`அனல்மின் நிலையங்களை மூட வேண்டிய நிலை ஏற்படும்' - பிரதமருக்கு முதல்வர் கடிதம்!

நிலக்கரி பற்றாக்குறையை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்  என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

முதல்வர் கடிதம்

தமிழகத்தில் அறிவிக்கப்படாத மின்வெட்டை கைவிட வேண்டும் என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அண்மையில் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். இதற்குப் பதிலளித்த அமைச்சர் தங்கமணி, மத்திய மின் தொகுப்பிலிருந்து 6,152 மெகாவாட் தமிழகத்துக்கு வர வேண்டியது. ஆனால், 3,334 மெகாவாட் மட்டும்தான் வந்தது. பராமரிப்பு நாள்களின்போது காற்றாலை மின்சாரம் இல்லாமல் போய்விட்டதால், சில இடங்களில் அரைமணி நேரம் மின்சாரம் தடைப்பட்டது என்று விளக்கமளித்தார். இந்த நிலையில், தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பிரதமருக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

அதில், ``தமிழகத்தில் நிலக்கரி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் நிலக்கரி கையிருப்பு குறைந்துள்ளது. தற்போதைய நிலை நீடித்தால் சில அனல்மின் நிலையங்களை மூடும் நிலைமைக்குத் தள்ளப்படுவோம். 3 நாள்களுக்குத் தேவையான, நிலக்கரி மட்டுமே தற்போது கையிருப்பில் உள்ளது. தமிழகத்தில், ஒருநாள் மின் உற்பத்திக்கு 72,000 மெட்ரிக் டன் நிலக்கரி தேவைப்படுகிறது. தமிழகத்தில் நிலவும் பற்றாக்குறைக்கு தீர்வுகாணும் வகையில் நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். மேலும், நிலக்கரி மற்றும் ரயில்வே அமைச்சகம் சார்பில், நாள் ஒன்றுக்கு, 72,000 மெட்ரிக் டன் நிலக்கரியை ஒதுக்கீடு செய்ய வேண்டும்'' என அந்தக் கடித்தத்தில், எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டுள்ளார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!