குண்டும், குழியுமான சாலை - பள்ளிக்குச் செல்ல முடியாமல் பரிதவிக்கும் மாற்றுத்திறனாளி மாணவர்கள்! | blind school students are affected by damaged road

வெளியிடப்பட்ட நேரம்: 22:40 (14/09/2018)

கடைசி தொடர்பு:22:40 (14/09/2018)

குண்டும், குழியுமான சாலை - பள்ளிக்குச் செல்ல முடியாமல் பரிதவிக்கும் மாற்றுத்திறனாளி மாணவர்கள்!

தஞ்சாவூர் பார்வை திறன் குறையுடையோருக்கான அரசுப் பள்ளிக்குச் செல்லும் சாலை சேதமடைந்து குண்டும் குழியுமாக இருப்பதால் அதில் நடக்கும் பார்வையற்ற மாற்றுத்திறனாளி மாணவர்கள் அடிக்கடி கீழே விழுந்து விடுவதோடு காயங்களும் ஏற்படுகிறது. சாலையை உடனே சீரமைக்க வேண்டும் எனப் பல முறை கோரிக்கை வைத்தும் எந்த நடவடிக்கையும் இல்லை என வேதனை தெரிவிக்கிறார்கள் மாணவர்களின் பெற்றோர்கள்.

தஞ்சாவூரில் பெரிய கோயில் மேம்பாலத்தின் அருகே வலதுபுறத்தில் உள்ளடங்கியவாறு இருக்கிறது பார்வைத் திறன் குறையுடையோருக்கான அரசுப் பள்ளி. இங்கு பார்வையற்ற மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகள் 150 பேர் வரை படிக்கின்றனர். மேலும் காது கேளாதோர் பள்ளி, ஆதரவற்றோர் குழந்தைகள் இல்லம் மற்றும் அரசு மேல்நிலைப் பள்ளி ஆகியவையும் இந்தப் பகுதியில் உள்ளன. இங்கு செல்லும் சாலை குண்டும் குழியுமாக மிகவும் மோசமாக இருக்கிறது. இந்தப் பாதையில்தான் கண் பார்வையற்ற மாற்றுத்திறனாளி மாணவர்கள்  நடந்து செல்ல வேண்டியிருப்பதால், குண்டும் குழியுமாக உள்ள சாலையில் அடிக்கடி விழுந்து காயங்கள் ஏற்படுவதாக வேதனை தெரிவிக்கிறார்கள் மாணவர்கள். 

இது குறித்து ஆசிரியர் ஒருவரிடம் பேசினோம், ``பார்வைத்திறன் குறையுடையோருக்கான பள்ளியில் 1-ம் வகுப்பில் தொடங்கி 12-ம் வகுப்பு வரை 150 மாணவர்கள் வரை படிக்கிறார்கள். பெரும்பாலும் இங்கு தங்கிப் படிக்கும் மாணவர்கள்தான் அதிகம். ஒரு சில மாணவர்களை மட்டும் பெற்றோரே வந்து விட்டு பள்ளி முடிந்தவுடன் அழைத்துச் செல்வார்கள். மேலும், விடுமுறை நாள்களில் மாணவர்கள் வீட்டுக்குச் சென்று விட்டுத் திரும்புவதும் வழக்கம். எந்தக் குறையும் இல்லாத மனிதர்களே சாலைகள் குண்டும் குழியுமாக சரியில்லாமல் இருந்தால் தடுமாறி பல்வேறு இன்னல்களுக்கு ஆளாவார்கள். பலர் விழுந்து காயம் அடையும் சம்பவங்களும் நிறைய உண்டு. நிலைமை இப்படியிருக்க இவர்களோ பார்வையற்ற மாற்றுத் திறனாளி மாணவர்கள். பாவம் என்ன செய்வார்கள். 

கடந்த இரண்டு வாரத்துக்கு முன்பு எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர் ஊருக்குப் போய்விட்டு திரும்பி வந்தார். துணைக்கு அவளுடன் யாரும் வரவில்லை. கொஞ்சம் வேகமாக வந்தவள் சாலையின் பெயர்ந்து கிடந்த கல் தடுக்கி கீழே விழுந்தவளுக்குக் கையில் அடிபட்டுவிட்டது. பல மாணவர்களுக்கு இதுபோல் நடந்திருக்கிறது. இதனால் மாணவர்களின் பெற்றோர்களுக்கும் எங்களால் பதில் சொல்ல முடியவில்லை. மேலும் பள்ளிக்கு எதிரிலேயே மேம்பாலம் சிக்னல் இருந்தும் பல மாதங்களாக வேலை செய்யவில்லை. இந்த இடத்தில் வேகத்தடை அமைக்க வேண்டும் எனப் பலர் கோரிக்கை வைத்தும் எந்தப் பலனும் இல்லை. இதனால் மாணவர்கள் படுகிற துயரத்துக்கு அளவே இல்லை. பெரிய அசம்பாவிதங்கள் ஏற்படும் முன் இந்தச் சாலையை உடனே சீரமைக்க வேண்டும்" என்றார்.

சுதீஷ் என்ற மாணவரின் அப்பா திலகர் என்பவர் பேசுகையில், ``இந்தப் பள்ளியில் தான் என் மகன் படிக்கிறான். அவனுக்கு பார்வைக் குறைபாடு உள்ளது. நான் தினமும் கொண்டு வந்து விட்டு அழைத்துச் செல்வேன் எப்போதும் அவன் கையைப் பிடித்துத்தான் அழைத்துச் செல்வேன். ஒரு நாள் அப்பா நானே வாரேன் எனச் சொன்னவன் வேகமாக ஓடினான். இதில் சாலையில் உள்ள குழியில் கால் வைத்து விட்டதால் தடுமாறி விழுந்து விட்டான். சாலை சரியாக இருந்தால் இதுபோல் நடந்திருக்காது" என்றார். இது குறித்து கலெக்டர் அண்ணாதுரையிடம் எடுத்துக் கூறினோம். அனைத்தையும் பொறுமையாகக் கேட்டவர் நாளைக்கே அதிகாரிகளை அனுப்பிப் பார்க்க சொல்வதோடு உடனே சாலை அமைக்கவும் ஏற்பாடு செய்கிறேன் என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க