வெளியிடப்பட்ட நேரம்: 17:42 (13/09/2018)

கடைசி தொடர்பு:18:44 (13/09/2018)

நீண்டகால முழுமையான விபத்துக்காப்பீடு பாலிசி அவசியம்... ஏன்?

மூன்றாம் நபர் காப்பீடு மட்டும் எடுத்திருந்தால் நம்முடைய வண்டி தொலைந்தாலோ, அல்லது நாமாகவே விபத்தை ஏற்படுத்தி நமது வண்டி சேதமடைந்தாலோ, நமக்கு பலத்த காயம் ஏற்பட்டாலோ அதற்காக காப்பீடு கோரமுடியாது. முழுமையான காப்பீடு எடுத்திருந்தால் மட்டுமே முடியும். 

நீண்டகால  முழுமையான விபத்துக்காப்பீடு பாலிசி அவசியம்... ஏன்?

"புதுசா டூவீலர் வாங்கியிருக்கேன் மச்சான்! 75,000 ரூபாய், ரெடி கேஷ்ல வாங்கியிருக்கேன்! செம பந்தவா இருக்கு!"

"அதுக்கு இன்ஷூரன்ஸ் எடுத்தாச்சா?"

"அதெல்லாம் யாரு பார்த்தா? இன்ஷூரன்ஸும் இருக்குன்னுதான் சொன்னாங்க! நமக்கென்ன நீட்டுன இடத்துல கையெழுத்தப் போடவேண்டியதுதான்!"

விபத்துக் காப்பீடு

ஆம், ஆயிரங்களில் மட்டுமல்ல, லட்சங்கள் செலவழித்து கார்கள் வாங்கினால்கூட அந்த காருக்கு இன்ஷூரன்ஸ் செய்திருக்கிறார்களா, எந்த நிறுவனத்திலிருந்து இன்ஷூரன்ஸ் செய்யப்பட்டிருக்கிறது, என்னமாதிரியான இன்ஷூரன்ஸ் செய்யப்பட்டிருக்கிறது என்பது குறித்தெல்லாம் நாம் யோசிப்பதில்லை. எப்போதாவது வாகன விபத்தால் பலத்த காயம், உயிரிழப்பு, வாகனத்திற்குப் பெருஞ்சேதம் என்றாகும்போதுதான் விபத்துக்காப்பீடு பற்றியே சிந்திக்கத் தொடங்குகிறோம். இந்த இன்ஷூரன்ஸை ஒவ்வொரு ஆண்டும் புதுப்பிப்பதிலும்கூட அசட்டையாகத்தான் இருக்கிறோம். போக்குவரத்துக்காவலர்களால் மடக்கப்பட்டு கேள்வி கேட்கப்படும்போதுதான் "கண்டிப்பா எடுத்துடுறேன் சார்!" என்று கூறிவிட்டு, அதை புதுப்பிக்கச்செய்கிறோம். 

இப்படி விபத்துக்காப்பீடு இல்லாததாலும், புதுப்பிக்காததாலும் விபத்தில் சிக்கிய பலரும் சிகிச்சைக்கான காப்பீட்டுப் பணம் இல்லாமல் சரியான சிகிச்சை எடுக்கமுடியாமல் கைபிசைந்து நிற்கிறார்கள். இந்நிலையில் கோவையைச்சேர்ந்த மருத்துவர் ஒருவர், நீண்ட கால விபத்துக் காப்பீட்டை கட்டாயப்படுத்த வேண்டுமென்று சுப்ரீம் கோர்ட்டில் வழக்குத் தொடர்ந்ததில் உச்சநீதிமன்றம் அதை ஏற்றுக்கொண்டு தீர்ப்பளித்தது. புதிதாக வாகனங்கள் வாங்கும்போது நீண்டகால விபத்துக்காப்பீடு பாலிசியை விரும்பினால் மட்டும் எடுக்கலாம் என்றிருந்த நடைமுறையை மாற்றி, தற்போது கட்டாயப்படுத்தியுள்ளது. இதன்படி இரு சக்கர வாகனங்களுக்கு ஐந்தாண்டு காலத்திற்கும், நான்கு சக்கர வாகனங்களுக்கு மூன்றாண்டு காலத்திற்கும் கட்டாயம் இன்ஷூரன்ஸ் எடுத்தாக வேண்டும் என்று இன்ஷூரன்ஸ் ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (ஐ.ஆர்.டி.ஏ.) உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவு கடந்த செப்டம்பர் ஒன்றாம் தேதி முதல் நாடு முழுவதும் அமலுக்கு வந்துள்ளது.

