மோடி ஆட்சிக்கு விரைவில் மக்கள் முடிவுகட்டுவார்கள் - தங்கபாலு தாக்கு! | Congress leader thanga balu slams bjp

வெளியிடப்பட்ட நேரம்: 18:50 (14/09/2018)

கடைசி தொடர்பு:18:50 (14/09/2018)

மோடி ஆட்சிக்கு விரைவில் மக்கள் முடிவுகட்டுவார்கள் - தங்கபாலு தாக்கு!

தங்கபாலு

ரபேல் போர் விமானம் வாங்கியதில் ஊழல் நடந்துள்ளதாக இந்தியா முழுவதும் காங்கிரஸார் போராட்டம் நடத்தி வரும் நிலையில் சேலம் மாவட்டத்திலும் இந்தப் போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டம் நடைபெறுவதற்கு முன்னதாக, காமராஜர் சிலையிலிருந்து கலெக்டர் அலுவலகத்துக்கு ஊர்வலமாக வந்து போராட்டத்தில் ஈடுபட்டார்கள். சேலம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த இந்தப் போராட்டத்துக்கு காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் தமிழக காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் மாநிலத் தலைவர் தங்கபாலு தலைமை தாங்கினார்.

இந்தப் போராட்டத்தில் பேசிய தங்கபாலு, ''காங்கிரஸ் ஆட்சியில் ரபேல் போர் விமானம் ஒன்றின் விலை 526 கோடி, மோடி வாங்கிய ஒரு ரபேல் விமானத்தின் விலை 1,670 கோடி. மொத்தமாக விமானம் வாங்கியதில் மக்கள் வரி பணம் 41,205 கோடி நஷ்டம். மோடி அரசாங்கமும் பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனும் ரபேல் போர் விமான விலை விவகாரத்தில் மக்களுக்கும் நாடாளுமன்றத்துக்கும் தவறான தகவல் கொடுத்திருக்கிறார்கள்.

விமானங்கள் வாங்கும்போது விலை தொடர்பான விபரம் வெளிப்படையாக இல்லை. அரசாங்கம் பின்பற்ற வேண்டிய ராணுவ தளவாடங்கள் வாங்குவதற்கான நெறிமுறைகள் முறையாகப் பின்பற்றவில்லை. பாதுகாப்புக்கான நாடாளுமன்றக் குழுவிடம் முன்னதாகப் பெற வேண்டிய ஒப்புதல் பெறப்படவில்லை. பொதுத்துறை நிறுவனமான ஹெச்.ஏ.எல்லை விலக்கிவிட்டு போர் விமானங்களை உற்பத்தி செய்வதில் துளிகூட அனுபவமில்லாத பிரதமர் மோடியின் நெருக்கமான தொழில் நண்பரின் நிறுவனத்துக்கு சுமார் 36,000 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது.

இப்படி மோடியின் தலைமையில் செயல்படும் இந்தப் பாரதிய ஜனதா ஆட்சியில் ஊழல் மலிந்துவிட்டது. விரைவில் மக்கள் இந்த ஆட்சியை வீட்டுக்கு அனுப்பி ஒரு முடுவு கட்டுவார்கள்'' என்றார்.


[X] Close

[X] Close