வெளியிடப்பட்ட நேரம்: 12:52 (14/09/2018)

கடைசி தொடர்பு:12:52 (14/09/2018)

நம்பி நாராயணனுக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்குங்கள்; போலீஸ்மீது நடவடிக்கை எடுங்கள்! - உச்ச நீதிமன்றம் அதிரடி

இஸ்ரோவின் முன்னாள் விஞ்ஞானியான நம்பி நாராயணனுக்கு, ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி

இஸ்ரோ மையத்தில், அப்துல் கலாம் உள்ளிட்ட விஞ்ஞானிகள் பலரும் திட எரிபொருளைப் பயன்படுத்தி ராக்கெட் அனுப்பும் தொழில்நுட்பத்தில் ஆய்வுசெய்தபோது, திரவ எரிபொருள் பயன்படுத்தி ராக்கெட் அனுப்பும் திட்டத்தை வடிவமைத்த முக்கியமான விஞ்ஞானி நம்பி நாராயணன். இவரது தொழில்நுட்பத் திறமையின் காரணமாகவே, தற்போது பி.எஸ்.எல்.வி ரக உள்நாட்டுத் தயாரிப்பு ராக்கெட்டுகள் விண்ணில் செலுத்தப்பட்டுவருகின்றன. 

இந்த நிலையில், அந்நிய நாட்டிடம் பணம் பெற்றுக்கொண்டு ராக்கெட் தொழில்நுட்பம் தொடர்பான ரகசியங்களை விற்பனைசெய்ததாக, நாராயணன் மீது கடந்த 1994-ல் வழக்குத் தொடரப்பட்டது. மாலத்தீவு உளவுப் பிரிவைச் சேர்ந்த மரியம் ரஷீதா, ஃபவுஸியா ஹுசேன் ஆகியோர் மூலமாக ரஷ்யா மற்றும் பாகிஸ்தானுக்கு இந்த ரகசியங்களை விற்பனைசெய்ததாக, 1994 நவம்பர் 30-ம் தேதி, கேரளா போலீஸாரால் கைதுசெய்யப்பட்டார். 

இதன் பின்னர், வழக்கை விசாரித்த நீதிமன்றம், வழக்கை சி.பி.ஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டது. சி.பி.ஐ நடத்திய விசாரணையில், இந்த வழக்குக்கு எந்த அடிப்படை ஆதாரமும் இல்லை என்றும் நம்பி நாராயணன் குற்றமற்றவர் எனவும் தெரிவித்தது. இதையடுத்து, தனது தொழில் திறமையை முடக்கும் வகையிலும், தனக்கும் தன் குடும்பத்தினருக்கும் அவமானத்தை ஏற்படுத்தும் வகையிலும் செயல்பட்ட காவல்துறை உயரதிகாரிகள்மீது நடவடிக்கை எடுக்குமாறும், நஷ்டஈடு வழங்குமாறும் உச்ச நீதிமன்றத்தில் நம்பி நாராயணன் வழக்குத் தொடர்ந்திருந்தார். 

இந்த வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, விஞ்ஞானி நம்பி நாராயணனுக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம், நம்பி நாராயண் மீது தவறான வழக்கைப்பதிவு செய்த காவல் துறையினர் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆணை பிறப்பித்துள்ளது.