வெளியிடப்பட்ட நேரம்: 11:38 (14/09/2018)

கடைசி தொடர்பு:11:38 (14/09/2018)

தமிழகத்தில் 6 மாதங்களில் 1.56 லட்சம் பேரின் ஓட்டுநர் உரிமம் ரத்து!

தமிழகத்தில், இந்த ஆண்டின் முதல் 6 மாதங்களில் மட்டும் 1.56 லட்சம் பேரின் வாகன ஓட்டுநர் உரிமங்கள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

ஓட்டுநர் உரிமம்

செல்போன் பேசியபடியே வாகனம் ஓட்டுதல், மது போதையில் வாகனம் ஓட்டுதல், அதிக அளவிலான பொருள்களை ஏற்றிச்செல்லுதல் உள்ளிட்ட காரணங்களால், கடந்த 6 மாதங்களில் 1.56 லட்சம் பேரின் வாகன ஓட்டுநர் உரிமம் தற்காலிகமாக ரத்துசெய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டில், செல்போன் பேசியபடியே 57,158 பேர் வாகனம் ஓட்டியதால், அவர்களின் உரிமம் தற்காலிகமாக ரத்தானது. ஆனால், இதில் அதிர்ச்சியான தகவல் என்னவென்றால், 2018-ம் ஆண்டு தொடக்கத்தில் முதல் 6 மாதங்களில் மட்டும் 64,105 பேர் செல்போன் பேசியபடியே வாகனம் ஓட்டியதால், அவர்களது உரிமம் தற்காலிகமாக ரத்தாகியுள்ளது. 

இதற்கு அடுத்தபடியாக, அளவுக்கு அதிகமாக சரக்கு ஏற்றிச்சென்றதாலும், மது போதையில் வாகனம் ஓட்டியதாலும், வாகனங்களில்  அதிக சுமை ஏற்றிச்செல்லுதல் மற்றும் அதிவேகமாக வாகனம் ஓட்டியது உள்ளிட்ட காரணங்களால், பெரும்பாலானோரின் உரிமங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதற்கிடையில், விபத்துகளில் ஈடுபட்டுள்ள வாகன ஓட்டுநர்களின்  2,658 லைசென்ஸ்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளது மற்றும் 1,066 பேரின் உரிமங்கள் ரத்தாகியுள்ளது. இதில், அரசுப் பேருந்து ஓட்டுநர்களும் உள்ளடக்கம். 

இது ஒருபுறம் இருக்க, வாகனச் சட்டங்களை மீறுவோரின் உரிமங்களை உடனடியாக ரத்துசெய்யவும், தற்காலிகமாக நிறுத்திவைக்கவும் மென்பொருளில் மாற்றங்களைக் கொண்டுவர நடவடிக்கையை எடுத்துவருகிறது மாநில போக்குவரத்து ஆணையம்.