`அறிக்கையில் முரண்பாடுகள்...!' - எட்டு வழிச்சாலைக்குத் தடைவிதித்த உயர் நீதிமன்றம் | central government submitted the report regarding for salem to chennai green road project

வெளியிடப்பட்ட நேரம்: 15:10 (14/09/2018)

கடைசி தொடர்பு:15:10 (14/09/2018)

`அறிக்கையில் முரண்பாடுகள்...!' - எட்டு வழிச்சாலைக்குத் தடைவிதித்த உயர் நீதிமன்றம்

சேலம் - சென்னை இடையேயான 8 வழிச் சாலை அமைக்கும் பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளதாக மத்திய அரசு, சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.  மத்திய அரசின் அறிக்கையில் முரண்பாடு இருப்பதாகக் கூறி 8 வழிச்சாலை திட்டத்துக்கு நிலம் கையகப்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. 

சென்னை உயர் நீதிமன்றம்

சேலம் டு சென்னை பசுமைவழிச் சாலைத் திட்டத்தை தடை செய்யக்கோரி பொதுநல வழக்கு, சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்டது. இந்த வழக்கு விசாரணையை நீதிபதிகள், சிவஞானம் மற்றும் பவானி சுப்ராயன் அடங்கிய அமர்வு விசாரணை நடத்தி வருகிறது. முன்னதாக, கல்வராயன் மலையில் 500-க்கும் மேற்பட்ட மரங்கள் வெட்டப்பட்டுள்ளதாகக் கூறி, புகைப்படங்கள் மனுதாரர் தரப்பில் நீதிபதிகள்முன்பு சமர்ப்பிக்கப்பட்டது. 

இந்நிலையில், வழக்கு விசாரணை இன்று நடைபெற்றது. அப்போது, மத்திய அரசு தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அந்த அறிக்கையில் `சென்னை டு சேலம் இடையேயான 8 வழிச் சாலை அமைக்கும் பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. பசுமை வழிச் சாலை திடத்துக்காக நிலம் கையகப்படுத்தும் பணிகளும் 2 வாரக்காலத்துக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. முன்னதாக, 8 வழிச் சாலையை 6 வழிச் சாலையாக மாற்றும் திட்டமும் வரைவு செய்யப்பட்டுள்ளது . அதனால், திட்டத்தை இறுதி செய்யும் வரை 8 வழிச் சாலை அமைக்கும் பணிகள் அனைத்தும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட உள்ளது' என மத்திய அரசு குறிப்பிடப்பட்டுள்ளது. 

சேலம்

அதோடு, `8 வழிச் சாலை அமைக்கச் சுற்றுச்சூழல் ஒப்புதல் பெற மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்த அறிக்கையையும் மத்திய அரசு நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். திட்டத்துக்காக மரங்கள் வெட்டப்பட்ட விவகாரத்தில் வனத்துறை அதிகாரிகளும் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்' என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், மத்திய அரசின் அறிக்கையில் முரண்பாடு இருப்பதாகக் கூறி 8 வழிச்சாலை திட்டத்துக்கு நிலம் கையகப்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் தற்காலிகத் தடை விதித்துள்ளது.