வெளியிடப்பட்ட நேரம்: 19:41 (14/09/2018)

கடைசி தொடர்பு:19:41 (14/09/2018)

அமைச்சர் வேலுமணியின் ஊழல்கள்!அம்பலபடுத்தும் அறப்போர் இயக்கம்

அமைச்சர் வேலுமணியின் ஊழல்கள்!அம்பலபடுத்தும் அறப்போர் இயக்கம்

தமிழகத்தில்  நிலவி வரும் பல்வேறு பிரச்னைகளால் ஏற்கெனவே அ.தி.மு.க ஆட்சி மீது தமிழக மக்கள் மிகுந்த அதிருப்தியில் உள்ள நிலையில், தற்போது அமைச்சர்கள் மீதான ஊழல்கள் பட்டியல் தமிழக அரசியல் களத்தை அதிரச் செய்துள்ளது. சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் குட்கா ஊழல் விவகாரம் முடிவதற்குள், வேலுமணியின் ஒப்பந்த ஊழல் விவகாரம்  விஸ்வரூபம் எடுத்துள்ளது. 

தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி கட்டுமான ஒப்பந்தங்கள், சாலை மற்றும்  உள்கட்டமைப்புப் பணிகள், பணியாளர்கள் நியமனம் போன்ற பல்வேறு ஒப்பந்தங்களில் அமைச்சர் வேலுமணி கோடிக்கணக்கில் முறைகேடு செய்திருப்பதாகத் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் அம்பலப்படுத்தியுள்ளது அறப்போர் இயக்கம்.

இதுகுறித்துப் பேசிய அந்த இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் வெங்கடேசன், "உள்ளாட்சித்துறை அமைச்சராகப் பதவிக்கு வந்தது முதல், கோவை மாநகராட்சியில் கே.சி.பி இன்ஜினீயர்ஸ் லிமிடெட் , செந்தில் அண்ட் கோ, வரதன் இன்ஃப்ராஸ்ட்ரக்சர், கன்ஸ்ட்ரானிக்ஸ் இந்தியா போன்ற நிறுவனங்களுக்கு அமைச்சசர் ஒப்பந்த விதிகளை மீறி ஒப்பந்தம் வழங்கி  இருப்பது அம்பலமாகியுள்ளது. 

குறிப்பாகத் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் சென்னை மாநகராட்சியில்  சுகாதாரத்துறையில் வழங்கப்பட்ட ஒப்பந்தங்கள் குறித்து தகவலைக் கேட்டிருந்தோம். அதற்கு அரசு தரப்பிலிருந்து தகவல் வழங்கப்பட்டிருந்தது. அந்தத் தகவலின் அடிப்படையில்  சுகாதாரத்துறையில் நடைபெற்ற பணியாளர்கள் ஒப்பந்தத்தில் அமைச்சர் வேலுமணி ஒப்பந்த விதிகளை மாற்றி ஒப்பந்தம் வழங்கியது தெரியவந்தது. அதைத் தொடர்ந்தே மற்ற துறைகளில் அவர் வழங்கிய ஒப்பந்தங்கள் குறித்து, விசாரிக்க ஆரம்பித்தோம். அதில் பல திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்தன. தொடர்ந்து தீவிர விசாரணையில் இறங்கியபோது, மேலே குறிப்பிட்ட  ஐந்துக்கும் மேற்பட்ட நிறுவனங்களுக்கு ஒப்பந்தங்கள் அமைச்சர் தொடர்ந்து வழங்கியது கண்டுபிடிக்கப்பட்டது.

அமைச்சர் வேலுமணி  

ஆதிக்கம் செலுத்தும் கே.சி.பி...

"குறிப்பாக, கே.சி.பி இன்ஜினீயர்ஸ் லிமிடெட்  மற்றும் வரதன் இன்ஃப்ராஸ்ட்ரெக்சர்ஸ் ஆகிய நிறுவனங்களுக்கு 100 கோடி ரூபாய் டெண்டர் ஒதுக்கப்பட்டுள்ளது. 2011 - 2012  ஆகிய ஆண்டுகளில் கே.சி.பி நிறுவனத்தின் வருவாய் 28 கோடியாக இருந்த நிலையில், 2014 - 2015-ல்  உள்ளாட்சித்துறை அமைச்சராக வேலுமணி பதவி ஏற்றவுடன் அந்த நிறுவனத்தின் வருமானம் இரண்டு மடங்கு அதிகரித்து 100 கோடியாக உயர்ந்துள்ளது. கடந்த நான்கு ஆண்டுகளில் கே.சி.பி நிறுவனத்துக்கு மட்டும் சுமார் 400 கோடி ரூபாய்க்கு அரசுத் தரப்பிலிருந்து டெண்டர் கொடுக்கப்பட்டுள்ளது .  

