`நீங்க மாதம் 5,000 ரூபாய் கொடுக்கணும்!’ - வசூல் வேட்டை நடத்திய டாஸ்மாக் பெண் மேலாளர் சிக்கினார்

வேலூர் மாவட்ட டாஸ்மாக் மேலாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புப் போலீஸார் நடத்திய சோதனையில், கணக்கில் வராத ரூ. 1,40,000 பறிமுதல் செய்யப்பட்டது. மாதம்தோறும் கடை ஒன்றுக்கு இரண்டாயிரம் முதல் ஐந்தாயிரம் வரை வசூல் செய்தது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. 

மேலாளர்

வேலூர் மாவட்டம், வேலூர் மற்றும் அரக்கோணம் என்று இரண்டு டாஸ்மாக் மாவட்டமாகப் பிரிக்கப்பட்டுள்ளது. வேலூர் டாஸ்மாக் மேலாளர் அலுவலகம் தோட்டப்பாளையத்தில் உள்ள தமிழ்நாடு வாணிப கிடங்கில் இயங்கி வருகிறது. இங்கு, டாஸ்மாக் மேலாளராக சோபியா ஜோதிபாய் கடந்த 5 மாதங்களாகப் பணியாற்றி வருகிறார். இந்நிலையில், இவர் பொறுப்பேற்ற நாள் முதல் இவரின் கட்டுப்பாட்டின் கீழ் வரும் 120 டாஸ்மாக் கடைகளில் 90 கடைகளில் பணியாற்றி வரும் விற்பனை மேற்பார்வையாளர்கள் மற்றும் விற்பனையாளர்களிடம் மாதம்தோறும் ரூ.2,000 முதல் ரூ3,000 வரை வசூல் வேட்டை நடத்தியுள்ளார். 

மேலும், விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு, நேற்று அனைத்து டாஸ்மாக் மேற்பார்வையாளர்களையும் அழைத்து அலுவலகத்தில் சிறப்புக் கூட்டம் போட்டுள்ளார். கூட்டத்தின் முடிவில், ஒவ்வொரு கடையின் விற்பனையாளர்களைத் தனித்தனியாக அழைத்து பணம் வசூல் செய்துள்ளார். அதோடு மட்டுமின்றி அவர்களிடம், "விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு அதிகளவில் மது விற்பனையாகும் என்பதால், கூடுதலாகப் பணம் கொடுத்துவிட்டுப் போங்க. இனிமேல் மாதாமாதம் வர வேண்டிய ரூபாய் கரெக்டாக வர வேண்டும் இல்லையனில் அதிகமாக விற்பனையாகும் பிராண்ட்கள் அந்தக் கடைக்கு நிறுத்தப்படும் என்று கூறியுள்ளார். மேலும், மூடிய கடைகளைத் திறக்க ஏற்பாடுகள் நடக்கிறது. அதனால் அந்தக் கடைக்கு விற்பனையாளர்கள் மற்றும் மேற்பார்வையாளர்கள் யாராவது வர விரும்பினால் ரூ. 50,000 கொடுக்க வேண்டும் என்று கேட்டதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்ததின் அடிப்படையில், வேலூர் லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர் அதிரடியாக வேலூர் டாஸ்மாக் பொது மேலாளர் அலுவலகத்தில் நேற்று சோதனை நடத்தினர். சோதனையில், சோபியா ஜோதிபாயின் கை பையில் இருந்து ரூ.75,000 மற்றும் அவரின் காரிலிருந்து ரூ. 25,000 மற்றும் டாஸ்மாக் ஊழியர்களிடமிருந்து வாங்கிய பணம் என் கணக்கில் வராத ரூ.1,40,000 ரூபாய் கைப்பற்றப்பட்டது. இதையடுத்து சோபியா ஜோதிபாய் மற்றும் கூட்டத்தில் கலந்துகொண்ட 15 ஊழியர்களிடம் போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில், சோபியா ஜோதிபாய் கட்டுப்பாட்டில் உள்ள 120 கடைகளிலிருந்து மாதம்தோறும் அதாவது, டாஸ்மாக் கடையில் ஒரு நாள் விற்பனை ரூ.1 லட்சம் இருந்தால், மாதம் 2,000 என்று, அதுவே 4 லட்சமாக இருந்தால், 5,000 என்று ரேட் நிர்ணயித்து வசூல் செய்து வந்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதற்கு உடன்படாத மேற்பார்வையாளர்கள் மற்றும் விற்பனையாளர்களை இடமாற்றம் மற்றும் சஸ்பெண்ட் செய்துவிடுவதாக மிரட்டி வந்துள்ளதும் தெரியவந்துள்ளது.

சராசரியாக ஒரு கடைக்கு ரூ.3,000 வசூல் செய்தாலே 120 கடைக்கு மாதத்துக்கு ரூ 3,60,000 ரூபாய் லஞ்சமாக வசூல் செய்யப்பட்டுள்ளது. கடந்த 7-ம் தேதி வேலூர் மண்டல ஊரமைப்பு துணை இயக்குநர் அலுவலகத்தில், லஞ்ச ஒழிப்பு போலீஸார் நடத்திய சோதனையில், கணக்கில் வராத ரூ. 4  லட்சம் பறிமுதல் செய்த சூடே ஆராத நிலையில் மீண்டும் ஒரு சம்பவம் நடந்திருப்பது வேலூர் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!