புது பைக்குக்கு பெட்ரோல் போடும்போது தீ விபத்து - இளைஞருக்கு நேர்ந்த சோகம்!

நெல்லையில் இருசக்கர வாகனத்துக்கு பெட்ரோல் நிரப்பும்போது எதிர்பாராத விதமாகத் தீப்பற்றியதில் இளைஞர் படுகாயம் அடைந்துள்ளார். அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

பெட்ரோல் பல்க்

நெல்லை பாளையங்கோட்டை பகுதியைச் சேர்ந்தவர், சுரேஷ் ஜெயக்குமார். இவர் சொந்தமாகக் கடை நடத்தி வந்தார். அவர் மறைந்த பின்னர் அந்தக் கடையை அவரின் மகன் ஆல்வின் நிர்வகித்து வந்தார். 19 வயது இளைஞரான ஆல்வின் கடந்த சில தினங்களுக்கு முன்பு இரு சக்கர வாகனம் ஒன்றை வாங்கியிருக்கிறார். அந்த வாகனத்துக்கு பெட்ரோல் நிரப்புவதற்காக இன்று ஒரு பெட்ரோல் பங்குக்கு சென்றுள்ளார். 

அப்போது, டேங்க் முழுவதையும் நிரப்புமாறு தெரிவித்ததால், பெட்ரோல் போடும் ஊழியர் டேங்கில் இருந்து வழியும் அளவுக்கு பெட்ரோல் போட்டுள்ளார். பின்னர் அங்கிருந்து புறப்பட்ட அவர் வாகனத்தை ஸ்டார்ட் செய்ய முயன்றபோது எதிர்பாராதவிதமாகத் தீப்பற்றியது. இதில், அவரின் உடல்மீது மளமளவெனத் தீ பரவியது. அதனால் அலறித் துடித்த அவர், வாகனத்தைக் கீழே போட்டுவிட்டு தரையில் விழுந்து உருண்டுள்ளார்.

பெட்ரோல் பங்க்கின் உள்ளேயே இந்தச் சம்பவம் நடந்ததால் பெட்ரோல் நிரப்புவதற்காக வந்திருந்த வாகன ஓட்டிகளும் அலறியடித்து அங்கிருந்து வெளியேறினார்கள். அப்போது, தீ பெட்ரோல் பங்க்கில் பரவிவிடாமல், அங்கிருந்த மேலாளர் பாலமுருகன் என்பவர் ஓடிவந்து தீ தடுப்பு உபகரணங்கள் மூலம் வாகனத்திலும் ஆல்வின் உடலிலும் பற்றி எரிந்த நீயை அணைத்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. 

உடல் முழுவதும் தீ பற்றியதால் பலத்த காயம் அடைந்த ஆல்வினை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்தச் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!