மேலும், 2015-ல் சென்னையில் நடைபெற்ற சாலை ஒப்பந்தங்களில் 98 கோடி ரூபாய்க்கு கே.சி.பி நிறுவனத்துக்கு ஒப்பந்தம் கொடுக்கப்பட்டுள்ளது. இதனுடைய இயக்குநர்களில் ஒருவர் ராஜன் சந்திரசேகர். இவர் அமைச்சர் வேலுமணிக்கு மிகவும் நெருங்கியவர்  என்பதாலேயே பெரும்பாலான ஒப்பந்தங்கள் இவருக்குக் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த ராஜன் சந்திரசேகர் அமைச்சர் வேலுமணிக்கு நெருங்கியவர் மட்டுமல்லாமல், கோவை மாவட்ட அ.தி.மு.க இளைஞர்அணி அமைப்பின் பொதுச் செயலாளர் மற்றும் 'நமது அம்மா' நாளிதழின் பப்ளிஷரும் ஆவார். இதேபோன்று அமைச்சர் வேலுமணியின் மிகுந்த செல்வாக்கைப் பெற்ற மற்றொரு நிறுவனம் 'வரதன் இன்ஃப்ராஸ்ட்ரெக்சர்'. இந்த நிறுவனம்  நடப்பாண்டில் அதாவது, கடந்த ஐந்து மாதங்களில் சென்னை மாநகராட்சியின் சுகாதாரத்துறையில் பணிபுரிவதற்கான பணியாளர்களை ஒப்பந்த அடிப்படையில் வழங்கியுள்ளது. இந்த ஒப்பந்தத்தின் மதிப்பு சுமார் 13 கோடி ரூபாய் ஆகும். இப்படித் தொடர்ந்து இதுவரை இந்நிறுவனம் பெற்ற டெண்டர்களின் மொத்த மதிப்பு 150 கோடி ரூபாய் ஆகும்.

ஜெயராம் வெங்கடேசன்

வரதன் இன்ஃப்ராஸ்ட்ரக்சருக்காகத் தளர்த்தப்பட்ட ஒப்பந்த விதிகள்...

இதில் வரதன் இன்ஃப்ராஸ்ட்ரக்சர்ஸ் நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட  பணியாளர்கள் ஒப்பந்தத்தில் மிகப்பெரிய முறைகேடு நடந்துள்ளது. அதாவது, இந்த டெண்டரில் பங்கேற்கும் நிறுவனங்கள் மூன்று ஆண்டுகளில் 20 கோடி ரூபாய்க்கு மேல் வருவாய் மிகாமல் இருக்க வேண்டும் என்பது விதிமுறை. ஆனால், வரம்புக்குள் இல்லாத வரதன் இன்ஃப்ராஸ்ட்ரக்சர்ஸ் லிமிடெட்  நிறுவனத்துக்கு மறைமுகமாக விதிகளைத் தளர்த்தி ஒப்பந்தத்தை இறுதி செய்திருப்பதும் தெரிய வந்துள்ளது. இந்த நிறுவனம் சந்திரபிரகாஷ் என்பவரின் தாயான சுந்தரி என்றவரின் பெயரில் இயங்குகிறது. இந்த சந்திர பிரகாஷ் கே.சி.பி நிறுவனத்தின் பங்குதாரராகவும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது .

மேலும், வேலுமணியின் சகோதரர் அன்பரசனுடைய 'செந்தில் அண்ட் கோ' நிறுவனத்துக்கு 10 கோடிக்கு மேல் ஒப்பந்தம்  வழங்கப்பட்டுள்ளது. இது மட்டுமல்லாமல் வேறு சில நிறுவனங்களான காஸ்ட்ரானிக்ஸ் இந்தியா, ஆலயம் பவுண்டேசன் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு கோடிக்கணக்கில் ஒப்பந்தங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த நிறுவனங்கள் அனைத்தும் அமைச்சர் வேலுமணிக்கு நெருக்கமானவை என்பது தெரிய வந்துள்ளது. அமைச்சர் வேலுமணியின் ஊழல்கள் குறித்து லஞ்ச ஒழிப்புத்துறைக்கு புகார் அறப்போர் இயக்கம் சார்பில் அனுப்பப்பட்டுள்ளது. 'ஒப்பந்த விதிகளை மீறியது, அதிகார துஷ்பிரேயோகம் செய்தது போன்றவற்றை ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என அந்தப் புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது" என்றார் ஜெயராம் வெங்கடேசன்.

இந்த ஊழல் புகார் குறித்துக் கேட்பதற்காக அமைச்சர் வேலுமணியைத் தொடர்பு கொண்டபோது, நமது தொலைபேசி அழைப்பை அவர் ஏற்கவில்லை. உரிய விளக்கம் அளிக்கும் பட்சத்தில் பரிசீலனைக்குப் பிறகு பிரசுரிக்கப்படும்.


டிரெண்டிங் @ விகடன்