நடுரோட்டில் பழுதாகி நின்ற அரசுப் பேருந்து - டென்ஷனான டிராஃபிக் போலீஸார்!

தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் தொகுதியான கரூர் நகரத்தில் நேற்று இரவு அரசுப் பேருந்து ஒன்று பழுதாகி நடுரோட்டில் நிற்க அதைப் போக்குவரத்து போலீஸார் தள்ளிய சம்பவம் மக்களிடம் முணுமுணுப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

 அரசுப் பேருந்து  

தமிழக போக்குவரத்துக் கழகங்கள் சார்பாக மாநிலம் முழுக்க இயக்கப்படும் பேருந்துகளின் 'தரத்தை' பற்றி அனைவருக்கும் தெரியும். சென்றுகொண்டிருக்கும்போதே பாதியில் ரிப்பேராகி நிற்பது, வேகமாகப் போகும்போது பிரேக் பிடிக்காமல்போவது, மழைக்காலங்களில் பேருந்துக்குள் நீர் ஒழுகுதல் என அரசுப்பேருந்துகளின் தரம் உள்ளது. இந்த நிலையில், தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சரான எம்.ஆர்.விஜயபாஸ்கரின் தொகுதியான கரூரில் நேற்று இரவு பேருந்து நிலையம் அருகே ஓர் அரசுப் பேருந்து பழுதாகி நடுரோட்டில் நின்று அங்கு போக்குவரத்தை சரி பண்ணிக்கொண்டிருந்த போலீஸாரை திணறவைத்துவிட்டது. திருச்சி டு ஈரோடு செல்லும் அரசுப் பேருந்து ஒன்று கரூர் பேருந்து நிலையத்திலிருந்து கிளம்பி  வெளிவந்தபோது, ரவுண்டானா அருகே நடுரோட்டில் பழுதாகி நின்றுவிட்டது. உடனே கண்டக்டரும், ஓட்டுநரும் பயணிகளை இறங்கித் தள்ளச் சொன்னார்கள்.

"காசு கொடுத்து டிக்கெட் வாங்கிப் பயணிக்கும் எங்களுக்கு என்ன பஸ்ஸை தள்ளுறது விதியா? போக்குவரத்துத்துறை அமைச்சர் தொகுதியில் ஓடும் பஸ்ஸே சரியில்லை. நல்லா பஸ்ஸா விடாம, இப்படி ஓட்டை உடைசல் பஸ்ஸை ஓடவிடுறீங்களே. நாங்களெல்லாம் தள்ள முடியாது" என்று மறுத்துவிட்டனர். இதனால் செய்வதறியாது ஓட்டுநரும் கண்டக்டரும் கையைப் பிசைந்தனர். நகரின் முக்கிய பகுதி என்பதால்,போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. போக்குவரத்தை சரிசெய்துகொண்டிருந்த போக்குவரத்து போலீஸாருக்குத் தலைவலியை ஏற்படுத்த, ஓடோடி வந்த அவர்கள் பஸ்ஸை எடுக்கும்படி சத்தம் போட்டனர். நிலவரத்தை அறிந்ததும், 'சார் கொஞ்சம் தள்ளுங்க' என்று பயணிகளிடம் கேட்டனர். முதலில் வரத் தயங்கிய பயணிகள் அதன் பிறகு போலீஸாருடன் இணைந்து  பேருந்தைத் தள்ளினர். நூறடி சென்ற பிறகே ஸ்டார்ட் ஆனது. இதன் பிறகே போக்குவரத்துப் பிரிவு போலீஸார் நிம்மதியடைந்தனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!