கூடங்குளம் 2-வது அணு உலை மீண்டும் செயல்படத் தொடங்கியது!

பழுது காரணமாக மின் உற்பத்தி நிறுத்தி வைக்கப்பட்ட கூடங்குளம் இரண்டாவது அணு உலை மீண்டும் செயல்படத் தொடங்கியது. அதனால் தமிழகத்துக்கு கூடுதலாக மின்சாரம் கிடைக்கும் வாய்ப்பு உருவாகி இருக்கிறது.

பழுது காரணமாக மின் உற்பத்தி நிறுத்தி வைக்கப்பட்ட கூடங்குளம் இரண்டாவது அணு உலை மீண்டும் செயல்படத் தொடங்கியது. அதனால் தமிழகத்துக்கு கூடுதலாக மின்சாரம் கிடைக்கும் வாய்ப்பு உருவாகி இருக்கிறது. 

அணு உலை - மின் உற்பத்தி

நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் தலா 1000 மெகாவாட் திறன் கொண்ட இரு அணு உலைகள் அமைந்துள்ளன. ரஷ்ய தொழில்நுட்ப உதவியுடன் அமைக்கப்பட்ட இந்த உலைகளுக்கான உதிரிப் பாகங்கள் வாங்கியதில் பெரும் ஊழல் நடந்திருப்பதாக அணு உலைக்கு எதிராக கூட்டமைப்பினர் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றனர். இந்த இரு உலைகளையும் ’இறந்து பிறந்த குழந்தை’ என அணு சக்திக்கு எதிரான மக்கள் கூட்டமைப்பினர் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். 

இந்த உலைகளால் மின்சாரம் தயாரிக்க முடியாது எனவும் அவர்கள் விமர்சனம் செய்து வருகின்றனர். அதற்கேற்ற வகையில் இரு உலைகளும் வருடத்தின் பெரும்பாலான நாட்களில் பழுது காரணமாக அல்லது பராமரிப்பு காரணமாக நிறுத்தி வைக்கப்படுவது வழக்கமாக உள்ளது. கூடங்குளம் அணுஉலையின் முதலாவது அலகில் எரிபொருள் நிரப்பும் பணிகள் நடப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

முதலாவது உலையில் கடந்த சில மாதங்களாக மின் உற்பத்தி நடைபெறாத நிலையில், இரண்டாவது உலை கடந்த ஆகஸ்ட் 2-ம் தேதி நிறுத்தப்பட்டது. உலையின் நீராவி செல்லும் வால்வு பழுது அடைந்ததால் அதனை சரிசெய்வதற்காக மின் உற்பத்தி நிறுத்தப்பட்டதாக தகவல் வெளியானது. கடந்த இரு மாதங்களாக தொழில் நுட்ப வல்லுநர்கள் மூலம் பழுதை சரிசெய்யும் வேலைகள் முழுவீச்சில் மேற்கொள்ளப்பட்டன.

தற்போது பழுது சரிசெய்யப்பட்டதால் 2-வது உலையானது 13-ம் தேதி மாலை முதல் மீண்டும் செயல்படத் தொடங்கி இருக்கிறது. அணுஉலையில் தற்போது மின் உற்பத்தி தொடங்கிய நிலையில் அதனை படிப்படியாக அதிகரிக்க அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். இந்த உலையானது அதன் முழு அளவான 1000 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் போது தமிழகத்தின் பங்காக 562 மெகாவாட் மின்சாரம் கிடைக்கும். 

முதலாவது உலையையும் விரைவில் இயங்கச் செய்தால் கூடுதலாக 562 மெகாவாட் மின்சாரம் தமிழகத்துக்குக் கிடைக்கும் அதன்மூலம் தமிழகத்தில் தற்போது ஏற்பட்டு இருகும் மின் பற்றாக்குறையை சமாளிக்கும் வாய்ப்பு உருவாகும் என்பதால் கூடங்குளம் அணு மின் நிலைய அதிகாரிகள், விரைவாக முதலாவது அணு உலையை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்துள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!