வெளியிடப்பட்ட நேரம்: 23:52 (14/09/2018)

கடைசி தொடர்பு:15:34 (15/09/2018)

”அரசாங்கப் பணம் என் பணம் போலத்தான்” - மருத்துவரிடம் எகிறிய தி.மு.க எம்.எல்.ஏ.

”அரசாங்கப் பணம் என் பணம் போலத்தான்” என்று அரசு மருத்துவரிடம் அதிரடிகாட்டிய தி.மு.க எம்.எல்.ஏ-வின் ஆடியோ, சமூக வலைதளத்தில் வைரலாகிவருகிறது.

நிலமில்லாத ஏழை மக்களுக்குக் கறவைமாடுகள் மற்றும் ஆடுகள் வழங்கும் திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்திவருகிறது. அந்தத் திட்டத்தில் தனது கட்சிக்காரர்களை ஏன் சேர்க்கவில்லை என்று ரிஷிவந்தியம் தொகுதி எம்.எல்.ஏ., வசந்தம் கார்த்திகேயன், கால்நடை மருத்துவ அதிகாரி ஒருவருடன் கோபமாக உரையாடும் செல்போன் ஆடியோ, தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. சமூக வலைதளத்தில் வைரலாகிவரும் அந்த 10.17 நிமிட செல்போன் ஆடியோ உரையாடல் இதுதான்.

வசந்தம் கார்த்திகேயன்

எம்.எல்.ஏ: “அந்த மாடு குடுக்கற பிரச்னை என்ன சார் அது. லிஸ்ட்டில் தி.மு.க காரங்க பேரே இல்லைனு சொல்றாங்க. எங்க ஆளுங்களுக்கும் குடுக்கனும்ல சார்.”

டாக்டர்: “தெரியவில்லை சார். தேர்வுக் குழு உறுப்பினர் போல அந்த ஊர் வி.ஏ.ஓ யாருக்கெல்லாம் நிலம் இல்லையென்று தருகிறாரோ.....”

எம்.எல்.ஏ : (குறுக்கிட்டு) “அந்த எல்லா விபரமும் எனக்குத் தெரியும். எல்லா இடத்துலயும் சம்பந்தப்பட்ட டாக்டர்கள் எனக்கு போன் செய்து உங்க லிஸ்ட் எது இருந்தாலும் குடுங்க சார் அதையும் சேர்த்துக்கறோம்னு சொல்லி, எங்ககிட்ட லிஸ்ட் வாங்கி சேர்த்துதான் குடுக்கறாங்க.”

டாக்டர் : “அன்னைக்கு அங்கேயே தி.மு.க காரங்க, அ.தி.மு.க காரங்க எல்லாருமே வந்தாங்க சார்...”

எம்.எல்.ஏ: “நான்தானே எம்.எல்.ஏ? என்னிடம் லிஸ்ட் கேட்டிருக்கணும்ல... யாருக்குத் தரணும்... என்ன பொசிஷன்னு என்னிடம் கேட்டிருக்கணும்ல?

டாக்டர் : “அன்னைக்கு தி.மு.க, அ.தி.மு.க எல்லாருமே கரை வேட்டிலாம் கட்டிக்கிட்டு அன்னைக்கு எல்லாருமே வந்தாங்க சார்...”

எம்.எல்.ஏ : ”லாரி நிறைய கலெக்டெர் ஆபீஸ்ல போயி எங்க ஆளுங்கல்லாம் நிக்கப்போறாங்க.”

டாக்டர் : “சரிங்க சார் அதனால என்ன இருக்கு? நிற்கட்டும் சார்...

எம்.எல்.ஏ : “உங்க உயரதிகாரிங்ககிட்ட பேச முடியுது. உங்ககிட்ட பேச முடியல.”

