வெளியிடப்பட்ட நேரம்: 00:30 (14/09/2018)

கடைசி தொடர்பு:00:30 (14/09/2018)

விநாயகர் சதுர்த்தி தினத்தன்று கும்கியாக பயிற்சி முடித்த 7 யானைகள்!

நீலகிரி மாவட்டம் தெப்பக்காடு யானைகள் முகாமில் பராமரிக்கப்படும் 4, கேரள வனத்துறைக்கு சொந்தமான 3 யானைகளுக்கும் கடந்த 3 மாதங்களாக அளிக்கப்பட்டு வந்த கும்கி பயிற்சி இன்று நிறைவு பெற்றது.

தமிழகத்தின் பல பகுதிகளில் வனங்கள் அழிக்கப்படுவது, மனித - விலங்கு மோதல்களுக்குக் காரணமாகியுள்ளது. குறிப்பாக யானைகள் அதிகம் வாழும் தமிழகம், கேரளா, கர்நாடகா, அஸ்ஸாம், கோவா, மகாராஷ்ட்ரா உள்ளிட்ட மாநிலங்களில் யானை - மனித மோதல்கள் வரும் காலங்களில் அதிகரிக்கலாம் என வன உயிரியல் ஆர்வலர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். கும்கி யானைகளால் மட்டுமே வாகனங்கள் செல்ல முடியாத இடங்களுக்குச் சென்று காட்டு யானைகளை விரட்ட முடியும். மேலும், கும்கி யானைகள் இருந்தால் வனத்துறை பணியாளர்கள் பாதுகாப்பாகக் காட்டு யானைகள் அருகே சென்று பணியாற்ற முடியும். தெப்பக்காடு யானைகள் முகாமில், முதுமலை, விஜய், வசீம் ஆகிய கும்கி யானைகள் மட்டுமே உள்ளன. இந்த யானைகள் கேரளா உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்குச் சென்று யானைகளை விரட்டவும் பிடிக்கவும் உதவியுள்ளன. இந்தக் கும்கிகளுக்கும் வயதாகி வருவதால், எதிர் வரும் சில ஆண்டுகளில் அவற்றுக்கும் ஓய்வளிக்க வேண்டிய நிலை ஏற்படும் என்பதால், அடுத்த தலைமுறை கும்கி யானைகளை உருவாக்க வேண்டிய கட்டாயத்தில் வனத்துறையினர் உள்ளனர். 

இந்நிலையில், முதுமலையில் பராமரிக்கப்படும் பொம்மன், கிருஷ்ணா, ஸ்ரீநிவாசன் மற்றும் சமீபத்தில் வண்டலூர் உயிரியல் பூங்காவிலிருந்து கொண்டுவரப்பட்ட கிரி ஆகிய குட்டி யானைகளுக்குக் கும்கி பயிற்சி அளிக்கப்பட்டது. அந்த யானைகளுடன் கேரள மாநிலம் வயநாடு முத்தங்கா வனச் சரணாலயம் வளர்ப்பு யானை சூரியன்,  பத்தினம்திட்டா காேணி யானைகள் முகாம் வளர்ப்பு யானை சுரேந்தர், எர்ணாகுளம் கோடநாடு முகாம் வளர்ப்பு யானை நீலகண்டன், ஆகிய வளர்ப்பு யானைகளுக்குக் கடந்த ஜூன் 15ம் தேதி முதல் நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகம், தெப்பக்காடு யானைகள் முகாமில் பயிற்சி அளிக்கப்பட்டது.

இந்த பயிற்சி முகாமில், சங்கிலியால் கட்டப்பட்ட மரங்களை இழுத்தல், கீழ்ப்படிதல், யானைகளைத் தள்ளுதல், காட்டு யானையைத் துரத்துவது, காட்டு யானைக் காலில் சங்கிலி கட்டுவது,காலில் கட்டப்பட்ட சங்கிலியை மிதித்து யானையை நிறுத்துவது, பிடிபட்ட காட்டு யானையை லாரியில் ஏற்றுவது, கரோல் கட்டுவது, சுற்றுலாப்பயணிகளைச் சவாரி ஏற்றிச் செல்வது உள்ளிட்ட பயிற்சிகள் தெப்பக்காடு யானைகள் முகாமில் உள்ள மூத்த மாவுத்துகள் (தலைமை பாகன்) உதவியுடன் பயிற்சி  அளிக்கப்பட்டுள்ளது. 

