`ஜனநாயக நாடா... வரம்பற்ற முடியாட்சியா?’ - 7 பேர் விடுதலையை வலியுறுத்தும் கே.எஸ்.ராதாகிருஷ்ணன் | K.S.Radhakrishnan welcomes TN Cabinet's recommentation to early release of Rajiv Gandhi assassination case convicts

வெளியிடப்பட்ட நேரம்: 12:30 (13/09/2018)

கடைசி தொடர்பு:12:36 (13/09/2018)

`ஜனநாயக நாடா... வரம்பற்ற முடியாட்சியா?’ - 7 பேர் விடுதலையை வலியுறுத்தும் கே.எஸ்.ராதாகிருஷ்ணன்

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று சிறையில் 27 ஆண்டுகளாக இருக்கும் 7 பேரையும் விடுவிக்கும் நடவடிக்கைகளை மாநில அரசு எடுக்கலாம் என்று உச்ச நீதிமன்றம் சமீபத்தில் கூறி இருந்தது. அதன்படி, தமிழக அமைச்சரவை கூடி, 'பேரறிவாளன், முருகன், நளினி உள்ளிட்ட 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும்' என்று தீர்மானம் போட்டுள்ளது. இதுகுறித்து தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் முறையான அறிவிப்பு வெளியிட வேண்டும். இந்நிலையில், அந்த 7 பேரையும் விடுவிக்க வேண்டும் என்றால் மத்திய அரசின் அனுமதி வேண்டும் என்று சில அதிகாரிகள் கூறியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. 7 பேரின் விடுதலைக்கு சிலர் எதிர்ப்பும் தெரிவித்துள்ளார்கள்.

கே.எஸ்.ராதாகிருஷ்ணன்

இந்நிலையில், மூத்த வழக்கறிஞர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன், ''எழுவர் விடுதலை குறித்து உச்ச நீதிமன்றமே மாநில அரசு விடுதலை குறித்து முடிவு எடுக்கலாம் என்று சொன்ன பிறகு, சில மூத்த அதிகாரிகளுக்கு மூக்கைத் துளைப்பதற்கு வேலையே கிடையாது. தமிழக அரசின் அமைச்சரவையின் தீர்மானத்தை ஆளுநர் அப்படியே ஏற்றுக்கொள்வதுதான் அவரது கடமை. அவ்வாறில்லாமல் இதில் குறுக்கு சால் ஓட்டுவது யாராக இருந்தாலும் கடுமையான கண்டனத்துக்கு உரியவர்கள். ராஜீவ் படுகொலை என்பது யாரும் ஏற்றுக்கொள்ள முடியாத ரணமான செயல்தான். ஆனால், அந்த வழக்கின் புலன் விசாரணை, விசாரணையே சரியாகச் செய்யப்படாமல் உண்மையான குற்றவாளிகள் தப்பித்துவிட்டார்களோ என்று சந்தேகங்களும் எழுந்துள்ளன.

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பையே இந்த மண்ணின் சட்டமாகவும் கருத வேண்டும். அந்த அடிப்படையில் தமிழக அரசு, இந்த எழுவரையும் விடுதலை செய்ய தீர்மானத்தையும் நிறைவேற்றியுள்ளது. அதில், ஏன் இந்த மூத்த அதிகாரிகள் தலையிடுகின்றனர். இந்தியா என்ன ஜனநாயக நாடா அல்லது குறிப்பிட்ட சிலரின் விருப்பத்திற்கேற்றவாறு இயங்கும் வரம்பற்ற முடியாட்சியா'' என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க