டாக்டர் : “சார் அப்படிலாம் ஒண்ணும் இல்லை. நான் சொல்றதைக் கொஞ்சம் கேட்கறீங்களா? உண்மையிலே, அந்த ஊரில் நான் பிறந்து வளந்தவன் கிடையாது. என் சொந்தக்காரங்க யாருமே இல்லை. அன்றைய தினம் வி.ஏ.வோ, ஊர் முக்கிய பிரமுகர்கள்...”

எம்.எல்.ஏ (குறுக்கிட்டு): “நான் கேட்பது, மற்ற ஊரில் இருந்தெல்லாம் டாக்டர்கள் எனக்கு போன் செய்து, சார் இப்படி ஒரு ஸ்கீம் வந்திருக்குது. தேர்வுசெய்றோம், இப்படிலாம் நடக்குதுனு என்கிட்ட சொல்றாங்க. எம்.எல்.ஏ என்கிற முறையில், நீங்க எனக்கு தகவல் தெரிவித்திருக்கணும்தானே?

டாக்டர்: “சார், நீங்கள் பெரிய ஆள். உங்ககிட்ட நான் பேசுவது சரியாக இருக்காது. எங்க துணை இயக்குநர் உங்ககிட்ட பேசுவார்னு நினைச்சுட்டிருந்தேன் சார்.”

எம்.எல்.ஏ : ”ஏன் நீங்க சொல்லக் கூடாதா என்ன ?”

டாக்டர் : “அப்படி இல்லை சார். அது முறையா இருக்குமானு தெரியலை. எங்க மேலதிகாரி சொன்னால்தான் சரியா இருக்கும்னு நினைச்சுட்டேன் சார்.”

எம்.எல்.ஏ: “கீழப்பாடில அண்ணாமலைனு ஒருத்தர் இருக்காரு. அவருகிட்ட பேசி, அவரு குடுக்கற லிஸ்ட்டை வாங்கி வி.ஏ.ஓ கிட்ட சர்ட்டிஃபிகேட் வாங்கி அதுல சேருங்க.”

டாக்டர் : “சார்... போன வாரமே ஆபீஸ்ல லிஸ்ட் கொடுத்துட்டேன் சார்.”

எம்.எல்.ஏ : “உங்க விளக்கம் எல்லாம் எனக்கு தேவை இல்லை டாக்டர்.”

டாக்டர் : “சார், நான் சொல்வதையும் கேளுங்கள் சார் கொஞ்சம்.”

எம்.எல்.ஏ: “நீ சரியா செய்திருந்தால் நான் கேட்டிருப்பேன். நீதான் சரியா செய்யலையே. எனக்குத் தகவல் சொல்லலையே. நாளைக்கு காலைல எல்லோரும் சாலை மறியல்ல உட்காருவாங்க. கலெக்டரெல்லாம் வரட்டும். நடவடிக்கை எடுத்தப்புறம் அடுத்த கட்டத்தைப் பார்ப்போம்”

டாக்டர் : ”சார், தாராளமா சந்தோஷமா செய்யுங்க சார் நீங்க. தேர்வுக் குழுவுல என்னுடைய பங்கு எதுவும் இல்லை. அவங்க போட்டுக் குடுத்த தீர்மானக் குழு லிஸ்ட்டை எங்கள் ஆபீஸில் நான் கொடுத்துட்டேன். அதுக்குமேல நீங்க செய்யுங்க சார். நீங்க நினைத்தால் எல்லாத்தையும் மாத்தலாம் சார்”

எம்.எல்.ஏ : ”கீழப்பாடில அண்ணாமலைனு ஒருத்தர் இருக்காரு. அவருக்கு போன் பண்ணி என்ன பிரச்னை. ஏன் இது பிரச்னையாகிறது என்று விசாரிங்க.”

