ராமேஸ்வர கடல் எல்லைப் பாதுகாப்புக்குக் கூடுதல் கப்பல்..!

 பாக் நீரிணை கடலோரப் பகுதி கண்காணிப்புப் பணிக்காக, கூடுதல் ரோந்துக் கப்பல் மண்டபம் கடலோரக் காவல்படை பிரிவில் இணைக்கப்பட்டது.

பாக் நீரிணை மற்றும் மன்னார் வளைகுடா கடலோரப் பகுதிகளில், அன்னியர் ஊடுருவல் தடுப்பு கண்காணிப்புப் பணிக்காக, கூடுதல் ரோந்துக் கப்பல் மண்டபம் கடலோரக் காவல்படை பிரிவில் இணைக்கப்பட்டது.

பாக் நீரிணைப் பகுதியான தனுஷ்கோடி முதல் வேதாரண்யம் வரை, மன்னார் வளைகுடா கடலோரப் பகுதியான தனுஷ்கோடி முதல் கீழக்கரை வரையிலும் உள்ள கடலோரப் பகுதிகள், மண்டபத்தில் உள்ள இந்திய கடலோரக் காவல் படையினரின் கண்காணிப்பில் இருந்து வருகிறது. இந்த கடலோரப் பகுதிகளில் உள்ள மீனவர்களின் பாதுகாப்பு, கடல் எல்லை உடுருவல் தடுப்பு, கடலோரப் பகுதிகளின் சுற்றுச்சூழலைப் பாதுகாத்தல் போன்ற பணிகளில், மண்டபம் கடலோரக் காவல்படை தீவிரமாக ஈடுபட்டுவருகிறது. இதற்கென இங்கு கடல் மற்றும் கரைப்பகுதிகளில் செல்லும் ஹோவர் கிராஃப்ட் கப்பல்கள் 5, ஆழம் குறைவான பகுதிகளில் செல்லும் வகையில் ரோந்து கப்பல்கள் 2 தற்போது ஈடுபடுத்தப்பட்டுவருகின்றன.

மண்டபம் கடலோரக் காவல்படை நிலையத்திற்கு வந்த கூடுதல் கப்பல்

இந்நிலையில், பாக் நீரிணைப் பகுதியில் ரோந்துப் பணியை அதிகரிக்கும் வகையில், மேலும் ஒரு ரோந்துக் கப்பல் இன்று மண்டபம் கடலோரக் காவல்படை முகாமிற்கு வழங்கப்பட்டது. 27 மீட்டர் நீளமும், 7 மீட்டர் அகலமும் கொண்ட இந்த ரோந்துக் கப்பலில், விரைவாக செயலாற்றக்கூடிய இயந்திரத் துப்பாக்கி, ரேடார் கருவி மற்றும் வான்வெளித் தகவல் தொழில்நுட்பக் கருவிகள் உள்ளிட்ட வசதிகள் உள்ளன. மணிக்கு 40 முதல் 45 கடல் மைல் வேகத்தில் செல்லக்கூடிய இந்தக் கப்பல், வேதாரண்யம் - கீழக்கரை இடையிலான கடலோரப் பகுதிகளின் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளது.

கடலோரக் காவல்படை ரோந்து கப்பல்

 2017-ம் ஆண்டு ஜூலை 6-ம் தேதி முதல், இந்திய கடலோரக் காவல்படையில் இயங்கிவரும் இந்த ரோந்துக் கப்பல், இதுவரை காரைக்கால் கடலோரப் பகுதி கண்காணிப்பில் ஈடுபட்டுவந்தது. தற்போது, பாக் நீரிணைப் பகுதியின் கண்காணிப்பை வலுப்படுத்துவதற்காக, மண்டபம் கடலோரக் காவல்படையில் இணைக்கப்பட்டுள்ளது. இதற்கென, காரைக்காலில் இருந்து மண்டபத்துக்கு வந்த இந்த ரோந்துக் கப்பலுக்கு மண்டபம் கடலோரக் காவல்படை அதிகாரி வெங்கடேசன் தலைமையில், கடலோரக் காவல்படையினர் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!