வெளியிடப்பட்ட நேரம்: 13:25 (14/09/2018)

கடைசி தொடர்பு:15:08 (14/09/2018)

`அ.தி.மு.க-வின் புதிய பொதுச் செயலாளர் யார்?' - தேர்தல் பிரிவில் எடப்பாடி பழனிசாமியின் சாய்ஸ்

இந்த நிமிடம் வரையில் பா.ஜ.க-வுடன் நாம் நட்புறவில்தான் இருக்கிறோம். அவர்கள் நம்மைக் கழட்டிவிட்டாலும் நமக்குத்தான் பலம்.

`அ.தி.மு.க-வின் புதிய பொதுச் செயலாளர் யார்?' - தேர்தல் பிரிவில் எடப்பாடி பழனிசாமியின் சாய்ஸ்

அ.தி.மு.க-வின் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ள நிலையில், கட்சியின் சீனியர்கள் பலருக்கும் புதிய பதவிகளை வாரியிறைத்துள்ளனர். `தேர்தலில் பா.ஜ.க-வோடு கூட்டணி சேர்வதைப் போன்ற தோற்றத்தைக் காட்டிக் கொண்டே, நம்மை வீழ்த்துவதற்கான வேலைகளில் ஆர்வம் காட்டத் தொடங்கிவிட்டது தி.மு.க' எனக் கொந்தளித்துள்ளனர் அமைச்சர்கள். 

டெல்லி உயர் நீதிமன்றத்தில் அ.தி.மு.க-வின் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளுக்கு எதிராக வழக்கு தொடர்ந்திருந்தார் முன்னாள் எம்.பி கே.சி.பழனிசாமி. இந்த மனுவை விசாரித்த நீதியரசர் காமேஸ்வர ராவ், 'நான்கு வாரத்துக்குள் இந்த வழக்கை விசாரித்து முடிக்க வேண்டும்' என இந்திய தலைமை தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டார். இதை எதிர்த்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர் எடப்பாடி பழனிசாமியும் பன்னீர்செல்வமும். இந்த மனுவை ஏற்க மறுத்த நீதியரசர்கள் ஹிமா கோஹ்லி, ரேகா பாலி, 'தேர்தல் கமி‌ஷன் 4 வாரங்களுக்குள் விசாரித்து முடிவு எடுக்க வேண்டும்; பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி தரப்பினர் எழுத்துபூர்வமான வாதங்களைத் தேர்தல் கமி‌ஷனிடம் 3 வாரங்களுக்குள் தாக்கல் செய்ய வேண்டும்; இந்த வழக்கில் சசிகலாவும் ஒரு தரப்பாகச் சேர்க்கப்பட்டு உள்ளதால், அவரும் தனது தரப்பு வாதங்களைத் தேர்தல் கமி‌ஷனிடம் தாக்கல் செய்ய வேண்டும்'  என உத்தரவிட்டனர். 

இந்நிலையில், அ.தி.மு.க சீனியர்கள் பலருக்கும் கணக்கு வழக்கில்லாமல் பதவிகளை வாரியிறைத்துள்ளனர். அதன்படி, அமைப்புச் செயலாளர்களாக முன்னாள் அமைச்சர் மோகன், முருகையா பாண்டியன் எம்.எல்.ஏ சின்னத்துரை, முன்னாள் மத்திய அமைச்சர் செஞ்சி ராமச்சந்திரன், பரஞ்சோதி ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனர். அக்ரி கிருஷ்ணமூர்த்தி, முன்னாள் அமைச்சர் தாமோதரன், அமைச்சர் ராஜலட்சுமி, ரமணா, சின்னையா எனப் பலரும் பதவிக்கு வந்துள்ளனர். இதில், கவனிக்கப்பட வேண்டிய விஷயம், தேர்தல் பிரிவின் துணைச் செயலாளராக நியமிக்கப்பட்டிருக்கிறார் ராதாபுரம் தொகுதி எம்.எல்.ஏ இன்பதுரை. இதே பிரிவின் மாநிலச் செயலாளர் பொறுப்பில் கட்சியின் சீனியரான பொள்ளாச்சி ஜெயராமன் இருக்கிறார். 

கே.சி.பழனிசாமி" அ.தி.மு.க விதிகளின்படி, பொதுச் செயலாளர் பதவிக்குத் தேர்தல் நடத்தப்பட வேண்டிய சூழல் உருவாகி வருகிறது. இந்த விவகாரத்தில் தேர்தல் ஆணையம் எடுக்கப்போகும் முடிவுக்காகக் காத்திருக்கின்றனர் ஒருங்கிணைப்பாளரும் இணை ஒருங்கிணைப்பாளரும். கழகத்தைப் பொறுத்தவரையில், பொதுச் செயலாளர் பதவி என்பது அதிக அதிகாரம் மிக்கது. இந்தப் பதவியில் பன்னீர்செல்வம் முன்னிறுத்தப்படுவாரா... அல்லது எடப்பாடி பழனிசாமி முன்னிறுத்தப்படுவாரா என்பது போகப் போகத்தான் தெரியும். இப்படியொரு சூழலில் எடப்பாடி பழனிசாமியின் சாய்ஸாக இன்பதுரைக்குப் பதவி வழங்கப்பட்டிருக்கிறது" என விவரித்த அ.தி.மு.க முன்னணி நிர்வாகி ஒருவர், 

