வெளியிடப்பட்ட நேரம்: 20:48 (13/09/2018)

கடைசி தொடர்பு:22:06 (13/09/2018)

கே.சி.பழனிசாமி வைத்த செக் - ஒன்றரை மணி நேரத்துக்கும் மேலான ஆலோசனையில் அ.தி.மு.க!

அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் முதல்வர், துணை முதல்வர் தலைமையில் அக்கட்சியின் உயர்மட்ட குழு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் வழிகாட்டுதல் குழு அமைப்பது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

உயர்மட்ட குழுக் கூட்டம்

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க  தலைமை அலுவலகத்தில், கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், உயர்மட்ட குழு ஆலோசனைக்கூட்டம் ஒன்றரை மணி நேரமாக  நடைபெற்று வருகிறது. இதில் அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி, ஜெயகுமார் மற்றும் கட்சி மூத்த நிர்வாகிகள்  வைத்தியலிங்கம், கே.பி.முனுசாமி உள்ளிட்ட 6 பேர்கள் பங்கேற்றுள்ளனர். அ.தி.மு.க அடிப்படை சட்டதிட்ட விதிகளுக்கு எதிராக, ஓ.பன்னீர் செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் செயல்பட்டுள்ளதாக கூறி, கே.சி.பழனிசாமி டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்தவழக்கு விசாரணையை 4 வாரத்துக்குள் முடித்து வைக்க தேர்தல் ஆணையத்துக்கு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கை எதிர்கொள்வது குறித்து உயர்மட்ட குழுக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு வருவதாக தெரிகிறது. அதேபோல,  வழிகாட்டுதல் குழு உருவாக்குவது தொடர்பாகவும், கன்னியாகுமரி மற்றும் சென்னையில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவை  நடத்துவதற்கான ஆயத்த வேலைகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. திருவாரூர், திருப்பரங்குன்றனம் இடைத்தேர்தல் தொடர்பாகவும் இந்த கூட்டத்தில் பேசப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. மேலும், அ.தி.மு.க உறுப்பினர் சேர்க்கை மந்த நிலையில் உள்ளதால், அதை அதிகப்படுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.