கோஷ்டி பூசல் காரணமா? - அரசு நிகழ்ச்சியைப் புறக்கணித்த அ.தி.மு.க எம்.பி-க்கள்

கடலூரில், சுதந்திரப் போராட்ட வீரர் எஸ்.எஸ்.ராமசாமி படையாச்சியாருக்கு மணிமண்டபம் கட்ட தமிழக அரசு முடிவுசெய்துள்ளது. இதையடுத்து, கடலூர் மஞ்சகுப்பம் மைதானத்தில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு இடம் தேர்வுசெய்யப்பட்டது. இன்று காலை, ரூ 2.15 கோடியில் முழு உருவ வெண்கலச் சிலையுடன்கூடிய நினைவு மண்டபம் அமைப்பதற்கான அடிக்கல்லை சென்னையில் இருந்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சிமூலம் தொடங்கிவைத்தார்.

அமைச்சர்கள்

இந்த நிகழ்ச்சியில், அமைச்சர்கள் எம்.சி சம்பத், சி.வி சண்முகம், கே.சி.வீரமணி, இரா.துரைக்கண்ணு, கே.பி. அன்பழகன், எம்.பி-க்கள் ஏழுமலை, பாரதிகுமார், எம்.எல்.ஏ., குமரகுரு, மாவட்ட கலெக்டர் அன்புச்செல்வன் உட்பட பலரும் கலந்துகொண்டனர். ஆனால், கடலூர் எம்.பி., அருண்மொழித்தேவன், சிதம்பரம் எம்.பி., சந்திரகாசி, எம்.எல்.ஏ-க்கள் பண்ருட்டி சத்யா பன்னீர்செல்வம், சிதம்பரம் பாண்டியன், காட்டுமன்னார்கோயில் முருகுமாறன் ஆகியோர் கலந்துகொள்ளாமல் புறக்கணித்தனர். கடலூரில், சுதந்திரப் போராட்ட வீரருக்கு மணி மண்டபம் அமைக்க நடந்த அரசு நிகழ்ச்சியில், தமிழக அமைச்சர்கள் 5 பேர் மற்றும் தொகுதிக்கு சம்பந்தமில்லாத எம்.பி-க்கள், எம்.எல்.ஏ., ஆகியோர் கலந்துகொண்ட நிலையில், கடலூர் எம்.பி., அருண்மொழித்தேவன், மற்றும் சிதம்பரம் எம்.பி., சந்திரகாசி, எம்.எல்.ஏ-க்கள் பாண்டியன், முருகுமாறன், சத்யாபன்னீர்செல்வம் ஆகியோர் கலந்துகொள்ளாமல் புறக்கணித்த சம்பவம், கட்சியினர் இடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதற்குக் காரணம், கோஷ்டி பூசல் என்கின்றனர் கடலூர் அ.தி.மு.க-வினர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!