டாக்டர்: சரி சார். ஆனா, இன்னைக்கு உங்ககிட்ட வர்றவங்க அன்னைக்கே என்னிடம் தகுதியானவங்க விடுபட்டுட்டாங்கன்னு சொல்லியிருக்கலாமே சார்... ”

என்று பேசிக்கொண்டிருக்கும்போது, டென்ஷனாகிறார் எம்.எல்.ஏ. “நான் தான எம்.எல்.ஏ, எங்கிட்டதான வந்து சொல்லுவாங்க. மறுத்து மறுத்து விளக்கம் சொல்லிட்டு இருக்காத புரியுதா. ஊருல பிரச்னை வருதுன்னு சொல்லிட்டிருக்கேன் நீ என்னவோ விளக்கம் சொல்லிக்கிட்டிருக்க. ஒரு பிரச்னை சொல்றேன். சம்பந்தப்பட்டவங்களைக் கூப்பிட்டு, ஏன் சார் விடுபட்டது? தகுதியில்லை என்றால்தான் பட்டியலில் இருந்து நீக்கியிருப்பார்கள். என்ன பிரச்னைனுதானே நீ கேட்கணும்...”

டாக்டர் (டென்ஷனுடன்) : ”நான் என் சொந்தப் பணத்தைக் கொடுப்பதுபோல பேசறீங்க. இது அரசுப் பணம் சார்.

எம்.எல்.ஏ : ”என் பணம் போலத்தான் அது. அரசாங்கப் பணம் என்பது என்னுடைய பணம் போலத்தான். அரசாங்கத்தின் பிரதிநிதி நான் புரியுதா?”

டாக்டர் : “சார் என்னுடைய கடமையை நான் செஞ்சுட்டேன். என் மேலதிகாரிங்ககிட்ட பேசுங்க சார் நீங்க.''

எம்.எல்.ஏ : “நீ காசு வாங்கிட்டு கொடுத்துடுவ. நான் எதுவும் கேட்கக் கூடாதா?“

டாக்டர் : ”ஒரு ரூபாய் நான் காசு வாங்கியிருந்தால் என்னை காரித் துப்புங்க. செருப்பால் அடிங்க. அடுத்தவங்க காசுக்கு ஆசைப்படுபவன் இல்லை நான்.”

எம்.எல்.ஏ : ”ஒரு ஆளுக்கு 5 ஆயிரம் ரூபாய் வாங்கியிருக்கீங்களாமே நீங்க?”

டாக்டர் : “அதை நீங்க நிரூபிச்சிட்டீங்கன்னா, இந்த வேலையிலேயே நான் இல்லை. யாருக்கெல்லாம் நிலம் இல்லை என்று வி.ஏ.ஓ கொடுத்தாரோ அவர்களுக்கு மட்டும்தான் கொடுத்தோம். நீங்க சொல்லி யாராவது சொன்னால்தான் உண்டு. அப்படி இல்லாம யாராவது ஒருத்தவங்க நான் காசு வாங்குனதா சொல்லட்டும், நான் செத்தே போயிடறேன். 2012ல் இருந்து நேர்மையா, நாணயமா கொடுத்துக்கிட்டு வர்றேன். சிபிஐ விசாரணைகூட வரட்டும். அதுக்காக நீங்க பொதுவா மரியாதை இல்லாம பேசுறது... வாயா போயானு பேசறதை எல்லாம் நீங்கள் வேறு யாருகிட்டையாவது வச்சிக்கங்க.”

எம்.எல்.ஏ : ”யோவ்... நீ பப்ளிக் சர்வன்ட் யா... பப்ளிக்கு வேலை செய்யவேண்டியது உன்னுடைய கடமை. உன்னைக் கண்காணிக்கிறது என் வேலை.”

டாக்டர் : ”தாராளமா கண்காணிங்க சார். என்னுடைய கடமை என்னவோ அதை நான் சரியா செய்துட்டேன்.”

