டெல்லி உயர் நீதிமன்றத்தில் ஓ.பி.எஸ், இ.பி.எஸ் மனு நிராகரிப்பு! ஆட்டம் காணும் அ.தி.மு.க?

பொதுச் செயலாளரை கட்சித் தேர்தல்மூலம் தேர்வுசெய்ய வேண்டும். இதுகுறித்து, தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்

அ.தி.மு.க-வில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை ரத்துசெய்யக் கோரி தொடரப்பட்ட வழக்கில், ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோரின் மனுக்கள் டெல்லி உயர் நீதிமன்றத்தில் நிராகரிக்கப்பட்டுள்ளன. இதனால், ஒருங்கிணைப்பாளர்கள் பதவிகுறித்து உடனே முடிவெடுக்கவேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது. 

அதிமுக

முன்னாள் எம்.பி., கே.சி.பழனிசாமி, ''அ.தி.மு.க-வின் அடிப்படைக் கொள்கை என்பதே கட்சியின் அடிப்படை உறுப்பினர்களால் மட்டுமே கட்சியின் பொதுச் செயலாளர் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். ஆனால், அந்த விதியை ரத்துசெய்துவிட்டு, ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர், துணை ஒருங்கிணைப்பாளர் என்ற புதிய பதவிகள் உருவாக்கப்பட்டுள்ளன. இது, அ.தி.மு.க அடிப்படை சட்டதிட்ட விதிகளுக்கு எதிரானது. எனவே, பொதுச் செயலாளரை கட்சித் தேர்தல்மூலம் தேர்வுசெய்ய வேண்டும். இதுகுறித்து, தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவுக்கான விசாரணை நேற்று டெல்லி உயர் நீதிமன்றத்தில் நடந்தது. 

இந்த விசாரணையின்போது, கே.சி.பழனிசாமியின் மனுமீது விசாரணை நடத்தக் கூடாது என்று தாக்கல்செய்திருந்த ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. மேலும், ஒருங்கிணைப்பாளர்கள் தங்களுடைய வாதங்களை மூன்று வாரத்துக்குள் இந்தியத் தேர்தல் ஆணையத்திடம் வழங்க வேண்டும், இந்திய தேர்தல் ஆணையம், நான்கு வாரத்துக்குள் கே.சி.பழனிசாமியின் மனு மீதான முடிவை அறிவிக்க வேண்டும் என டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவால், அ.தி.மு.க வட்டாரத்தில் மீண்டும் ஒரு பதற்றமான சூழ்நிலை நிலவ ஆரம்பித்திருக்கிறது. 

இந்தியத் தேர்தல் ஆணையத்துக்கு என்ன மாதிரியான பதிலை வழங்குவது என்பதுகுறித்து, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஒ.பன்னீர்செல்வம் மற்றும் முக்கிய அமைச்சர்களும் அ.தி.மு.க கட்சி தலைமை அலுவலகத்தில் கூடி விவாதித்துள்ளனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!