வெளியிடப்பட்ட நேரம்: 10:50 (14/09/2018)

கடைசி தொடர்பு:10:50 (14/09/2018)

விருத்தாசலத்தில் லாரிகள் நேருக்கு நேர் மோதி விபத்து - 3 பேர் பலி!

விருத்தாசலத்தில் லாரிகள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில்,  சம்பவ இடத்திலேயே 3 பேர் பலியாகினர்.

சரக்கு வாகனம்

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ள அரசக்குழியில், இன்று அதிகாலை நாமக்கல்லில் இருந்து கோழி ஏற்றிவந்த லாரியும், நெய்வேலியில் இருந்து நிலக்கரி ஏற்றிவந்த லாரியும் நேருக்கு நேர் மோதிக்கொண்டது. இந்த விபத்தில்,  சம்பவ இடத்திலேயே 3 பேர் உயிழந்தனர். 2 பேர் காயமடைந்தனர்.  

அரியலூர் மாவட்டம் கீழப்பழுவூர் கிராமத்தைச்  சேர்ந்த நிலக்கரி லாரி டிரைவர் மகாலிங்கம் (49) சம்பவ  இடத்திலேயே உயிழந்தார். இதேபோல, கோழி ஏற்றிவந்த லாரியில் பயணம்செய்த  குறிஞ்சிப்பாடி பொட்டவெளி கிராமத்தைச் சேர்ந்த பாபு (22), குறிஞ்சிப்பாடியைச் சேர்ந்த பழனிவேல் (42)  ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே இறந்தனர். இதுகுறித்துத் தகவலறிந்து வந்த ஊமங்கலம் போலீஸார் மற்றும் விருத்தாசலம் தீயணைப்புத் துறையினர்,  விபத்தில் படுகாயமடைந்த 2 பேரை மீட்டு, விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர். அங்கு, அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. விபத்துகுறித்து  ஊமங்கலம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர். இந்த விபத்து காரணமாக, கடலூர் - விருத்தாசலம் சாலையில் அதிகாலை சுமார்  ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இந்த விபத்தை நேரில் பார்த்த கொளப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த எலெக்ட்ரீஷியன் சுரேஷ் கூறியதாவது. " நான் அதிகாலையில் மோட்டார் சைக்கிளில் வேலைக்குப்  போய்க்கொண்டிருந்தேன். அப்போது, பயங்கர சத்தம் கேட்டது. நான் உடனே சத்தம் வந்த பகுதிக்குச் சென்று பார்த்தேன்.  இரண்டு லாரிகள் நேருக்கு நேர் மோதி நின்றது. அதில் பயணம் செய்த 3 பேர் உயிரிழந்தும், 2 பேர் படுகாயமடைந்து உயிருக்குப் போராடிக்கொண்டும் இருந்தனர். அவர்களை மீட்கும் பணியில் ஈடுப்பட்டிருந்தோம். அதற்குள் போலீஸார் மற்றும் தீயணைப்புத் துறையினர் வந்துவிட்டனர். அவர்கள், காயமடைந்தவர்களை மீட்டு விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்" என்றார்.