வெளியிடப்பட்ட நேரம்: 22:19 (14/09/2018)

கடைசி தொடர்பு:10:37 (15/09/2018)

21 வயதில் துணை பொது மேலாளர் - சாதித்த கோவை மாற்றுத்திறனாளி இளைஞர்..!

இந்திய அரசுப் பணியில் முதல் இடம் பிடித்து, கோவை மாற்றுத்திறனாளி இளைஞர் சாதனை படைத்துள்ளார்.

ராம்குமார்

கோவை, காளப்பட்டி பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி கருப்புசாமி. இவரின் இரண்டாவது மகன் ராம்குமார். பிறவியிலேயே பார்வைத்திறனை இழந்தவர். ஆனால், துளியும் நம்பிக்கையை இழக்காத தன்னம்பிக்கை இளைஞன். பல்வேறு போராட்டங்களுக்கு நடுவே, விடாமுயற்சியுடன் படித்து பி.காம் பட்டம் பெற்றார். இதையடுத்து, எம்.காம் படித்துக்கொண்டிருக்கும்போதே, வரதராஜபுரத்தில் உள்ள தேசிய பார்வையற்றோர் இணையத்தில், டாக்டர் அம்பேத்கர் கல்வி நிலையத்தின் சார்பில் போட்டித் தேர்வுகளுக்கு இலவச சிறப்பு பயிற்சி பெற்றுவந்தார். அதிலும், பல்வேறு கட்ட முயற்சிக்குப் பிறகு, தற்போது இந்திய அரசின் பொதுத்துறை காப்பீட்டு நிறுவனத்தின் தேர்வு எழுதி, அதில் வெற்றியும் பெற்று துணை  பொது மேலாளராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இதுகுறித்து ராம்குமார்,  ``25 பணி இடத்துக்கு, நாடு முழுவதும் லட்சக்கணக்கானோர் தேர்வு எழுதினர். அதில் இருந்து 75 பேரை தேர்ந்தெடுத்து, குரூப் டிஸ்கசன், பர்ஸ்னெல் இன்டர்வ்யூ எடுத்தனர். அதில் இருந்து 25 பேரை ஷார்ட் லிஸ்ட் செய்தனர். நாடு முழுவதுமே, இதில் மாற்றுத்திறனாளிகளுக்கு ஒரு இடம்தான் ஒதுக்கீடு செய்தனர். அந்த இடத்துக்குத்தான் நான் தேர்வு செய்யப்பட்டுள்ளேன். நாட்டில் முதல்முறையாக, அதுவும் 21 வயதில் துணை பொது மேலாளராகப் பொறுப்பேற்க உள்ளது நான்தான். இது மாற்றுத்திறனாளிகளுக்குக் கிடைத்த வெற்றி" என்றார் மகிழ்ச்சி பொங்க. ராம்குமாரின் இந்த வெற்றி கருப்புசாமியின் வீட்டில், சந்தோஷத்துடன் கூடிய நம்பிக்கை ஒளியை ஏற்றிவைத்திருக்கிறது.