`அப்பாவி இளைஞருக்கு விஷஊசி போட்டு, பொதுமக்களை மிரட்டுகிறார் வனச்சரகர்’ - மலைவாழ் மக்கள் வேதனை

கோவையில், சிறுத்தையை வேட்டையாடி கொன்ற சம்பவத்தில், மலைவாழ் மக்கள் மீது பொய் வழக்கு போட்டு அடித்துத் துன்புறுத்துவதாகப் பழங்குடி மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

பழங்குடி இளைஞர்கள்

கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே ஆனைமலை புலிகள் காப்பகப் பகுதிக்குட்பட்ட காண்டூர் கால்வாய் வனப்பகுதியில், கடந்த 7-ம் தேதி சிறுத்தையின் கால் நகங்கள், தலை துண்டிக்கப்பட்ட நிலையில் அதன் சடலம் கண்டெடுக்கப்பட்டது. இச்சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை போலீஸார் மற்றும் வனத்துறை அதிகாரிகள் தேடி வந்தனர். இந்நிலையில், வனத்துறையினர் நேற்று பந்தக்கால் அம்மன் பகுதியைச் சேர்ந்த மலைவாழ் மக்கள் 4 பேரை கைது செய்து, அவர்களை சிறுத்தை வேட்டையாடியதாக ஒப்புக்கொள்ள வேண்டும் என்று கூறி மயக்க ஊசி செலுத்தி, அடித்துத் துன்புறுத்தியதாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து, அந்த இளைஞர்களைத் துன்புறுத்திய சம்பவம் அறிந்து சுற்றுவட்டாரத்தில் உள்ள மலைவாழ் மக்கள் கிராமத்தைச் சேர்ந்த நூற்றுக்கணக்கானோர், ஆனைமலை வனத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு, சிறுத்தையை வேட்டையாடிய உண்மையான குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். மேலும், அப்பாவி மலைவாழ் மக்களை அடித்து துன்புறுத்திய வனச்சரகர் காசிலிங்கம் மீது போலீஸார் கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் போராட்டத்தில் ஈடுபட்டு மக்கள் வலியுறுத்தினர்.

பரமசிவம்

இதுகுறித்து, தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் கோவை மாவட்டத் தலைவர் பரமசிவம், "உண்மையான குற்றவாளிகளைப்  பிடிக்காமல், தொடர்ந்து பழங்குடி இளைஞர்களை, வனத்துறை குறிவைத்து வருகிறது. தினமும், பழங்குடி மக்களின் வீட்டுக்குள் நுழைந்து, செய்யாத குற்றத்தை ஒப்புக்கொள்ள சொல்லி அடித்து துன்புறுத்தியுள்ளனர். அப்படி, ஒப்புக்கொள்ளாவிடின் தலையை துண்டித்துவிடுவோம் என்று கூறி மிரட்டுகின்றனர். உட்சபட்சமாக வனச்சரகர் காசிலிங்கம், முருகன் என்ற இளைஞருக்கு விஷ ஊசி போட்டு, அதைவைத்து மற்ற மக்களை வெத்துப் பேப்பரில் கையெழுத்து போடச்சொல்லி மிரட்டுகிறார். உண்மையான குற்றவாளிகளை பிடிப்பதுடன், பழங்குடி இளைஞர்களைத் துன்புறுத்திய காசிலிங்கம் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுவரை எங்கள் போராட்டம் தொடரும்" என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!