வெளியிடப்பட்ட நேரம்: 06:10 (15/09/2018)

கடைசி தொடர்பு:08:00 (15/09/2018)

ஆன்லைன் டெண்டருக்குப் பதில் நேரடி டெண்டர் கொடுக்கப்பட்டது ஏன்? - முதல்வருக்கு மு.க.ஸ்டாலின் கேள்வி

'ஆன்லைன் டெண்டருக்குப் பதிலாக நெடுஞ்சாலைத் துறையின் பல்வேறு டெண்டர்கள் நேரடியாக பெறப்பட்டுள்ளது' என்று எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். 

மு.க.ஸ்டாலின்

ஆன்லைன் டெண்டர்களுக்குப் பதிலாக நேரடி டெண்டர்கள் விடப்பட்டது தொடர்பாக மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில், 'நெடுஞ்சாலைத் துறையில் இணையவழி டெண்டர் இருப்பதால் முறைகேடு நடக்க வாய்ப்பே இல்லை' என்ற முதலமைச்சர் இப்போது, ஆன்லைனைத் தவிர்த்துவிட்டு, டெண்டர்களை நேரடியாகப் பெறுவது அதிர்ச்சியளிக்கிறது.

தமிழக நெடுஞ்சாலைகள் துறையில் உள்ள சென்னை பராமரிப்பு மற்றும் கட்டுமான வட்டார அலுவலகத்தில் 70 கோடி ரூபாய்க்கு மேல் உள்ள 03.09.2018-ம் தேதியிட்ட டெண்டரும், இதே வட்டார அலுவலகத்தில் 100 கோடி ரூபாய்க்கும் அதிகமான 21.08.2018 -ம் தேதியிட்ட டெண்டரும், சேலம் மாவட்டத்தில் உள்ள நெடுஞ்சாலைத் துறை வட்டார அலுவலகத்தில் 140 கோடி ரூபாய்க்கும் மேற்பட்ட மதிப்புள்ள 20.08.2018-ம் தேதியிட்ட டெண்டரும் ஆன்லைனில் பெறப்படாமல், நேரடியாக டெண்டர் படிவங்கள் கொடுக்கப்பட்டு, அவை பூர்த்தி செய்யப்பட்ட பிறகு நேரடியாகவே நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளால் பெறப்படுகிறது.

ஊழலின் ஊற்றுக்கண் முதலமைச்சரின் மாவட்டத்தில் உள்ள நெடுஞ்சாலை அலுவலகத்திலிருந்தே துவங்கி, தமிழகம் முழுவதும் பரவி, துர்நாற்றம் வீசும் விதத்தில் பாய்ந்தோடிக்கொண்டிருப்பதை இந்த முறைகேடு வெளிப்படுத்தியுள்ளது.

தனது சம்பந்தி பங்குதாரராக இருக்கும் நிறுவனங்களுக்கு 3,120 கோடி ரூபாய்க்கு மேல் டெண்டர்களைக் கொடுத்து, ஊழலின் முகத்துவாரமாகப் பதவியிலிருக்கும் முதலமைச்சர், தன் கீழ் உள்ள லஞ்ச ஊழல் தடுப்புத் துறையை வைத்து மகனுக்கு ஒப்பந்தம் கொடுப்பதிலோ, சம்பந்திக்கு ஒப்பந்தம் கொடுப்பதிலோ என்ன தவறு இருக்கிறது? என்று வாதாட வைக்கிறார். உறவினர்களுக்கு டெண்டர்களை வழங்கக் கூடாது; கான்ட்ராக்டுகளை வழங்குவதில் மிக உயர்ந்த நெறிமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும். மோசடி மற்றும் ஊழல்களில் ஈடுபடக் கூடாது. ஒப்பந்தங்களைப் பெறுவதற்கு ஊழல் நடவடிக்கைகள், மோசடி நடவடிக்கைகள், கூட்டுச்சதி நடவடிக்கைகள், அதிகார துஷ்பிரயோகம் செய்து நிர்பந்தம் செய்யும் நடவடிக்கைகள் போன்றவற்றில் உலக வங்கி நிதியுதவி பெறுவோர் ஈடுபடக் கூடாது என்ற உலக வங்கியின் ஊழல் எதிர்ப்பு விதிகளை எல்லாம் மீறி தனது மகன், சம்பந்தி இருக்கும் நிறுவனங்களுக்கு சகட்டு மேனிக்கு உலக வங்கி நிதியுதவியில் உள்ள டெண்டர்களைக் கொடுத்து ஊழல் புரிந்துவருகிறார்.