விபத்துக் காப்பீடு

இதன்படி, புதிதாக வாகனம் வாங்குபவர்களிடம் மூன்றுவிதமான விபத்துக்காப்பீடு முறைகள் பரிந்துரைக்கப்படும். அவற்றில் ஏதேனும் ஒன்றை தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம் எனக்கூறப்பட்டுள்ளது. இரு சக்கர வாகனம் வாங்குபவர்கள், ஐந்தாண்டு காலத்திற்கு மூன்றாம் நபர் காப்பீடு மட்டும் வாங்கலாம். அல்லது ஓராண்டு மட்டும் முழுமையான காப்பீடும்(comprehensive), மற்ற நான்கு ஆண்டுகளுக்கு மூன்றாம் நபர் காப்பீடும் வாங்கலாம். அல்லது ஐந்தாண்டு காலத்திற்கும் முழுமையான காப்பீடு வாங்கலாம். அதேபோல நான்கு சக்கர வாகனம் வாங்குபவர்கள், மூன்றாண்டு காலத்திற்கும் மூன்றாம் நபர் காப்பீடு, அல்லது மூன்றாண்டு காலத்திற்கும் முழுமையான காப்பீடு அல்லது முதல் ஆண்டு மட்டும் முழுமையான காப்பீடும், மற்ற இரண்டு ஆண்டுகளுக்கு மூன்றாம் நபர் காப்பீடு மட்டும் வாங்கலாம். உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்புதான் தற்போது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

வாகனக் காப்பீடுசாலை விபத்து குறித்த வழக்குகளைக் கையாளும் வழக்கறிஞர் சுரேஷ் கூறும்போது, "ஐ.ஆர்.டி.ஏ.வின் இந்த உத்தரவை, வாகன விற்பனை நிறுவனங்கள் தங்களது விற்பனையை பாதிக்காதவண்ணம் செயல்படுத்துகின்றன. புதிதாக வாகனம் வாங்க வருபவர்களுக்கு முழுமையான விபத்துக்காப்பீடு தருவதாக இருந்தால் அதற்காக வசூலிக்கப்படும் பிரீமியம் தொகை பெரியதாக இருக்கும். இதனால் விற்பனை பாதிக்கப்படக்கூடும் என்று கருதி, அதுகுறித்து இவர்கள் தெரிவிப்பதில்லை. முழுமையான மூன்றாம் நபர் பாலிசி அல்லது ஓராண்டு முழுமையான பாலிசியை மட்டும் குறைந்த பிரீமியம் தொகையில் தந்துவிடுகிறார்கள். ஆனால், மூன்றாம் நபர் காப்பீடு மட்டும் எடுத்திருந்தால் நம்முடைய வண்டி தொலைந்தாலோ, அல்லது நாமாகவே விபத்தை ஏற்படுத்தி நமது வண்டி சேதமடைந்தாலோ, நமக்கு பலத்த காயம் ஏற்பட்டாலோ, அதற்காக காப்பீடு கோரமுடியாது. முழுமையான காப்பீடு எடுத்திருந்தால் மட்டுமே முடியும். 

