`சர்கார்' ஆடியோ விழாவில் ரஜினி பங்கேற்பு? | Rajini to participate in sarkar audio launch

வெளியிடப்பட்ட நேரம்: 16:25 (14/09/2018)

கடைசி தொடர்பு:16:27 (14/09/2018)

`சர்கார்' ஆடியோ விழாவில் ரஜினி பங்கேற்பு?

ரஜினி

ஒரு காலத்தில் ஒரு படத்துக்கு பூஜை போடும்போதே அந்தப் படத்தின் ரிலீஸ் தேதியை முன்கூட்டியே அறிவித்து  விநியோகஸ்தர்களுக்கு ஆனந்த அதிர்ச்சி கொடுப்பது ஏவி.எம் நிறுவனத்தின் வழக்கம். இப்போது விஜய் நடிக்கும் படத்தின் ஷூட்டிங் நடந்துகொண்டிருக்கும் போதே  தீபாவளி சரவெடியாக 'சர்கார்' வெளிவருகிறது என்ற அறிவிப்பை வெளியிட்டது சன்பிக்சர்ஸ். விஜய் நடிக்கும் அனைத்து காட்சிகளும் படமாக்கப்பட்டு முடிந்தன.  தற்போது போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகளைப் பார்த்துப் பார்த்து செதுக்கி வருகிறார் டைரக்டர் ஏ.ஆர்.முருகதாஸ்.

அடுத்த அக்டோபர் மாதம் 'சர்கார்' படத்தின் ஆடியோ விழாவை பிரமாண்டமாக நடத்த திட்டமிட்டு வருகிறது தயாரிப்பு தரப்பு. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஒரே நேரத்தில் விஜய்யின் 'சர்கார்', ரஜினியின் 'பேட்ட' படவேலைகள் நடப்பதால் நிச்சயம் 'சர்கார்' ஆடியோ விழாவுக்கு சிறப்பு விருந்தினராக ரஜினி கலந்துகொண்டு விஜய்யை வாழ்த்துவார் என்று உறுதியாகச் சொல்கிறார்கள். ஏற்கெனவே விஜய் நடித்த 'வில்லு' படத்தையும், அஜித் நடித்த 'ஏகன்' படத்தையும் ஒரே நேரத்தில் தயாரித்தது ஐங்கரன் மூவீஸ். அப்போது நட்சத்திர ஹோட்டலில் நடந்த ஐங்கரன் மூவீஸ் தயாரிப்பாளர் அருண்பாண்டியன் பிறந்தநாள் விழாவில் விஜய்யும், அஜித்தும் குடும்பத்தோடு கலந்துகொண்டு குதூகலித்தனர்.

தமிழ்சினிமாவில் கடும்போட்டியாளர்களாக  இருந்துவரும் விஜய்யும், அஜித்தும் ஒரே விழாவில் கலந்துகொள்ளும்போது ரஜினியும், விஜய்யும் ஏன் 'சர்கார்' விழாவில் கலந்துகொள்ளக்கூடாது என்று கேள்வி எழுப்புகிறது சினிமா வட்டாரம்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க