்சையும்,பத்தையும் இன்னும் சிலர் உண்டியல் காசை எல்லாம் கொண்டு வந்து கொட்டினாங்க. அதை வச்சு செபஸ்டியானுக்கு ஆபரேஷன் பண்ண செக்கப் செய்ய வைத்தோம். மருத்துவர்கள், 'ஆபரேஷன் பண்ண வேண்டிய கட்டத்தை பையன் தாண்டிட்டான். மோசமான நிலையில் இருக்கான். ஆபரேஷனில் 10 சதவிகிதமே நல்லது நடக்க சான்ஸ் இருக்கு'ன்னு அதிர்ச்சி கொடுத்தாங்க. சென்னை சூர்யா மருத்துவமனையில்தான் அறுவைச் சிகிச்சை நடந்தது. பல லட்சம் செலவாகுற ஆபரேஷன். செபஸ்டியானின் குடும்ப நிலைமையை பார்த்து, மருத்துவமனை நிர்வாகம் பணத்தைத் தாண்டி மனிதநேயத்தோடு ஆபரேஷனை செய்தார்கள். அங்கே உள்ள பல டாக்டர்கள் செபஸ்டியான் குடும்பத்திற்கு சாப்பாடு வாங்கி தர்றது, பஸ்ஸூக்கு காசு தர்றதுன்னு உதவுனாங்க.

ஆபரேஷன் முடிஞ்சாலும் பேச்சு மூச்சில்லாமல் 15 நாள்கள் ஐ.சி.யூவிலேயே இருந்தான். ஒட்டுமொத்த பள்ளியும் செபஸ்டியான் குணமாக வேண்டி தினமும் பிரேயர்ல பிரார்த்தனை செய்தோம். மருத்துவமனை மருத்துவர்களும் வேண்டிக்கிட்டாங்க. எல்லோருடைய வேண்டுதல் பலனாக கண் முழித்தான் செபஸ்டியான். அதை கேட்டதும் ஒட்டுமொத்த பள்ளியும் அழுதது. இப்போ மத்த மாணவர்கள்போல் நலமாகி வருகிறான். இவன் கடவுள் குழந்தை சார். இல்லைன்னா சாவை அதன் வாசலுக்கே போய் சந்திச்சுட்டு உயிரோடு திரும்பி வந்திருப்பானா?!" என்றார் நெக்குருகிபோய்!.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!