வெளியிடப்பட்ட நேரம்: 14:38 (14/09/2018)

கடைசி தொடர்பு:15:26 (14/09/2018)

`முட்டாள்தனமாகப் பேசுகிறார் கடம்பூர் ராஜு!' - தங்க.தமிழ்ச்செல்வன் காட்டம் 

பொதுச் செயலாளர் தேர்தலில் சசிகலா போட்டியிடுவார். நீங்கள் யாரை வேண்டுமானாலும் நிறுத்திக் கொள்ளுங்கள். தேர்தலை சந்திப்போம்

`முட்டாள்தனமாகப் பேசுகிறார் கடம்பூர் ராஜு!' - தங்க.தமிழ்ச்செல்வன் காட்டம் 

நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னோட்டமாக, கட்சியின் சீனியர்கள் பலருக்கும் பதவிகளை வாரிக் கொடுத்திருக்கின்றனர் ஓ.பன்னீர்செல்வமும் எடப்பாடி பழனிசாமியும். அதேநேரம், `அ.தி.மு.க-வில் இணைவதற்காக முயற்சி செய்துகொண்டிருக்கிறார் தங்க.தமிழ்ச்செல்வன்' எனச் செய்தி மக்கள் தொடர்புத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு அளித்த பேட்டி, தினகரனின் அ.ம.மு.க-வுக்குள் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. 

தங்க.தமிழ்ச்செல்வனிடம் பேசினோம். 

அமைச்சர் கடம்பூர் ராஜு சொல்வது உண்மையா? 

"அதாவது, தண்ணியில்லாத கிணறு ஒன்று இருக்கிறது. 'அந்தக் கிணறு இருக்கும் பகுதி வழியாக இரவு நேரத்தில் சென்றால் விழுந்துவிடுவாய்' என்று சொல்கிறார்கள். விளக்கைப் பிடித்துக்கொண்டு போய் எவனாவது அந்தக் கிணற்றில் விழுவானா? இதில் இவர்களுக்குத் தூது வேறு விட வேண்டுமா... நான் கேட்ட கேள்வி இதுதான்: 'அனைத்து தொகுதியிலும் ஜெயிப்போம்' என அமைச்சர்கள் பேசுகிறார்கள். எங்களிடம் பணம் இல்லை; தொண்டர்கள் செல்வாக்கு இல்லை; பண பலம் இல்லை. உங்களுக்கு சவால்விடுகிறேன். திருப்பரங்குன்றத்திலும் திருவாரூரிலும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் வெற்றிபெறப்போகிறது. இது நடக்கத்தான்  போகிறது. நாங்கள் வெற்றி பெற்ற பிறகு, அ.தி.மு.க-வில் உள்ள 15 காரியக்காரர்கள் விலகிவிட்டு, கட்சியையும் ஆட்சியையும் விட்டுவிட்டு விலகிவிட வேண்டும். ஒருவேளை அவர்கள் (அ.தி.மு.க) வெற்றி பெற்றுவிட்டால், நாங்கள் அனைவரும் உங்களுடன் வந்து இணைந்து விடுகிறோம்' என்றேன். இதற்கு முட்டாள்தனமாகப் பதில் சொல்லக் கூடாது. நான் தூது செல்ல வேண்டிய அவசியம் என்ன வந்துவிட்டது. ஒன்று மட்டும் தெரிகிறது. ஆளும்கட்சிகாரர்களுக்குத் தலைக்கனம் உச்சியில் நின்றுகொண்டிருக்கிறது." 

சரி... அ.தி.மு.க-வின் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளுக்கு செக் வைத்திருக்கிறதே டெல்லி உயர் நீதிமன்றம்? 

சசிகலா"முன்னாள் எம்.பி கே.சி.பி போட்ட வழக்கில் மிகச் சரியாக சொல்லியிருக்கிறார்கள். ஏழு வாரம் அவகாசம் கொடுத்திருக்கிறார்கள். மூன்று வாரத்தில் இந்த 5 பேர் (எடப்பாடி பழனிசாமி தரப்பு) பதில் கொடுக்க வேண்டும். நான்கு வாரத்தில் தேர்தல் ஆணையம் பதில் கொடுக்க வேண்டும். இதுவே இவர்களுக்குப் பெரிய பின்னடைவுதான்." 

ஏழு வார காலம் முடிந்த பிறகு, பொதுச் செயலாளர் பதவிக்கு யார் முன்னிறுத்தப்படுவார்கள்? 

"பொதுச் செயலாளர் பதவிக்கு சசிகலா கேண்டிடேட்டாக நிற்பார். எதற்காக இதை ஆணித்தரமாகச் சொல்கிறேன் என்றால், 2016-ல் பொதுக்குழு கூடி பொதுச் செயலாளர் பதவிக்கு சசிகலாவைத் தேர்வு செய்தனர். இதை எதிர்த்து சசிகலா புஷ்பா எம்.பி, நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அவர் தன்னுடைய மனுவில், '2011-ல் கட்சியைவிட்டு நீக்கப்பட்டவர் சசிகலா. அவர் கட்சியில் இணைந்து ஐந்தாண்டுகள் நிறைவடையவில்லை' எனக் கூறியிருந்தார்.

இந்த வழக்கில், எங்கள் தரப்பில் பதில் மனுவைத் தாக்கல் செய்தார் அவைத்தலைவர் மதுசூதனன். அவர் தன்னுடைய மனுவில், 'மீண்டும் சசிகலாவைச் சேர்க்கும்போது 2011-ல் போட்ட உத்தரவை விடுவித்துவிட்டுத்தான் கட்சிக்குள் சேர்த்தார் பொதுச் செயலாளர் ஜெயலலிதா. எனவே, அவர் கட்சிக்குள் வந்து ஐந்தாண்டுகள் நிறைவடைந்துவிட்டன. பொதுச் செயலாளர் பதவிக்கு அவர் நிற்கலாம்' எனச் சொல்லி, நீதிமன்றத்தில் உத்தரவே வாங்கினார். எனவே, அந்த அடிப்படையில் பொதுச் செயலாளர் தேர்தலில் சசிகலா போட்டியிடுவார். நீங்கள் யாரை வேண்டுமானாலும் நிறுத்திக்கொள்ளுங்கள். தேர்தலை சந்திப்போம்." 

18 எம்.எல்.ஏ வழக்கில் விரைவில் தீர்ப்பு வரவிருக்கிறதே? 

"நல்ல தீர்ப்பாக வரும் என எதிர்பார்க்கிறோம். அப்போது தமிழ்நாட்டையே புரட்டிப்போடக்கூடிய சம்பவங்களும் நடக்கும். அ.தி.மு.க-வில் இருக்கும் 10, 15 தலைகளை வெளியேற்றினால் போதும். ஊழலற்ற ஆட்சியைக் கொண்டு வந்துவிடுவோம்."