``16-ம் தேதி, ஜெ.குரு சிலை திறப்பு..!’’ விழுப்புரத்தில் நடக்கிறது

வன்னியர் சங்கத் தலைவராக இருந்த ஜெ.குரு, கடந்த மே மாதம் காலமானார். சில வருடங்களாக உடல்நிலை குன்றி இருந்த ஜெ.குரு, சென்னையில் உள்ள அப்போலோ மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த, மே 25-ம் தேதி, மருத்துவ சிகிச்சைப் பலனின்றி காலமானார். அவரது உடல், காடுவெட்டி கிராமத்தில் அடக்கம் செய்யப்பட்டது. அப்போது, இறுதிச் சடங்கில் கலந்துகொண்ட பா.ம.க நிறுவனர் ராமதாஸ், 'அவருக்கு உருவச்சிலை வைப்போம்; மணிமண்டம் கட்டுவோம்'' என்று அறிவித்திருந்தார். ஜெ.குரு மரணம் அடைந்து 100 நாள்கள் ஆன நிலையில், அந்த அறிவிப்புகள் ஒவ்வொன்றாக நிறைவேற்றப்படுவதாக ராமதாஸ் அறிவித்துள்ளார்.

ஜெ.குரு

இதுகுறித்து, பா.ம.க நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில், 'குரு மறைந்து 100 நாள்கள் கடந்துவிட்டன. நாள்குறிப்பில்தான் அவை 100 நாள்கள். ஆனால், என்னைப் பொறுத்தவரை அவை 100 யுகங்கள். அவர், நமது இதயங்களில் வாழ்கிறார். ஆனாலும், அவரைப் பற்றிய நினைவுகள் எழும்போதெல்லாம், அவரது உருவத்தை தரிசித்து மனதை நிரப்பிக்கொள்ள சில இடங்கள் வேண்டுமல்லவா? அதனால்தான் அவர் வாழ்ந்த காடுவெட்டி கிராமத்தில் மணிமண்டபம் அமைக்கப்படும்; நினைவகம் அமைக்கப்படும்; விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் கோனேரிக்குப்பத்தில் உள்ள வன்னியர் கல்வி அறக்கட்டளை சட்டக்கல்லூரி வளாகத்துக்கு குரு பெயர் சூட்டப்படும்.

அந்த வளாகத்தில் கம்பீரமாக நடப்பது போன்ற ஜெ.குரு உருவச்சிலை அமைக்கப்படும் என்று அறிவித்திருக்கிறேன். அவை ஒவ்வொன்றாக நிறைவேற்றப்பட்டு வருகின்றன. அதன் ஒரு கட்டமாக வன்னியர் கல்வி அறக்கட்டளை வளாகத்தில் 16.09.2018 அன்று காலை 10.00 மணிக்கு நடைபெறும் நிகழ்ச்சியில் ஜெ.குரு சிலையை நான் திறந்து வைக்கிறேன். ஜெ.குரு பெயர் சூட்டப்பட்ட சட்டக்கல்லூரி வளாகத்தை அறக்கட்டளை செயலாளர் பா.ம.க இளைஞரணித் தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் திறந்து வைக்கிறார்' என்று அழைப்பு விடுத்துள்ளார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!