`காங்கிரஸுக்கு அந்த தகுதி கிடையாது' - பெட்ரோல் விலை உயர்வு விவகாரத்தில் விளாசும் இல.கணேசன்!

``பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு மத்திய, மாநில அரசுகள் காரணமில்லை. உலக அளவில் கச்சா எண்ணெய் விலையேற்றமும் டாலரின் மதிப்பு உயர்வும்தான் காரணம்” எனப் பா.ஜ.க தேசியக்குழு உறுப்பினர் இல.கணேசன் தெரிவித்துள்ளார்.

இல கணேசன்

தூத்துக்குடி மாவட்ட பா.ஜ.க அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த பா.ஜ.க எம்.பி இல.கணேசன், “2019-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுக்கானப் பணிகளை தற்போதே நாங்கள் தொடங்கிவிட்டோம். தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்குச் சென்று சட்டமன்றத் தொகுதி வாரியாக ஆய்வைத் தொடங்க உள்ளோம். பா.ஜ.க கூட்டணி வைத்துதான் போட்டியிடும். எந்தக் கட்சியுடன் கூட்டணி என்பது போகப்போகத்தான் தெரியும். அதற்கான காலம் இன்னும் கனியவில்லை.

கூட்டணிக்காக எந்தக் கட்சியுடனும் பேச்சுவார்த்தையை இன்னும் தொடங்கவில்லை. மீடியாக்களிடம் தெரிவித்த பிறகே பேச்சுவார்த்தையைத் தொடங்குவோம். பா.ஜ.க, தி.மு.க, கூட்டணி அமையுமா என்பது குறித்து தி.மு.க-வும் கற்பனை செய்யவில்லை. பா.ஜ.க-வும் கற்பனை செய்யவில்லை.

அருண்ஜெட்லி, விஜய் மல்லையா சந்திப்பு குறித்து சுப்பிரமணிய சுவாமி தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளது குறித்து அவரிடம்தான் கேட்க வேண்டும். சுப்பிரமணியன் சுவாமி சுதந்திரமாக, சகஜமாகப் பேசக்கூடியவர் அவருக்கு அந்த சுதந்திரத்தை பா.ஜ.க, வழங்கியுள்ளது. குற்றச்சாட்டு என்பது பொதுவானது. ஒருவர் மீது யார் வேண்டுமானாலும் குற்றச்சாட்டு சுமத்தலாம். அது போலத்தான் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. நிரூபிக்கப்படவில்லை. அதற்காக சி.பி.ஐ விசாரணையைத் தொடங்கியுள்ளது. விசாரணையின் முடிவில் தெரியவரும்.

சென்னையிலிருந்து தூத்துக்குடி வந்த விமானத்தில் எழுந்து கோஷம் எழுப்பினார் ஷோபியா என்ற ஆராய்ச்சி மாணவி. சக பயணிகள் முன்பு எழுந்து கோஷம் எழுப்புவதே விமானப் பயணிகள் சட்டத்தின்படியே தவறானது, ஒழுங்கு விதி மீறலும்கூட. அதனால்தான், விமானத்தில் எதுவும் பேசாமல் விமானத்தைவிட்டு வெளியே வந்த பிறகுதான் அந்தப் பெண்ணிடம் கேள்வி எழுப்பியுள்ளார் தமிழிசை.

``எனக்குப் பேச்சுரிமை இருக்கிறது” என அந்தப் பெண் கூறியுள்ளார். இதுவா பேச்சுரிமை. அப்படியென்றால், பொது இடத்தில் எந்த அரசியல் தலைவரும் நடமாட முடியாது. ஷோபியா விவகாரத்தில் சமரசம் கிடையாது. அவரது பின்னணி குறித்து காவல்துறை விசாரணை நடத்த வேண்டும்.

பெட்ரோல், டீசல் விலை உயர்வு பொதுமக்களை அதிகம் பாதித்துள்ளது. இதற்கு மத்திய, மாநில அரசுகள் காரணம் அல்ல. உலக அளவில் டாலரின் மதிப்பும், கச்சா எண்ணெய்யின் மதிப்பு உயர்ந்ததும்தான் முக்கிய காரணம். இதன் விலை குறைப்புக்காகப் பிரதமர் மோடி விரைவில் நடவடிக்கை எடுப்பதாக அறிவித்துள்ளார். இதை ஜி.எஸ்.டி வரிக்குள் கொண்டுவர அனைத்து மாநில அரசுகளும் குரல் கொடுக்க வேண்டும். பெட்ரோல், டீசல் விலை உயர்வை குறித்து யார் விமர்சனம் செய்தாலும் பொறுத்துக்கொள்ள முடியும். ஆனால், காங்கிரஸுக்கு அந்த யோக்கியதை கிடையாது” என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!