கப்பலில் பயணமாகும் பந்தயக் குதிரைகள் - ஆர்வத்துடன் கண்ட துறைமுக ஊழியர்கள்!

தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் இருந்து, ஒரே சரக்குப் பெட்டகத்தில் 6 பந்தயக் குதிரைகள் நிறுத்தப்பட்டு, சரக்குக் கப்பல் மூலம் இலங்கைக்கு அனுப்பிவைக்கப்பட்டன.

குதிரைகள்

இந்தியாவில் உள்ள துறைமுகங்களில் சிறப்புப் பெற்றது, தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகம். தமிழகத்தின் இரண்டாவது பெரிய துறைமுகமாகும். இந்தியாவில் உள்ள 12 துறைமுகங்களில் கொள்கலன் முனையங்களில் கொச்சி, மும்பை, சென்னை ஆகிய துறைமுகங்களுக்கு அடுத்தபடியாக, 4-வது துறைமுகமாக விளங்கிவருகிறது.

இத்துறைமுகத்தில் இருந்து இலங்கை, சீனா, ஐரோப்பா, அமெரிக்கா ஆகிய பல நாடுகளுக்கு ஏற்றுமதியும், பல நாடுகளில் இருந்து இறக்குமதியும் நடைபெறுகிறது. சரக்குப் பெட்டகம் கையாளுதல், நிலக்கரி இறக்குமதி ஆகியவற்றில் சாதனை படைத்துவருகிறது. இந்நிலையில், சென்னையைச் சேர்ந்த ஒரு தனியார் நிறுவனம், இத்துறைமுகத்தில் இருந்து இலங்கைக்கு 6 பந்தயக் குதிரைகளைக் கப்பல்மூலம் அனுப்பிவைத்துள்ளது.

சென்னையில் இருந்து 2 குதிரைகளும், பெங்களூரில் இருந்து 2 குதிரைகளும், புனேயில் இருந்து 2 குதிரைகள் என மொத்தம் 6 குதிரைகள் தூத்துக்குடிக்கு லாரிகள்மூலம் கொண்டுவரப்பட்டன. பின்னர், கால்நடைப் பராமரிப்புத் துறை மூலம் உடல் பரிசோதனை செய்யப்பட்டது. தொடர்ந்து, சுங்கத்துறையின் சான்றுகள் பெற்ற பின், துறைமுகத்துக்குள் அழைத்துவரப்பட்டன.

இதற்கென பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டிருந்த சரக்குப் பெட்டகத்தில், வரிசையாக 6 குதிரைகளும் ஒன்றன் பின் ஒன்றாக ஏற்றப்பட்டு, சிறிது இடைவெளியில் நிறுத்தி அடைக்கப்பட்டன. பெட்டகத்துக்குள்ளேயே தீவனம், தண்ணீர் ஆகியவை வைக்கப்பட்டிருந்தன. குதிரைகளை சரக்குப்  பெட்டகத்தில் ஏற்றி அடைக்கும் பணி 2 மணி நேரம் வரை நடைபெற்றது.

கடல் கடந்து செல்லும் இந்தியக் குதிரைகளை சரக்குப் பெட்டகத்தில் ஏற்றும்போது துறைமுக ஊழியர்கள், தொழிலாளர்கள் ஆர்வத்துடன் பார்த்துச்சென்றனர். பந்தயத்துக்காக இக்குதிரைகள் அனுப்பிவைக்கப்படுவதாகக் கூறப்படுகிறது. தூத்துக்குடி துறைமுகம் வழியாக இலங்கை, கொழும்புக்குச் சென்ற  'எம்.வி., கேப்நெமோ' என்ற சரக்குக் கப்பலில் ஏற்றி அனுப்பிவைக்கப்பட்டன.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!