``நாடாளுமன்றத் தேர்தலுக்குக் கட்சி தயாராகி வருகிறது. அதற்காகத் தென்மாவட்டங்களை வலுப்படுத்தும் வகையில் முருகையா பாண்டியன், சின்னத்துரை உள்ளிட்ட பலருக்குப் பதவி கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்த ஆண்டு இறுதிக்குள் நாடாளுமன்றத் தேர்தலுக்கான கூட்டணிகள் இறுதி செய்யப்பட்டுவிடும். அதற்குள் கட்சியின் பொதுச் செயலாளர் தேர்தலும் முடிந்துவிடும். ஆனால், குட்கா வழக்கு உட்பட அடுத்தடுத்து புகார்களால் தள்ளாடிக்கொண்டிருக்கிறது இந்த அரசு. ஆனாலும், எதைப் பற்றியும் கவலைப்படாமல் ஆட்சியின் லகானை செலுத்திக்கொண்டு வருகிறார் எடப்பாடி பழனிசாமி.

தொடர்ச்சியான சோதனைகள் குறித்துப் பேசிய முதல்வர் தரப்பும், 'இந்த ஆட்சியை வீழ்த்த வேண்டும் என்றால், இரண்டு காரணங்கள் தேவைப்படுகின்றன.

ஒன்று, சபையில் தீர்மானம் கொண்டு வந்து அகற்றுவது, இரண்டாவது சட்டம் ஒழுங்கு பிரச்னையைக் காட்டிக் கலைப்பது. முதலாவதாக, நம்பிக்கையில்லா தீர்மானத்தில் இந்த அரசு வெற்றி பெற்றுவிட்டது. அடுத்ததாக, தூத்துக்குடி ஸ்டெர்லைட் கலவரத்தைத் தூண்டி சட்டம் ஒழுங்கு பிரச்னையை ஏற்படுத்த முயற்சி செய்தார்கள். அதுவும் பலிக்கவில்லை. எனவேதான், வருமான வரித்துறை சோதனை, தி.மு.க-வைவிட்டு புகார் மேல் புகார் கொடுக்க வைப்பது எனச் செயல்படுகின்றனர். குட்கா வழக்கில் 'சி.பி.ஐ விசாரணை' என்பது மத்திய அரசின் முயற்சியில் நடக்கவில்லை. நீதிமன்றத்தின் கண்காணிப்பில்தான் சி.பி.ஐ விசாரணை நடந்து வருகிறது. இந்தச் சோதனையில் எதுவுமே சிக்கவில்லை. குற்றமே நிரூபிக்கப்படாதபோது, அதற்காக நாம் வினையாற்ற வேண்டிய அவசியமில்லை. இந்த நிமிடம் வரையில் பா.ஜ.க-வுடன் நாம் நட்புறவில்தான் இருக்கிறோம். அவர்கள் நம்மைக் கழட்டிவிட்டாலும் நமக்குத்தான் பலம்' என விவரித்துள்ளனர். இதை அமைச்சர்களும் ஏற்றுக்கொண்டனர்" என்றார் விரிவாக. 

"பா.ஜ.க-வோடு நட்பில் இல்லாததுபோல காட்டிக்கொண்டே மறைமுக காரியங்களில் தி.மு.க ஈடுபட்டு வருகிறது. தம்பிதுரை உள்ளிட்டவர்களும், பா.ஜ.க-வோடு கூட்டணி அமைவதற்காக முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். இதுதொடர்பாகக் கோட்டையில் நடந்த விவாதத்தில் பேசிய சீனியர் அமைச்சர் ஒருவர், 'காங்கிரஸ் கட்சியைப் பல வகைகளில் ஓரம்கட்டும் வேலையைச் செய்து வருகிறது தி.மு.க. தேர்தலில் பா.ஜ.க-வோடு கூட்டணி சேர்வதைப் போன்ற தோற்றத்தைக் காட்டிக்கொண்டே, நம்மை வீழ்த்துவதற்கான வேலைகளில் ஆர்வம் காட்டத் தொடங்கிவிட்டது தி.மு.க. இந்த சித்து விளையாட்டுக்களைப் புரிந்துகொண்டு நாம் செயல்பட வேண்டும். நம்மை பா.ஜ.க புறக்கணித்தால், அரசியல்ரீதியாக நமக்குத்தான் லாபம். நாடாளுமன்றத் தேர்தலில் அதிக இடங்களைத் தி.மு.க கைப்பற்றினால், அதைப் பயன்படுத்திக் கொள்வோம் எனப் பா.ஜ.க தலைமை நினைக்கிறது. ஆனால், நாடாளுமன்றத் தேர்தல் நமக்குத்தான் சாதகமாக இருக்கப்போகிறது' எனக் கொந்தளித்தார். இதையெல்லாம் உணர்ந்துதான், தென்மாவட்டங்களைப் பதவிகளால் பலப்படுத்தியிருக்கிறது அ.தி.மு.க தலைமை" என்கிறார் அ.தி.மு.க தலைமைக் கழக நிர்வாகி ஒருவர்.