ஆனால், இந்த விவரமெல்லாம் வாகனங்கள் வாங்குவோருக்குத் தெரிவதில்லை. வாகன விற்பனை மற்றும் இன்ஷூரன்ஸ் நிறுவனங்களும் இதுகுறித்து விழிப்புஉணர்வு ஏற்படுத்துவதில்லை. விழிப்புஉணர்வு இல்லாததால் வாகனம் வாங்குவோரிடமிருந்தும் பெரிதும் கேள்வி எழவில்லை. ஆனால், ஏதேனும் விபத்தில் சிக்கும்போதோ, வாகனம் தொலையும்போதோதான் இந்த காப்பீட்டின் உண்மை தெரியவரும். கண் கெட்டபின் சூரிய நமஸ்காரம் என்பதுபோல விபத்துக்குப்பிறகு தெரிய வருவதால் எந்த பயனும் கிடையாது. எனவே, முழுமையான பாலிசி எடுப்பது குறித்த விழிப்புஉணர்வை வாகன விற்பனை மற்றும் இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் ஏற்படுத்த வேண்டும். அப்போதுதான் பிரீமியம் தொகை அதிகமாக இருந்தாலும்கூட முழுமையான பாலிசி எடுக்க பொதுமக்கள் தாங்களாகவே முன்வருவார்கள். அதேபோல இந்த தீர்ப்பில், ஏற்கனவே வாகனங்கள் வைத்திருப்பவர்கள், காப்பீட்டை புதுப்பிப்பது குறித்து எதுவும் கூறப்படவில்லை. எனவே, ஏற்கனவே ஓராண்டு பாலிசி எடுத்தவர்கள் மீண்டும் ஓராண்டுக்கு மட்டுமே புதுப்பிக்க வாய்ப்புள்ளது. இந்தக் குறையும் சரிசெய்யப்பட வேண்டும்" என்றார்.

முழுமையான காப்பீடு குறித்த விழிப்புஉணர்வுப் பிரசாரம் செய்கிறீர்களா என தனியார் இன்ஷூரன்ஸ் நிறுவன மேலாளர் ஒருவரிடம் விசாரித்தபோது, "அலுவலகத்தில் இதுகுறித்த அறிவிப்பினை வைத்திருக்கிறோம். மற்றபடி பெரிய அளவில் பத்திரிகைகளில் விளம்பரப்படுத்தவில்லை. கடந்த மாதம் வரை ஓராண்டுக்கு மட்டுமே காப்பீடு செய்துவந்தவர்களுக்கு தற்போது ஐந்தாண்டு காலத்திற்கு காப்பீடு என்பதே பெருஞ்சுமையாகத் தெரியக்கூடும். மேலும், பிரீமியம் தொகை அதிகமிருப்பதாகக் கருதினால் வாடிக்கையாளர்கள் மற்ற நிறுவனங்களை நாடிச்செல்லக்கூடும் என்பதால் வாடிக்கையாளர்களுக்கு  எளிமையான காப்பீட்டு முறையையே செய்துதருகிறோம்." என்றார்.

வாகனப்பெருக்கம் அதிகரித்துள்ள சூழலில் வாகன விபத்துகளும் அதிகரித்து வருகின்றன. வாகனக் காப்பீட்டின் மதிப்பு, விபத்தில் சிக்கும்போதுதான் நமக்கு புரிய வரும். அப்படியில்லாமல், வருமுன் காப்போம் என்ற வகையில் முன்கூட்டியே முழுமையான காப்பீட்டு பாலிசி எடுப்பதே வாகன உரிமையாளர்களுக்கு நன்மை தரக்கூடியதாக இருக்கும். எனவே புதிதாக வாகனங்கள் வாங்குபவர்கள், பிரீமியம் தொகையை பெரிய சுமையாகக் கருதாமல் முழுமையான விபத்துக் காப்பீடு எடுக்க முன்வர வேண்டும். 
 


டிரெண்டிங் @ விகடன்