`கோடிக்கணக்கில் சொத்து ஆவணங்கள்; லட்சக்கணக்கில் பணம்!’ - அதிகாரிகளை மிரளவைத்த ஆர்.டி.ஓ வீட்டு ரெய்டு | DVAC recovered land documents worth crores from kallakurichi RTO's cuddalore house

வெளியிடப்பட்ட நேரம்: 10:30 (13/09/2018)

கடைசி தொடர்பு:10:52 (13/09/2018)

`கோடிக்கணக்கில் சொத்து ஆவணங்கள்; லட்சக்கணக்கில் பணம்!’ - அதிகாரிகளை மிரளவைத்த ஆர்.டி.ஓ வீட்டு ரெய்டு

விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சியில் கைது செய்யப்பட்ட மோட்டார் வாகன ஆய்வாளர் பாபு கோடிக்கணக்கில் சொத்துகளை வாங்கிக் குவித்துள்ளது லஞ்ச ஒழிப்பு போலீஸார் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதேபோல் அவரின் உதவியாளரும் பினாமியுமான செந்தில்குமார் வீட்டிலிருந்தும் ஏராளமான ஆவணங்கள் சிக்கியுள்ளது.

பாபு

கடலூர் தௌலத் நகரைச் சேர்ந்தவர் பாபு (52). இவர் விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் மோட்டார் வாகன ஆய்வாளராகப் பணிபுரிந்து வருகிறார். முத்துக்குமார் என்பவரின் வாகனத்துக்குத் தகுதிச் சான்றிதழ் வழங்க ரூ.25,000 லஞ்சம் வாங்கியபோது விழுப்புரம் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீஸாரால் கடந்த 11-ம் தேதி கைது செய்யப்பட்டார். 

இதைத் தொடர்ந்து கடலூர் தௌலத் நகரில் உள்ள பாபுவின் வீட்டில் கடலூர் லஞ்ச ஒழிப்புப் போலீஸார் சோதனை நடத்தினர். அப்போது கட்டுக்கட்டாகப் பைகளில் இருந்த பணம் மற்றும் நகைகளைப் பார்த்து அதிர்ச்சியடைந்த போலீஸார் பணம் எண்ணுவதற்கு இயந்திரமும் நகைகளை மதிப்பிட நகை மதிப்பீட்டாளரையும் வரவழைத்து சுமார் 8 மணி நேரம் மதிப்பீடு செய்தனர். முடிவில் ரூ.33.5 லட்சம் பணம், 140 சவரன் நகைகள், 15 கிலோ வெள்ளி மற்றும் 48 வங்கிக் கணக்கு பாஸ் புத்தகங்கள், 6 வங்கி லாக்கர்களின் சாவிகள் மற்றும் சென்னை உட்பட பல்வேறு இடங்களில் கோடிக்கணக்கான ரூபாய்க்கு வாங்கிக் குவிக்கப்பட்டுள்ள சொத்துகளுக்கான ஆவணங்கள் உள்ளிட்டவற்றை பாபுவின் வீட்டிலிருந்து கைப்பற்றினர். 

மேலும், கைப்பற்றப்பட்ட வங்கி சேமிப்பு கணக்குகளில் சுமார் 60 லட்சம் ரூபாய் டெபாசிட் செய்யப்பட்டிருப்பதும் தெரியவந்துள்ளது. வங்கி லாக்கரிலும் இதேபோல் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள சொத்து ஆவணங்கள் மற்றும் நகைகள் இருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதை வங்கி அதிகாரிகள் அனுமதியுடன் ஆய்வு செய்யப்படும்போது அதன் மதிப்பு எவ்வளவு என்பது தெரியவரும் எனப் போலீஸார் தெரிவிக்கின்றனர். பாபுவின் அனைத்து வங்கிக் கணக்குகள், வங்கி லாக்கர்களை முடக்கம் செய்துள்ளனர். 
பாபுவின் உதவியாளரும் பினாமியான செந்தில்குமாரின் வீடு சேலம் மாவட்டம் ஆத்தூரில் உள்ளது. அவரது வீட்டில் நடந்த சோதனையில் 15 வங்கிக் கணக்கு பாஸ்புக்குகள், 150 சவரன் நகைகள் மற்றும் 3 கோடிக்கு அதிகமான சொத்து ஆவணங்கள் சிக்கியுள்ளன. கைது செய்யப்பட்டுள்ள மோட்டார் வாகன ஆய்வாளர் பாபு கடந்த 2006-ம் ஆண்டு சேலம் மாவட்டம் ஆத்தூரில் பணிபுரிந்தபோது வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. அந்த வழக்கு தொடர்பான விசாரணை சேலம் ஊழல் தடுப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இதனால் அவருக்குப் பதவி உயர்வு வழங்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது. 

கடலூரைச் சேர்ந்த பாபுவின் தந்தை சுப்பிரமணி, வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் உதவியாளராகப் பணிபுரிந்தபோது இறந்ததால், வாரிசு அடிப்படையில் 1991-ல் தமிழக அரசு வேலை வழங்கியுள்ளது. இவர் 1998-ம் ஆண்டு முதல் மோட்டார் வாகன ஆய்வாளராகப் பல இடங்களில் பணிபுரிந்து வருகிறார். லஞ்ச ஒழிப்பு போலீஸார் சோதனையின்போது ஏராளமான ஆவணங்கள் கிடைத்துள்ளதால் பாபுவின் உறவினர்களிடமும் விசாரணை நடத்த போலீஸார் முடிவு செய்துள்ளனர். மோட்டார் வாகன ஆய்வாளராகப் பணிபுரிந்து வருபவர் கோடிக்கணக்கில் சொத்துக்களை குவித்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.