வெளியிடப்பட்ட நேரம்: 12:00 (13/09/2018)

கடைசி தொடர்பு:12:00 (13/09/2018)

புதிய பதவிகள் தொடர்பான வழக்கு! அ.தி.மு.க-விடம் விளக்கம் கேட்கும் டெல்லி உயர் நீதிமன்றம்


அதிமுக

அ.தி.மு.க தேர்தல் சின்னம் இரட்டை இலை, கட்சியின் பொதுச் செயலாளர் பதவி ஆகியவற்றை முன்னிறுத்தி டி.டி.வி.தினகரன், முன்னாள் எம்.பி கோவை கே.சி.பழனிசாமி ஆகியோர் தேர்தல் ஆணையதில் மனு கொடுத்துள்ளனர். டெல்லி உயர் நீதிமன்றத்திலும் வழக்கு தொடுத்துள்ளனர். இதில், கே.சி.பழனிசாமி தொடர்ந்த வழக்கை விசாரித்து உயர் நீதிமன்றம், அந்த மனுவை நான்கு வாரத்துக்குள் முடிக்க வேண்டும் என்று கூறியிருந்தனர். அதுபோல, டி.டி.வி.தினகரன் தொடர்ந்த வழக்கும் உயர் நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. அந்த இரண்டு வழக்குகளும் இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது. 

அ.தி.மு.க உள்கட்சி பிரச்னையில் டி.டி.வி.தினகரன் தரப்பினர், 'இரட்டை இலைச் சின்னத்தை எப்படியும் கைப்பற்ற வேண்டும் அல்லது அந்தச் சின்னத்தை தற்காலிகமாக முடக்க வேண்டும்' என்ற முடிவில் உறுதியாக இருக்கிறார்கள். இரட்டை இலைச் சின்னம் ஓ.பன்னீர் செல்வம் அணிக்கு கொடுத்தது தவறு என்று அதற்குரிய ஆவணங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர். கே.சி.பழனிசாமி தாக்கல் செய்துள்ள மனுவில், 'அ.தி.மு.க-வின் அடிப்படைக் கொள்கை என்பதே கட்சியின் அடிப்படை உறுப்பினர்களால் மட்டுமே கட்சியின் பொதுச் செயலாளர் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். ஆனால், அந்த விதியை ரத்து செய்துவிட்டனர். ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர், துணை ஒருங்கிணைப்பாளர் என்ற புதிய பதவிகளை உருவாக்கி உள்ளனர். இது, அ.தி.மு.க அடிப்படை சட்டதிட்ட விதிகளுக்கு எதிரானது. எனவே, பொதுச் செயலாளர் தேர்வை எம்.ஜி.ஆர், ஜெயலலிதா வழியில் நடத்த வேண்டும். பொதுச் செயலாளர் தேர்வு செய்யப்பட்ட பிறகுதான் கட்சியையும் சின்னத்தையும் அந்த புதிய பொதுச் செயலாளரிடம் வழங்க வேண்டும்' என்று மனுத்தாக்கல் செய்துள்ளார். 

தினகரன் பழனிசாமி


இதற்கிடையில், ஏற்கெனவே, இந்திய தேர்தல் ஆணையத்தில் தகவல் அறியும் உரிமை சட்டப்படி கேட்கப்பட்ட கேள்விக்கு, ``ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர், துணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை அங்கிகரிக்கவில்லை'' என்று பதில் அளித்து இருந்தது. அப்படி இருக்கையில், பன்னீர்செல்வம் அணிக்கு கட்சியையும் இரட்டை இலைச் சின்னத்தையும் எப்படி கொடுக்கலாம்? என்பதைத்தான் முக்கியமான கேள்வியாக கே.சி.பழனிசாமியும் டி.டி.வி.தினகரனும் முன்வைக்கிறார்கள். கே.சி.பழனிசாமி தொடர்ந்த வழக்கை விசாரித்த டெல்லி உயர் நீதிமன்றம், இதுதொடர்பாக 3 வாரங்களுக்குள் விளக்கமளிக்குமாறு ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அவர்கள் தரப்பில் விளக்கமளிக்கப்பட்ட பிறகு வழக்கு விசாரணையை 4 வாரங்களுக்குள் முடிக்கவும் தேர்தல் ஆணையத்துக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க