`குழந்தைகளைப் பிரிய மனம் இல்லை' - குடும்பத்துடன் தற்கொலை செய்த இளைஞர்!

நெல்லை மாவட்டத்தில் கணவன் மனைவி மற்றும் இரு குழந்தைகள் என ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

தற்கொலை செய்த குடும்பம்

சிவகாசி மாவட்டம் திருத்தங்கல் பகுதியைச் சேர்ந்தவர், மகேந்திரன். 38 வயதான இவர் திருப்பூரில் தங்கியிருந்து ஆயத்த ஆடை தயாரிப்பு நிறுவனத்தில் ஆடை வடிவமைப்பாளராகப் பணியாற்றி வந்தார். இவரின் மனைவி ரேவதி (28). இவர்களுக்கு 7 வயதில் கதிர்வேலு என்ற மகனும் அஸ்மிதா என்ற 3 வயது மகளும் இருந்தனர். மகேந்திரனுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு மஞ்சள் காமாலை நோய் ஏற்பட்டது. 

அதனால், ரேவதியின் சொந்த ஊரான விக்கிரமசிங்கபுரம் அருகே உள்ள சிவந்திபட்டி பகுதியில் தங்கியிருந்து மஞ்சள் காமாலைக்கு சிகிச்சை எடுத்து வந்துள்ளார். ஆனாலும் நோய் முற்றியதால், அவர் உயிர்பிழைப்பதே கடினம் என மருத்துவர்கள் தெரிவித்துவிட்டனர். நோயின் வீரியம் அதிகரித்தபடியே இருந்ததால் மிகுந்த மனவேதனையில் இருந்துள்ளார். மகேந்திரனுக்குக் குழந்தைகள் மீது அதிக பாசம் இருந்துள்ளது.

அதனால், தான் இறந்துவிட்டால் தன் மனைவியும் குழந்தைகளும் ஆதரவற்ற நிலைக்குத் தள்ளப்பட்டு விடுவார்களே என வருத்தத்துடன் பேசி வந்திருக்கிறார். குழந்தைகளைப் பிரிய மனம் இல்லாமல் தவித்து வந்த அவர், இன்று காலை குழந்தைகள் மற்றும் மனைவிக்கு உணவில் விஷம் கலந்து கொடுத்திருக்கிறார். அதைச் சாப்பிட்டதும் அனைவரும் உயிரிழந்தார்கள். அதன் பின்னர், மகேந்திரன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

இது குறித்து உறவினர்கள் கூறுகையில், ``மகேந்திரனுக்குக் குழந்தைகள் மீது பாசம் அதிகம். அவர்களைப் பிரிந்து இருக்கவே மாட்டார். கடந்த இரு தினங்களுக்கு முன்புதான் மகள் அஸ்மிதாவுக்கு பிறந்தநாள் வந்தது. அதற்கு கேக் வெட்டி சிறப்பாகக் கொண்டாடி மகிழ்ந்தார். நோயின் பிடியில் சிக்கியதால் மனம் உடைந்த நிலையில், குழந்தைகளைப் பிரிய மனம் இல்லாமல் இப்படிச் செய்துவிட்டானே’’ என வருந்தினார்கள்.

நோயின் தாக்கத்தால் பாதிக்கப்பட்ட இளைஞர், தன் குடும்பத்தைச் சேர்ந்தவர்களைக் கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  

Do you like the story?

Please Appreciate the Author by clapping!