பெண்ணைத் தாக்கிய முன்னாள் கவுன்சிலர் - ஒழுங்கு நடவடிக்கை எடுத்த தி.மு.க!

பியூட்டி பார்லரில், பெண்ணைத் தாக்கிய, தி.மு.க முன்னாள் கவுன்சிலர் செல்வகுமார் மீது ஒழுங்குநடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தி.மு.க தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் கவுன்சிலர் தி.மு.க

பெரம்பலூர் பாரதிதாசன் நகரில் வசித்து வரும் சத்யா, தனது பியூட்டி பார்லரை விரிவு படுத்துவதற்காக, தி.மு.க முன்னாள் கவுன்சிலர் செல்வகுமாரிடமிருந்து 25 லட்சம் ரூபாய் பணம் வாங்கியிருக்கிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு பணத்தை செல்வகுமார் திருப்பிக் கேட்டிருக்கிறார். பணத்தைக் கொடுக்க முடியாமல் இழுத்தடித்துள்ளார் சத்யா. கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு செல்வகுமார் சத்யாவிடம் பணத்தைத் திருப்பி தர கோரிப் பேசியபோது, சத்யா ஒருதலைபட்சமாகச் செல்வகுமாரின் குடும்பத்தைத் திட்டியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அவர், வெங்கடேசபுரத்தில் உள்ள பியூட்டி பார்லர்க்கு சென்று சத்யாவை சரமாரியாகத் தாக்கியிருக்கிறார்.

ஒழுங்கு நடவடிக்கை

 

இதில் காயமடைந்த சத்யா சிசிடிவி புட்டேஜ் ஆதாரங்களைக் கொண்டு பெரம்பலூர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில், அவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில், பெண்ணைத் தாக்கிய முன்னாள் கவுன்சிலர் மீது, ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தி.மு.க சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தி.மு.க பொதுச் செயலாளர் க.அன்பழகன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், `பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை மேற்கு ஒன்றியம், அன்னமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த மாவட்ட ஊராட்சிக்குழு முன்னாள் உறுப்பினர், எஸ்.செல்வகுமார் கழகக் கட்டுப்பாட்டை மீறியும் கழகத்துக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் வகையிலும் செயல்பட்டு வந்ததால், அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்பிலிருந்தும், தற்காலிகமாக நீக்கி வைக்கப்படுகிறார்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!