வெளியிடப்பட்ட நேரம்: 05:00 (13/09/2018)

கடைசி தொடர்பு:12:32 (13/09/2018)

`இப்போ, உனக்கு ஆபரேஷன் செய்ய பயமா இருக்கு’ - கரூர் அட்ஷயாவிடம் நெகிழ்ந்த அப்போலோ மருத்துவர்கள்

 

``உனக்கு கிடைத்த புகழால், உனக்கு செய்ய வேண்டிய அறுவைசிகிச்சையை 100 சதவிகிதம் நல்லபடியா பண்ணணுமேங்கிற பயம் ஏற்பட்டிருக்கு" என்று சென்னை அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் அட்ஷயாவிடம் சொல்லி இருக்கிறது.

கரூர் அட்ஷயாவுக்கு அதிகம் அறிமுகம் தேவையில்லை. கேரளம் மழை வெள்ளத்தில் தத்தளித்தபோது தன் இதய ஆபரேஷனுக்காக வைத்திருந்த பணத்தில் 5,000 ரூபாயை கேரளாவுக்கு நிவாரண நிதியாகக் கொடுத்து நெகிழ வைத்த சிறுமிதான் அட்ஷயா. கரூர் மாவட்டம், குமாரமங்கலத்தைச் சேர்ந்த சுப்பிரமணி, ஜோதிமணி தம்பதியின் மகள்தான் அட்ஷயா. இவளின் இந்த சேவை உள்ளத்தை முதலில் நமது விகடன் இணையதளத்தில்தான் செய்தி பதிந்திருந்தோம். இந்தச் செய்தி வைரலாக, அதைத்தொடர்ந்து தேசிய ஊடகங்களும் அட்ஷயாவின் கருணை உள்ளத்தைச் செய்தியாக வெளியிட்டன. இதனால், அட்ஷயாவுக்கு இதய ஆபரேஷனை தங்கள் மருத்துவமனையில் இலவசமாகச் செய்வதாக இந்தியா மற்றும் லண்டனில் உள்ள ஒரு மருத்துவமனை என்று 20-க்கும் மேற்பட்ட மருத்துவமனைகளில் இருந்து அழைப்பு வந்தது. ஆனால், அட்ஷயாவுக்கு முதல் ஆபரேஷன் செய்த சென்னை அப்போலோ மருத்துவமனையிலேயே இரண்டாவது அறுவைசிகிச்சையையும் செய்துகொள்வதாக அட்ஷயா குடும்பம் சொல்லிவிட்டது.

இந்நிலையில், அட்ஷயாவுக்கு பணமாக உதவிகள் நிறைய கிடைத்தன. குறிப்பாக, சகாயம் ஐ.ஏ.எஸ் அட்ஷயாவை அழைத்துப் பாராட்டினார். அட்ஷயாவுக்கு முதல் ஆபரேஷன் நடக்க சமூக வலைதளங்கள் மூலம் நிதி திரட்டிய கரூர் 'இணைந்த கைகள்' அமைப்பினர் அட்ஷயாவை சென்னை அப்போலோ மருத்துவமனைக்கு செக் அப்புக்காக அழைத்துச் சென்றனர்.

`லண்டன் வரையில் உனக்கு சிசிச்சை செய்ய அழைத்தும் எங்க மருத்துவமனையிலேயே அறுவைசிகிச்சை செய்வேன்'ன்னு, நீ சொன்னது எங்களுக்கு பெருமை. உனது கருணை உள்ளத்தைப் பாராட்ட வார்த்தைகளே இல்லை. உனக்கு அறுவைசிகிச்சை செய்ய எங்கள் மருத்துவமனை பெருமிதம் கொள்கிறது. ஆனால், நீ பாப்புலர் ஆகிட்டதால், உனக்கு இரண்டாவது ஆபரேஷனை 100 சதவிகிதம் சரியா பண்ணணுமேங்கிற பயம் ஏற்பட்டிருக்கு" என்று சொல்லி வாழ்த்தி இருக்கிறார்கள் மருத்துவர்கள்.

அட்ஷயாவை மருத்துவமனைக்கு அழைத்துப்போன 'இணைந்த கைகள்' அமைப்பின் ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான சாதிக் அலி, 'அட்ஷயாவை அழைச்சுட்டு போனதும் அப்போலோ மருத்துவமனையே அவளுக்கு பெரிய மரியாதை செய்தது. மேடை ஏற்றி அவளைப் பேசச் சொன்னார்கள். அதோடு, டாக்டர்கள் மீட்டிங், முக்கிய டாக்டர்கள் மீட்டிங், நிர்வாகிகள் மீட்டிங்னு பல மீட்டிங் போட்டு அட்ஷயா ஆபரேஷன் பற்றி டிஸ்கஸ் பண்ணினாங்க. பிறகு, அவளை முழுவதும் சோதனை செய்த மருத்துவர்கள், 'இப்போதைக்கு அட்ஷயா நல்லா இருக்காங்க.

வர்ற நவம்பர் மாசம் ஆபரேஷனை வச்சுக்கலாம்'ன்னு சொன்னாங்க. இதற்கிடையில், கரூர் அரசு மருத்துவமனை சார்பாக ஒரு குழுவும், இலவச மருத்துவக் காப்பீட்டு உயரதிகாரியும் அங்க வந்தாங்க. அப்போலோ நிர்வாகத்திடம், 'அட்ஷயா ஆபரேஷனுக்கு மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் ஒரு லட்சம் கவரேஜ் ஆகும். இதைத் தவிர, மீதி தேவைப்படும் தொகையையும் அரசே ஏத்துக்க இருக்கு'ன்னு சொல்லிட்டுப் போனாங்க. அப்போலோ மருத்துவமனையிலேயே அவளுக்கு மறுபடியும் ஆபரேஷன் பண்ண நினைக்கிறதுக்கு காரணம் அவளோட முழு ஹெல்த் கண்டிஷனும் முதல் ஆபரேஷனை பண்ணுனவங்கங்கிற வகையில் அவங்களுக்குதான் தெரியும்ங்கிறதாலதான். அட்ஷயாவின் நல்ல உள்ளம் அவளைச் சுற்றி நல்ல விஷயங்களை கொண்டு வந்து சேர்த்திருக்கு" என்றார்.