வெளியிடப்பட்ட நேரம்: 23:00 (13/09/2018)

கடைசி தொடர்பு:23:00 (13/09/2018)

`அராஜக செயல்களில் ஈடுபடுபவர்களை தி.மு.க அனுமதிக்காது' - ஸ்டாலின் எச்சரிக்கை!

``தனிப்பட்ட பிரச்னைகள் - விருப்பு வெறுப்புகளைக் கொண்டு இதுபோன்ற அராஜக செயல்களில் ஈடுபடுபவர்களை கழகம் அனுமதிக்காது!” என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், தி.மு.கவினருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மு.க.ஸ்டாலின்

பெரம்பலூரில், தி.மு.க முன்னாள் கவுன்சிலர் செல்வகுமார் என்பவர், பியூட்டி பார்லர் நடத்தி வரும் சத்யா என்ற பெண்ணை சரமாரியாக தாக்கினார். இந்த சி.சி.டி.வி காட்சிகளில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதனிடையே, சம்பந்தப்பட்ட பெண், காவல்நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில், செல்வகுமார் மீது வழக்குபதிவு செய்யப்பட்டு அவர் கைது செய்யப்பட்டார். இதனிடையே, அவரை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கி தி.மு.க தரப்பில் அறிக்கை வெளியிடப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக, மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், ``கழகத்திற்கு அவப்பெயர் உண்டாக்கும் விதத்தில், பெரம்பலூரில் பெண்மணி ஒருவர் மீது தாக்குதல் நடத்தியவர் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கப்பட்டிருக்கிறார். தனிப்பட்ட பிரச்னைகள் - விருப்பு வெறுப்புகளைக் கொண்டு இதுபோன்ற அராஜக செயல்களில் ஈடுபடுபவர்களை தி.மு.கழகம் அனுமதிக்காது!” என்று பதிவிட்டுள்ளார். மேலும் ``தனிநபரை விட கழகமே உயர்ந்தது என்ற உணர்வின்றி செயல்படுபவர்களையும், பொதுமக்களை அச்சுறுத்தும் வகையிலும், பெண்களிடம் வரம்பு மீறி ரவுடித்தனமான செயல்களில் ஈடுபடுவோர் என - யாராக இருந்தாலும் கழக விதிகளின்படி கடுமையாக தண்டிக்கப்படுவீர்கள் என எச்சரிக்கை விடுக்கிறேன்!” என்றும் தெரிவித்துள்ளார்.