`உன் கணவர் எங்கே?' - பெண்ணை மிரட்டிய போலீஸ்; தர்ணாவில் ஈடுபட்ட குடும்பத்தினர்!

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி காந்தி நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஆராவமுதன். இவர் நெய்வேலி என்.எல்.சி நிறுவனத்தில் ஒப்பந்ததாரராக கடந்த 30 ஆண்டுகளாக உள்ளார். இவருக்கும், மானடிக்குப்பம் பகுதியைச் சேர்ந்த வடிவேல் என்பவருக்கும் கொடுக்கல் வாங்கல் பிரச்னையில் முன்விரோதம் இருந்து வந்தது. இந்த நிலையில், இன்று காலையில் ஆராவமுதன் மனைவி யசோதா, மகன் குமார், மருமகள் சங்கீதா ஆகிய 3 பேரும் கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் வந்தனர். பின்னர் அவர்கள் அலுவலக வாயில் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தர்ணாவில் ஆராவமுதன் குடும்பத்தினர்

இது குறித்து கேட்டதற்கு அவர்கள் கூறியதாவது, ``என் கணவர் ஆராவமுதன் கடந்த 3-ம் தேதி நெய்வேலி வட்டம் 19-ல் உள்ள போஸ்ட் ஆபீஸ் அருகில் நின்று பேசிக்கொண்டிருந்தவரை வடிவேல் ஆள் வைத்து அவரை கடத்திச் சென்றுவிட்டார். பின்னர் அவருக்குச் சொந்தமான பெட்ரோல் பங்கில் வைத்து அடித்துத் துன்புறுத்தியுள்ளார். இதுகுறித்து நெய்வேலி போலீஸில் புகார் கொடுத்தும் எவ்விதமான நடவடிக்கையும் இல்லை. தொடர்ந்து என் மகன் குமாரை 11-ம் தேதி போலீஸார் நெய்வேலி காவல் நிலையம் அழைத்துச் சென்று அடித்துள்ளனர். தொடர்ந்து இன்று காலை நெய்வேலி சப் இன்ஸ்பெக்டர் குமார் என் வீட்டுக்கு வந்து என்னை அசிங்கமாகத் திட்டி, `உன் கணவர் எங்கே' எனக் கேட்டு வீட்டில் உள்ள பொருள்களை உடைத்து என்னையும் தாக்கினார்.

எனவே, கந்துவட்டி கேட்டு எங்களைத் துன்புறுத்தும் வடிவேலுக்கு ஆதரவாகச் செயல்படும் நெய்வேலி டி.எஸ்.பி (பொறுப்பு) சுந்தரவடிவேல், நெய்வேலி டவுன்ஷிப் இன்ஸ்பெக்டர் ரவீந்திர ராஜ், சப் இன்ஸ்பெக்டர் குமார் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் நாங்கள் குடும்பத்துடன் தற்கொலை செய்துகொள்ள அனுமதிக்க வேண்டும்" இவ்வாறு கூறினார்கள். கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் கந்துவட்டி கொடுமையினால் 3 பேர் குடும்பத்துடன் தற்கொலை செய்துகொள்ள அனுமதிகேட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!