வெளியிடப்பட்ட நேரம்: 14:35 (14/09/2018)

கடைசி தொடர்பு:14:35 (14/09/2018)

விமானக் கட்டணத்தைவிட விஞ்சியது!- `ஃப்ளெக்ஸி' கட்டணத்தை ரத்து செய்கிறது ரயில்வே

ரயில்

வருவாயை அதிகரிக்கும் வகையில், ரயில் பயணிகளிடம், ``தட்கல், பிரிமியம் தட்கல், `ஃப்ளெக்ஸி ஃபேர், டைனமிக் பிரைஸ்'' என்று விதவிதமான பெயர்களில் கட்டணம் வசூலித்து வந்தது ரயில்வே நிர்வாகம். மேலும், ``பயணிகளுக்குக் கூடுதல் வசதி, அதிவேக ரயில், நிற்கும் இடம் குறைப்பு'' என்றும் கூடுதல் கட்டணம் நிர்ணயக்கப்பட்டு வந்தது. இந்தக் கட்டணங்கள், விமானக் கட்டணத்தைவிட கூடுதலாக உள்ளது என்று பல ஆண்டுகளாகக் குறைகூறி வந்தனர். குறிப்பாக, 142 ரயில்களில் (ராஜ்தானி - 44 ரயில், சதாப்தி-46 ரயில், தூரந்தோ - 52 ரயில்) ஆகிய ரயில்களில், ``ஃப்ளெக்ஸி ஃபேர்'' என்ற நூதனக் கட்டண வசூல் நடக்கிறது. இந்த ரயில்களில், 40 ரயில்களில், ``ஃப்ளெக்ஸி ஃபேர்'' முறையை ரத்து செய்ய ரயில்வே முடிவு செய்துள்ளது.

ஆசிர்வாதம் ஆச்சாரிஇதுகுறித்து, அகில இந்திய ரயில்வே பயணிகள் வசதிகள் மேம்பாட்டு கமிட்டியின் உறுப்பினர் ஆசீர்வாதம் ஆச்சாரி, ``ஃப்ளெக்ஸி ஃபேர் என்றழைக்கப்படும் இறுதி நேரக் கூடுதல் ரயில் கட்டணம் வசூலிப்பதை 40 எக்ஸ்பிரஸ் ரயில்களில் கைவிட ரயில்வே துறை முடிவு செய்துள்ளது. காரணம், ரயில் கட்டணம் விமானக் கட்டணத்தைவிட அதிகமாகிப் போனதே. இதனால், ரயில் பயணிகள் விமானப் பயணத்துக்கு முன்னுரிமை கொடுத்ததால் ரயில்களை காலி பெட்டிகளோடு ஓட்ட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. 2 ஆண்டுகளுக்கு முன்பு,  இந்த ஃப்ளெக்ஸி ஃபேர் திட்டம் கொண்டு வரப்பட்டபோதே இது வேண்டாம் என்று எடுத்துக் கூறி ரயில்வே துறையுடன் வாதிட்டேன். இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு நான் கூறியது உண்மையென விளங்கியுள்ளது. இந்த முடிவை எடுத்த மத்திய ரயில்வே அமைச்சர் பியூஸ் கோயலுக்கு நன்றி'' என்று கூறினார்.

சேலம் ரயில் பயணி எம்.சி.டி.சங்கர்லால் கூறுகையில், ``சிறப்புக் கட்டணங்களை முழுமையாக ரத்து செய்ய வேண்டும். அப்படியே சிறப்புக் கட்டணம் வசூலித்தால், அதற்கென்று கூடுதல் பெட்டிகள் போட்டு, அதில் அந்தச் சிறப்பு டிக்கெட்டுகளை கொடுக்கலாம். ஏற்கெனவே, சோதனை முறையில் கொண்டு வந்த ரயில் சிறப்புக் கட்டணத்தை 6.9.2016 அன்று அதிகாரபூர்வமாக அறிவித்து நடைமுறைப்படுத்தினார்கள். ஒரு சில ரயில்களில் வேறு வழியில்லாமல் கூடுதல் கட்டண டிக்கெட்டுகளை பயணிகள் எடுக்கத்தான் செய்கிறார்கள். ஆனால், அவர்கள் படும் வேதனைகளை மத்திய அரசு புரிந்துகொள்ள 2 ஆண்டுகளுக்கு மேல் ஆகி இருக்கிறது. பயணிகளிடம் இந்த மாதிரி, கட்டணக் கொள்ளை அடிப்பதை உடனே நிறுத்த வேண்டும். மொத்தமுள்ள 142 ரயில்களில் 40 ரயில்களில் மட்டுமே ஃப்ளெக்ஸி பேர் ரத்தாகிறது. மீதியுள்ள 102 ரயில்களில் ஃப்ளெக்ஸி டிக்கெட் புக் ஆகாமல் இருந்தால், சார்ட் தயாரித்த பிறகும் இருக்கும் ஃப்ளெக்ஸி டிக்கெட்டுகளுக்கு 50 சதவிகிதம் தள்ளுபடி என்றும் ரயில்வே நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. இதை முற்றிலும் ரத்து செய்ய வேண்டும்'' என்று கோரிக்கை வைத்தார்.  

நீங்க எப்படி பீல் பண்றீங்க