உலக வங்கியின் ஊழல் எதிர்ப்பு விதிகளைக் கடைப்பிடிக்காவிட்டால், தமிழகத்துக்குக் கிடைக்கும் நிதியுதவியே கிடைக்காமல் போய் விடும் என்பது தெரிந்தும், தனது உறவினர்களுக்காக பொது வாழ்வில் நேர்மையைத் தொலைத்துவிட்டு தடுமாறும் ஒரு முதலமைச்சரின் அவல நிலைமை, தமிழகத்துக்கு ஏற்பட்டுள்ள மிக மோசமான தலைகுனிவு.

இதனால், தமிழகத்துக்கு உலக வங்கி அளிக்கும் நிதியுதவி நிறுத்தப்பட்டு, ஒட்டுமொத்த வளர்ச்சியே நிலைகுலைந்துபோகும் மிகப்பெரிய ஆபத்தில் தமிழகத்தைக் கொண்டுவந்து நிறுத்தியிருக்கும் எடப்பாடி பழனிசாமியை யாரும் மன்னிக்க மாட்டார்கள்.

ஏற்கெனவே, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது, ஊழல் வழக்கு விசாரணையை லஞ்ச ஊழல் மற்றும் கண்காணிப்புத் துறை நடத்தி வருகிறது. அந்த விசாரணையில் உள்ள குளறுபடிகளைச் சுட்டிக்காட்டி, திராவிட முன்னேற்றக் கழகம் தொடர்ந்த வழக்கு, உயர் நீதிமன்றத்தின் விசாரணையில் இருக்கிறது. இப்படியொரு சூழலில்கூட இன்னும் தன் பொறுப்பில் உள்ள நெடுஞ்சாலைத்துறையில், 310 கோடி ரூபாய்க்கும் மேற்பட்ட டெண்டர்களை ஆன்லைனுக்குப் பதில் நேரடியாகப் பெற்றுக்கொண்டு - தங்களுக்கு கப்பம் கட்டும் நிறுவனத்திற்கோ, தன் உறவினர்களின் நிறுவனங்களுக்கோ டெண்டர்களைக் கொடுப்பதற்கான ஊழல் சித்து விளையாட்டுகளில் ஈடுபட்டுள்ளார் முதலமைச்சர் என்பது சகித்துக்கொள்ள முடியாத சாபக்கேடு. ஆட்சியைக் காப்பாற்றிக்கொள்ள “கரன்ஸி”களைக் குவிப்பதில் மட்டுமே கண்ணும் கருத்துமாக இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி என்பது இந்தத் தில்லு முல்லுகள் மூலம் மேலும் உறுதியாகிறது.

சேலம் மாவட்டத்தில் உள்ள நெடுஞ்சாலைத்துறை வட்டார அலுவலகம் முதல், தமிழகத்தில் உள்ள எந்த அலுவலகத்திலும் டெண்டர்களை நேரடியாகப் பெறுவது, ஊழல் செய்வதற்குத்தான் வழி வகுக்கும் என்பதால், நெடுஞ்சாலைத்துறையில் டெண்டர்களை நேரடியாகப் பெறும் முறையை உடனடியாகக் கைவிட்டு, இணைய வழி மூலமே டெண்டர்களைப் பெற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

இப்போது வெளியிடப்பட்டுள்ள சேலம் மற்றும் சென்னை வட்டார அலுவலகங்களின் 310 கோடி மதிப்புள்ள டெண்டர் அறிவிக்கைகளையும் ரத்துசெய்துவிட்டு, இணைய வழியிலேயே டெண்டர்கள் பெறப்படும் என்ற அறிவிப்பை உடனடியாக வெளியிட வேண்டும் என்றும், அதற்கு மாறாக இந்த டெண்டர் ஊழல்களை ஊக்குவிக்க அதிகாரிகள் துணைபோவார்கள் என்றால், அவர்கள் அனைவரும் ஏதாவதொரு கட்டத்தில் சட்டத்துக்கு பதில் சொல்லவேண்டிய கட்டாயமான நிலை ஏற்பட்டே தீரும் என்றும் எச்சரிக்க விரும்புகிறேன்' என்று குறிப்பிட்டுள்ளார்.