எம்.எல்.ஏ : “சரி உன் மேலதிகாரி நம்பரை கொடு. அவர்கிட்ட நான் பேசிக்கிறேன்”

டாக்டர் : “5 நிமிடங்கள் கழித்து போன் பண்ணுங்கள். இந்த செல்லில்தான் இருக்கிறது எடுத்துத் தருகிறேன்” என்பதோடு அந்த உரையாடல் முடிகிறது.

திமுக

இதுகுறித்துப் பேச, தி.மு.க எம்.எல்.ஏ வசந்தம் கார்த்திகேயனைத் தொடர்புகொண்டோம். “அந்த டாக்டர், பெரும்பாலான நேரத்துல போதையில்தான் இருப்பாராம். அதேபோல, இந்த ஆடு திட்டத்துக்காக வந்த பெண் ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கும் அவர் மீது இருக்கிறது. சீட்டு மோசடி, இப்படிப் பல பிரச்னைகள் அவர்மீது உண்டு. அவரு யாருனுகூட எனக்குத் தெரியாது. கீழப்பாடில இருந்து எனக்குப் போன்செய்த மக்கள் தகுதியானவங்களைப் பட்டியலில் சேர்க்கவில்லை என்று புகார் சொன்னார்கள். தகுதி வாய்ந்த அனைத்து பயனாளிகளுக்கும் கொடுக்கலாம் என்றுதான் அரசு சொல்கிறது. அதுக்காகத்தான் அவருக்கு நான் போன் பண்ணேன். அதுக்குத்தான், அவரு அது உங்க பணமானு கேட்கிறார். அரசாங்கப் பணம் என் சொந்தப் பணம் போலத்தான். அது தவறாக செலவு செய்யக் கூடாது என்று நினைப்பதுதான் மக்கள் பிரதிநிதியான என் கடமை. எம்.எல்.ஏ-க்கள் புரோட்டாக்கால் படி ஆட்சியர் அந்தஸ்தில் வருகிறார்கள். அந்த டாக்டர்தான் போதையில் தேவையில்லாத வார்த்தைகளை எல்லாம் பயன்படுத்திப் பேசினார். உள்நோக்கத்தோடு என்னிடம் பேசியதைப் பதிவுசெய்து வெளியிட்டிருக்கிறார்” என்றார்.

கால்நடை மருத்துவர் முருகுவைத் தொடர்புகொண்டு, எம்.எல்.ஏ கூறிய குற்றச்சாட்டுகள்குறித்து கேட்டோம். “அவர் சொல்வது எல்லாம் உண்மை இல்லை என்பது ஊருக்கு மட்டும் இல்லை, அவருக்கே தெரியும். ஆடியோ வெளியாகிவிட்ட கோபத்தில் அவர் அப்படிப் பேசுகிறார். கட்சிக்காரர்களுக்குக் கொடுக்கவில்லை என்ற கோபத்தில் நான் பணம் வாங்கிவிட்டேன் என்கிறார். சம்பந்தப்பட்ட பகுதிகளுக்குச் சென்று விசாரித்தால் தெரியும். நான் எப்படி நேர்மையுடன் செயல்பட்டேன் என்று. இங்கு மட்டும் எந்த ஊரில் கொடுத்தாலும் போன் பண்ணி இப்படியே செய்வதோடு ஒருமையில் நீ, வா... போ... அப்படின்னுதான் பேசுவார். புழுவைக்கூட தொடர்ந்து குத்திக்கொண்டே இருந்தால், ஒரு கட்டத்தில் அது தனது எதிர்ப்பைக் காட்டும் சார். நாமெல்லாம் மனிதர்கள்தான். எவ்வளவு அவமரியாதையைத்தான் பொறுத்துக்கொள்வது? என் மன வலி தாங்காமல்தான் அந்த ஆடியோவை எங்கள் சங்கத்தில் இருக்கும் மற்ற நண்பர்களுக்கு அனுப்பினேன். அவர்களில் யாரோதான் அதை வெளியிட்டுவிட்டார்கள்” என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க