வாட்ஸ்அப் யுகத்திலும் தொலைத்தொடர்பு வசதி இன்றி தவிக்கும் தமிழக கிராமங்கள்..!

தேனி மாவட்டம் போடி அருகே உள்ளது குரங்கணி. இங்கு தொலைத்தொடர்பு வசதி இன்றி தவிப்பதாக அப்பகுதி மக்கள் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு கொடுத்தனர்.

குரங்கணி மலைப்பகுதியில் ஏற்பட்ட காட்டுத் தீயில சிக்கி பலர் பலியான சம்பவம் யாரும் மறந்திருக்க முடியாது. அந்த விபத்து ஏற்பட்டபோது மீட்புப் பணியில் தொய்வு ஏற்பட குரங்கணி மலைப்பகுதியில் இருந்த தொலைத்தொடர்பு சேவை பராமரிப்பு இன்றி துண்டிக்கப்பட்டிருந்ததும் ஒரு காரணமாகக் கூறப்பட்டது. விபத்து நடந்த பிறகு, அதை உணர்ந்த மாவட்ட நிர்வாகம் பராமரிப்பு பணிகளைச் செய்து மீண்டும் தொலைத்தொடர்பை சரிசெய்தது. இந்நிலையில் மீண்டும் அப்பகுதியில் தொலைத்தொடர்ப்பு துண்டிக்கப்பட்டிருக்கிறது.

இது தொடர்பாக நம்மிடம் பேசிய குரங்கணி பகுதி மக்கள், "கொட்டக்குடி, முதுவாகுடி, குரங்கணி, டாப் ஸ்டேசன், சென்ட்ரல் ஸ்டேஷன், முட்டம், சாலப்பாறை, காரிப்பட்டி ஆகிய மலைகிராமங்கள் இப்பகுதியில் உள்ளது. குரங்கணி காட்டுத் தீ விபத்து ஏற்பட்ட போது தொலைத்தொடர்பு இல்லாமல் சிரமப்பட்டனர். அதனைத்தொடர்ந்து பி.எஸ்.என்.எல் சேவை சரிசெய்யப்பட்டது. இப்போது மீண்டும் தொலைத்தொடர்ப்பு துண்டிக்கப்பட்டுள்ளது.

பராமரிப்பு பணி இல்லாததே இதற்கு காரணம். ஏதாவது அவசர செய்தியாக இருந்தாலும் 16 கிலோமீட்டர் கடந்து தொலைத்தொடர்பு இருக்கும் இடத்திற்கு வந்து தான் தகவல் தெரிவிக்க வேண்டிய சூழல் உள்ளது. குரங்கணியில் காவல்நிலையம், அரசுப்பள்ளி, அரசு ஆரம்ப சுகாதார நிலையம் என அனைத்தும இருந்தும் தொலைத்தொடர்ப்பு வசதி இன்றி நாங்கள் சிரமப்பட்டுக்கொண்டே தான் இருக்கிறோம். இதற்கு மாவட்ட நிர்வாகம் நிரந்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே எங்கள் கோரிக்கையாக உள்ளது" என்றனர். மீண்டும் ஒரு அவசர சூழல் ஏற்பட்டு ஆப்புலன்ஸை கூட அழைக்க முடியாத நிலை குரங்கணி பகுதி மக்களுக்கு ஏற்பட்டால் தான் மாவட்ட நிர்வாகம் அவர்கள் மேல் தன் பார்வையை திருப்புமா?

Do you like the story?

Please Appreciate the Author by clapping!