வெளியிடப்பட்ட நேரம்: 21:24 (13/09/2018)

கடைசி தொடர்பு:19:05 (14/09/2018)

`நாங்க சண்டை போட்டா எங்களுக்கே அறிவுரை சொல்லுவா' - `குணமா சொல்லணும்' வைரல் சுட்டியின் பெற்றோர் பேட்டி!

ஸ்மித்திகா

"அடிச்சா தப்பு..! குணமா வாயில சொல்லணும். திட்டாம அடிக்காம வாயில சொல்லணும்" - கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் அதிகம் வைரலான வார்த்தைகள் இவைதான்.  தன்னை மிரட்டும் தன் தாயிடம் அழுதுகொண்டே அந்த மழலை பேசும் சில நிமிட காட்சிகளை இணையத்தில் திரும்ப திரும்பப் பார்த்து ரசித்தார்கள் நெட்டிசன்கள்.

அந்த மழலை சுட்டியின் பெயர் ஸ்மித்திகா. திருப்பூரில் உள்ள மண்ணரை என்ற பகுதியில் வசித்து வரும் அவரை, விடுமுறை நாளான விநாயகர் சதுர்த்தியன்று அவரது வீட்டில் சந்தித்தோம். "அந்த வீடியோ இவ்வளவு பேமஸாகும்னு நாங்கள் யாருமே நினைத்துப் பார்க்கலைங்க என்றவாறு சிறுமி ஸ்மித்திகாவின் தந்தை பிரகாஷ் கூச்சப்பட, தாய் பிரவீனா பட்டென பேச துவங்கினார். "ஸ்மித்திகா இப்போ யூ.கே.ஜி படிக்கிறா. எப்போதுமே துறுதுறுவென்று சுட்டித்தனத்தோடு இருந்தாலும், படிப்பில் இவள் ரொம்பவே கெட்டிக்காரிதான். சமத்தான பொண்ணு.

விடுமுறை நாட்களில் பக்கத்து வீட்டு குழந்தைகளுடன் விளையாடும்போதுகூட, பள்ளிக்கூடத்தில் கற்றுக்கொடுத்த பாடல்களை பாடியும், கார்ட்டூன் நிகழ்ச்சிகளில் வரும் வசனங்களை அப்படியே தத்ரூபமாக பேசியும் விளையாடிக்கொண்டு இருப்பாள். சில சமயங்களில் நானும் என் கணவரும் சீரியஸாக வாக்குவாதம் செய்துகொண்டு இருந்தால்கூட, நடுவில் புகுந்து எங்களுக்கே அறிவுரை கூறுவதுபோல பேசுவாள்.

ஸ்மித்திகா

 

குறிப்பாக அன்றைய தினம் ஸ்மித்திகா பள்ளிக்கூடம் சென்றபோது அவளுக்கு சாப்பிட சில தின்பண்டங்களை கொடுத்து அனுப்பியிருந்தோம். ஆனால் அதை சாப்பிடாமல் அப்படியே திரும்பக்கொண்டு வந்துவிட்டாள். அதைப் பார்த்துவிட்டு, ஏன் பாப்பா இப்படி பண்ணின? என்று என் கணவரும் அவளை கண்டிக்க ஆரம்பித்தார். உடனே கோபப்பட்ட ஸ்மித்திகா அவரை அடிப்பதற்குப் பாய்ந்தாள். நான் அவளை தடுத்து உட்கார வைத்து, 'இப்படியெல்லாம் நீ செய்யலாமா?, உன்னையும் நாங்கள் அடிக்கட்டுமா? என்றவாறு அதட்டியபோதுதான், அவள் அழுதுகொண்டே அவ்வாறு பேச துவங்கினாள். உடனே அதை வீடியோவாக எடுத்து வைத்திருந்தேன். அதன்பிறகு 10 நாட்கள் கழித்து என்னுடைய தோழி ஒருவருக்கு அந்த வீடியோவை அனுப்பி வைத்தேன். அவர்தான் அதை பேஸ்புக்கில் பதிவேற்றியிருக்கிறார். ஆனால் அந்த வீடியோ ஊர் உலகத்துக்கே பரவி வைரலாகிவிட்டதுதான் ஆச்சர்யமாக இருக்கிறது என்றார் அதே ஆச்சர்யத்துடன்.

சிறுமி ஸ்மித்திகா இப்போது அப்பகுதியின் முக்கிய பிரபலமாகிவிட்டார். ஸ்மித்திகாவை சந்திக்கும் பலரும் அந்த டயலாக்கை ஒருமுறை சொல்லுமாறு அன்பு கட்டளையிட்டு கேட்டு செல்கிறார்கள்.