கும்கி பயிற்சியின் நிறைவு விழா இன்று தெப்பக்காடு யானைகள் முகாமில் நடந்தது. இதில் தமிழ்நாடு முதன்மை வனப் பாதுகாவலர் ரகுநாதன், முதுமலை புலிகள் காப்பக இயக்குநர் உலகநாதன், துணை இயக்குநர் செண்பகப்பிரியா மற்றும் கேரள வனத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதில் கேரளாவில் இருந்து கும்கி பயிற்சியில் கலந்து காெண்ட மாவுத்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. 

இது குறித்து தமிழ்நாடு முதன்மை வனப் பாதுகாவலர் ரகுநாதன் கூறுகையில், ‛‛மனித - யானை மோதல் அதிகரித்து வருவதால் ஒவ்வொரு முறையும் தமிழகத்தில் இருந்து கேரளாவிற்கு கும்கி யானைகளை அழைத்துச் செல்ல வேண்டியுள்ளது. கேரள மாநிலத்தில் உள்ள யானைகள் முகாமில் சுமார் 30 யானைகள் பராமரிக்கப்பட்டு வரும் நிலையில், அதில் தேர்வு செய்யப்பட்ட யானைகளுக்குக் கும்கி பயிற்சி அளிக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தனர். இது தொடர்பாக தமிழக அரசிடம் உரிய அனுமதி பெற்று இந்த பயிற்சி அளிக்கப்பட்டது. 90 நாட்கள் இந்த பயிற்சி நடந்தது. எவ்வித துன்புறுத்தலும் இல்லாமல், சிறப்பான முறையில் பயிற்சியளிக்கப்பட்டுள்ளது.

உலக அளவில் தமிழகத்தில் யானைகளுக்கு அளிக்கப்படும் பயிற்சி தான் தலைசிறந்தது என நான் கருதுகிறேன். கேரள முதன்மை வனப்பாதுகாவலர் தற்போது பயிற்சி பெற்றுள்ள கேரள யானைகளுக்கு தாெடர்ந்து அடுத்த கட்ட பயிற்சியளிக்கவும் கோரிக்கை வைத்துள்ளார். அதேபாேல, கேரள வனத்துறையினர், கேரள முகாம்களில் உள்ள மேலும் 5 யானைகளுக்குக் கும்கி பயிற்சி அளிக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர். அரசு அனுமதி பெற்று அதற்கான முயற்சிகள் எடுக்கப்படும்,’’என்றார். 

பின்னர் கேரளா மற்றும் தமிழக வனத்துறை அதிகாரிகள் முன்னிலையில், பயிற்சி பெற்ற கேரள கும்கி யானைகள் காட்டு யானையைப் பிடித்து லாரியில் ஏற்றுவது போன்ற ஒத்திகையைச் செய்து காண்பித்தன. தாெடர்ந்து தெப்பக்காடு யானைகள் முகாமில் உள்ள கோயிலில், கிருஷ்ணா என்ற யானை பூஜை செய்தது, அங்குக் கூடியிருந்த சுற்றுறலாப்பயணிகளை  கவர்ந்தது. பூஜைக்குப் பிறகு யானைகளுக்குச் சிறப்பு உணவு அளிக்கப்பட்டது, சுற்றலாப்பயணிகளுக்கு பொங்கலும் சுண்டலும் விநாயகர் சதுர்த்தி சிறப்பாக வழங்கப்பட்டன. கேரள யானைகள் இன்றுடன் சொந்த ஊருக்குத் திரும்புகின்றன. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க