`அ.தி.மு.க தமிழகத்தை இன்னும் 100 ஆண்டுகளுக்கு ஆளும்!’ - அமைச்சர் செல்லூர் ராஜு பேச்சு | Minister sellur raju predicts, ADMK will rule TN for next 100 years

வெளியிடப்பட்ட நேரம்: 11:00 (13/09/2018)

கடைசி தொடர்பு:11:06 (13/09/2018)

`அ.தி.மு.க தமிழகத்தை இன்னும் 100 ஆண்டுகளுக்கு ஆளும்!’ - அமைச்சர் செல்லூர் ராஜு பேச்சு

மதுரை திருப்பரங்குன்ற சட்ட மன்றத் தொகுதிக்குட்பட்ட தனக்கன்குளத்தில் 5,000 பேர் கலந்துகொள்ளக்கூடிய சைக்கிள் பேரணி அ.தி.மு.க சார்பில் நடைபெறுகிறது.

சைக்கிள் பேரணி தொடக்க விழாவில் செல்லூர் ராஜூ உள்ளிட்ட அமைச்சர்கள்

திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் தங்களின் ஆளுமைகளைக் காட்ட வேண்டும் என அனைத்துக்கட்சிகளும் ஆயத்தப் பணிகளில் இறங்கி உள்ளனர். இந்நிலையில் ஆளும்கட்சி தனது செயல்பாட்டை முழுமையாகக் காண்பித்துவருகிறது. அமைச்சர்கள் செல்லூர் ராஜு மற்றும் ஆர்.பி.உதயகுமார் ஆகியோர் எம்.எல்.ஏ-க்களுடன் ஆலோசனை கூட்டம் நடத்தி வருகின்றனர். ஆர்.பி.உதயகுமார், தனது பெயரை தக்கவைக்க தொடர்ந்து சைக்கிள் பேரணி, கறி விருந்துகள் என்று செயல்பட்டு வருகிறார்.

இந்நிலையில், இன்று 5,000 பேர் கலந்துகொள்ளக்கூடிய சைக்கிள் பேரணியை அவர் நடத்தினர். சைக்கிள் பேரணி தொடக்க நிகழ்ச்சியில் தமிழக அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், செல்லூர் ராஜு,  தங்கமணி, ராஜேந்திரபாலஜி, சேவூர் ராமச்சந்திரன், பாஸ்கரன் மற்றும் ராஜலெட்சுமி ஆகியோர் கலந்துகொண்டனர். திருப்பரங்குன்றம் தொகுதிக்குட்பட்ட தனக்கன்குளத்தில் தொடங்கி சிலைமானில் இந்தப் பேரணி முடிகிறது.

நிகழ்ச்சியில் பேசிய திண்டுக்கல் சீணிவாசன், ``இந்தப் பேரணியின் மூலமாகத் திருப்பரங்குன்றத்தில் அ.தி.மு.க அமோக வெற்றி பெறும். இந்த வெற்றிக்குப் பிறகு, ஸ்டாலின் செயல் தலைவர் அல்ல தலைவரும் அல்ல என்றும், சுண்டைக் காய் கட்சிகளும் இடைத்தேர்தலோடு காணமால் போய்விடும்’’ என்றார். மேலும், `திருட்டு வழியில் 20 ரூபாய் நோட்டைக் காட்டி வெற்றி பெற்றவருக்கு இனிவரும் இடைத்தேர்தலில் வெற்றி பெற முடியாது’ என்றும் அவர் கூறினார். வைத்திலிங்கம் பேசுகையில், ``கட்சியை யாராலும் சேதப்படுத்த முடியாது’' என்றார். மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி கூறுகையில், ``காற்றாலையின் மூலமாகக் கிடைக்கக்கூடிய மின்சாரம் சரிவர கிடைக்காததால்தான் கடந்த இரண்டு நாள்களில் மின்சாரம் அரை மணி நேரம் துண்டிப்பு ஏற்பட்டது. அதுபோல பாரமரிப்பு பணியியும் இருந்தது. இனி காற்றாலையின் மூலமாக மின்சாரம் கிடைப்பதில் சிக்கல் இருந்தாலும். அனல் மின்சக்தியின் மூலமாக வழக்கம்போல் மின்சாரம் வழங்கப்படும். தரமற்ற நிலக்கரி கூடுதலான விலைக்கு தி.மு.க ஆட்சிக் காலத்தில்தான் வாங்கப்பட்டது. தி.மு.க ஆட்சிக் காலம் மின்வெட்டு ஆட்சியாகவே இருந்தது’’ என்றார். அமைச்சர் செல்லூர் ராஜு பேசுகையில், ``ஜெயலலிதா கட்டிக்காத்த அ.தி.மு.க-தான், இன்னும் 100 ஆண்டுகள் தமிழகத்தை ஆளும் என்ற வரலாறு படைக்கும்’’ என்றார்.